|
அண்டை நாட்டிற்கு விருந்துக்கு வந்திருந்தான் சேதிநாட்டு மன்னன். விருந்தளித்த அண்டை நாட்டு மன்னன், எங்கள் நாட்டில் மக்கள் அனைவரும் என்னைப் போல சிறந்த அறிவாளிகள். உங்கள் நாட்டிலும் அப்படித்தானே? என்று கர்வமாகக் கேட்டான். அவர்கள் அறிவாளிகளா என்று எனக்குத் தெரியாது. நீங்களே நேரில் வந்து சோதித்தால் தான் உண்மை புரியும் என்றார் சேதி மன்னர். அதன்படி அண்டை நாட்டு மன்னனும் சேதி நாட்டு எல்லையை அடைந்தான். வழியில் கலப்பையுடன் ஒரு விவசாயி செல்வதைக் கண்ட அவன் குதிரையை விட்டு இறங்கினான். தன் முன் நிற்பவர் யாரோ மன்னர் என்பதை அறிந்த விவசாயி பணிவோடு வணங்கினார். அவரிடம், என் கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் முடியுமா? ஒளியிலேயே சிறந்தது எது? என்றான் மன்னன்.
மன்னா! இதோ வானில் தெரிகிறதே... அந்த சூரிய ஒளி தான், என்றார் விவசாயி. பரவாயில்லையே... பாமரனாக இருந்தாலும் சரியாகச் சொல்லி விட்டீரே! என்றான் மன்னன். சற்று பொறுங்கள் மன்னா! என் பதில் இன்னும் முடியவில்லை. பொதுவாக சூரியஒளி தான் சிறந்தது என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் ஒளியில் சிறந்தது அறிவொளி தான். சூரிய ஒளியில் பொருள்கள் மட்டுமே தெரியும். பார்வை இல்லாதவனுக்கு அந்த ஒளி உதவுவதில்லை. ஆனால் அறிவொளி உள்ளவனின் மனதில் தெளிவு குடியிருக்கும். அறிவு இருந்தால் நல்லது, கெட்டது அனைத்தும் விளங்கும். அறிவின் பெருமையை யாராலும் அளக்க முடியாது என்றார் விவசாயி. மன்னன் இந்த பதில் கேட்டு மகிழ்ந்தான். சேதிநாட்டு அரண்மனைக்கு வந்த அவன், சேதி மன்னரே! நானே அறிவாளி என்று கர்வம் கொண்டிருந்தேன். உங்கள் நாட்டு விவசாயி என் மனதை உழுது பண்படுத்தி விட்டார் என்று சொல்லி வணங்கினான். |
|
|
|