|
ஒரு குருகுலத்தில் ஆச்சார்யர் தமது சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். மனு ஸ்மிருதியில் ஒரு வாக்கியம்; பலவாந் இந்த்ரியக்ராமோ வித்வாம்ஸம் அபி கர்ஸதி! இதற்கு, இந்த்ரியம் பலம் வாய்ந்தது என்று பொருள். அது எல்லா வித்வான்களையும் இழுக்கும் சக்தி கொண்டது. சாஸ்த்ரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களும், இந்த்ரியர்களிடம் தோற்று, தகாத காரியங்களைச் செய்வர் என்கிறார்கள் என்றார் அவர். இவ்வாக்கியத்தைக் கூறிய ஆச்சார்யர், கூடவே அதை மறுக்கவும் செய்தார். மனு ஸ்மிருதியில் இச் சுலோகம் தவறாக எழுதப்பட்டுள்ளது. இந்த்ரியங்கள் அவ்வளவு பலம் வாய்ந்தவை கிடையாது. அது சாமான்யர்களையும் அறிவிலிகளையும் மட்டும்தான் பிடித்திழுக்கும். இந்த்ரியங்களை அடக்கி ஆளும் மஹான்களை இழுப்பதில்லை. அவர்கள் தாம் கற்ற வேதத்தால் இந்த்ரியங்களை அடக்கி விடுவார்கள். இந்த இடத்தில் சாஸ்த்ரம் பொய்த்து விட்டது. மனு ஸ்மிருதியின் இச்சுலோகத்தை.
பலவாந் இந்த்ரியக்ராமோ வித்வாம்ஸம்
ந அபி கர்ஸதி என நானே உதாரணமாக இருந்து மாற்றிக் காண்பிக்கிறேன் என்று ந காரத்தைச் சேர்த்து சிஷ்யர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். சிஷ்யர்களும் அவ்வாறே அச்சுலோகத்தை மனப்பாடம் பண்ணினார்கள். இதைக் கேள்வியுற்ற மற்ற ஆச்சார்யர்கள். இது என்ன புதுப் பாடமாக உள்ளதே! இவருக்கு ஏன் இந்த விபரீத புத்தி?. எனப் பேசிக் கொண்டனர். சாஸ்த்ரத்தை மாற்றிச் சொல்லிக் கொடுத்து சிஷ்யர்களை பலமுறை உரக்கச் சொல்லுமாறு கட்டளையிட்டார் ஆச்சார்யர். அன்றிரவு குடிலுக்குள் நித்திரையில் ஆழ்ந்தார் ஆச்சார்யர். அப்போது அவருக்கு ஒரு கனவு. அது, அழகான இளம் பெண் ஒருத்தி தங்கக் குடத்தை சுமந்தவாறு இவரை நோக்கி வருகிறாள். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்த அவர் இதென்ன துர்ஸ்வப்னமாக உள்ளதே. மஹானாகிய என்னை நோக்கி ஒரு இளம்பெண் குடத்தை சுமந்து கொண்டு வருவது தவறு ஆயிற்றே. இப்படி ஒரு கனவை நான் என்றைக்கும் கண்டதில்லையே என்று அவர் மனம் அதைப் பற்றியே நினைத்தப்படி இருந்தது. இதனால் ஆச்சார்யருக்கு உறக்கம் வரவில்லை.
அன்றிரவு முழுவதும் தூங்காமல் இதையே நினைத்திருந்ததால் விடிந்ததுகூடத் தெரியவில்லை ஆச்சார்யருக்கு. தூக்கம் தெளிந்து குடிலிலிருந்து வெளியே வந்து மரத்தடியில் அமர்ந்தார். அப்போது கனவினில் கண்ட இளம்பெண் குடத்தை சுமந்தவாறு நிஜமாகவே வருகிறாள். அதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்துவிட்டார் குரு. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அப்பெண் குடிலுக்குள் போய் உட்புறம் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டாள். ஆசார்யர் பதைபதைத்துப் போனார். சிஷ்யர்கள் வரும் நேரமாயிற்றே! ஓடிப் போய் கதவைத் தட்டினார். பிரயோஜனமில்லை. கதவை அப்பெண் திறக்கவேயில்லை. சிஷ்யர்கள் தம்மைத் தவறாக நினைப்பார்களே என்று பயந்து குடிலுக்கு மேல் கூரை மீது ஏறினார். ஓலைகளை நீக்கி உள்ளே பார்த்தார். அங்கே, அப்பெண் ஓய்யாரமாகப் படுத்திருந்த அழகில் தம்மை மறந்து அப்பெண்ணை ரசித்துக் கொண்டிருந்தார் ஆச்சார்யர். சிஷ்யர்கள் வேத பாடசாலைக்கு வந்தனர். முன் தினம் ஆச்சார்யர் சொல்லிக் கொடுத்த,
பலவாந் இந்த்ரியக்ராமோ வித்வாம்ஸம் ந அபி கர்ஸதி
என்ற மனு ஸ்மிருதி சுலோகத்தை உரக்கச் சொன்னார்கள். அதைக் கேட்க கேட்க, கூரை மீதிருந்த ஆச்சார்யருக்கு கர்ண கடூரமாக இருந்தது. வேண்டாம்.... வேண்டாம் என்று கத்தினார். ஆச்சார்யரின் குரல் கேட்டு சிஷ்யர்கள் கூரை மீது பார்த்தனர். குருவே! கூரை மீது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றனர். நான் இங்கு என்ன செய்கிறேன் என்பதை பிறகு சொல்கிறேன். நான் நேற்று சொல்லிக் கொடுத்த பாடத்தைத் திருத்திக் கொள்ளுங்கள்.
பலவாந் இந்த்ரியக்ராமோ வித்வாம்ஸம் அபி கர்ஸதி என்று சொல்லுங்கள் என்றார்.
ந அபி கர்ஸதி என்றுதானே சொல்லிக் கொடுத்தீர்கள் என்றனர் சிஷ்யர்கள். இல்லை... இல்லை.... வித்வாந் ஸமபி கர்ஸதி கர்ஸதி கர்ஸத்யேவா இந்த்ரியங்கள் எவ்வளவு பெரிய ஞானிகளையும் வித்வான்களையும் இழுக்கும் என்று கத்திச் சொன்னபோது நிலை தடுமாறி, கூரையை பிய்த்துக்கொண்டு உள்ளே விழுந்தார் ஆச்சார்யர். வாசற்கதவு திறந்தே இருந்தது. அங்கே ஒய்யாரமாகப் படுத்திருந்த அந்த யவன சுந்தரியைக் காணவில்லை. யார் அந்தப் பெண்? சாஸ்த்ரமே பெண்ணாக உருக்கொண்டு வந்து நம்மைத் திருத்தியதோ? என எண்ணினார். எது உண்டோ, அதையே சாஸ்த்ரம் சொல்கிறது. இல்லாததைச் சொல்வதில்லை. வேதத்தை நன்கு அத்யயனம் பண்ணி அதில் சொல்லப்பட்டதை நன்கு புத்தியினால் ஆராய்ந்து எழுதப்பட்டதே ஸ்மிருதி என உணர்ந்தார் ஆச்சார்யர். |
|
|
|