|
பகவானிடத்தில் மனித உறவுகள் வாயிலாக பக்தி செலுத்துவது உயர்ந்தது. அதில் தோழமை பாவனையில் சிறப்புற்று விளங்கிய அர்ச்சுனன் ஒருமுறை ஸ்ரீகிருஷணரிடம் கேட்டான். கிருஷ்ணா, இந்த பூவுலகில் என்னைவிடச் சிறந்த சிவபக்தன் யாராவது இருக்க முடியுமா? எனது பக்தியையும் கடும் தவத்தையும் வீரத்தையும் மெச்சி சிவபெருமானே எனக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்துள்ளதே இதற்குச் சான்று அல்லவா? என்று கேட்டான். கிருஷ்ணர் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னார். அர்ச்சுனா, இந்தச் சந்தேகத்தை சிவபெருமானிடமே கேட்டுவிடுவோம். நாளைக் காலை கயிலாயம் செல்வோம் வா, எனது யோக மாயாசக்தியால் உன்னை நான் அங்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். மறுநாள் விடியற்காலையில், வெள்ளிப் பனிமலையின் மீது உதிக்கின்ற செங்கதிர் ஒளி படர்ந்து பரவி பசுமை புல்வெளியில் பனிபடர்ந்து பரவி கயிலாயம் பொன்மயமாக ஜொலிக்கிறது. அப்போது கிருஷ்ணரும் அர்ச்சுனனும் சிவபெருமானை வணங்கினர்.
அப்போது சிவபெருமான் வா கிருஷ்ணா, நான் கூறியபடி நீ அர்ச்சுனனைத் தவமியற்ற வைத்தாய், நீ கேட்டுக்கொண்டபடி அவனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிவிட்டேன் என்று கிருஷ்ணரிடம் கூறினார். அர்ச்சுனன் வியப்போடு! கிருஷ்ணா, எனக்கு சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அருள நீதான் காரணமா? எனக்குத் தெரியாமல் போயிற்றே! அறியாமல் நான் கூறியதற்கு என்னை மன்னித்துவிடு என்று வேண்டினார். அப்போது, சிவபெருமான் நந்திதேவரை அழைத்து வந்தார்! கிருஷ்ணரிடம், கிருஷ்ணா, இன்னும் ஓர் அதிசயம் அர்ச்சுனனுக்காகக் காத்திருக்கிறது. நந்திதேவரே, அழைத்து திவ்ய புஷ்பாஞ்சலி தோட்டத்திற்கு இவர்களை அழைத்து சென்று காட்டுங்கள் என்று கட்டளையிட்டார். நந்திதேவரும் சிவபெருமான் கட்டளைஏற்றுக்கொண்டு நந்திதேவர் புஷ்பாஞ்சலி தோட்டத்தை அர்ச்சுனனுக்குக் காண்பித்தார். கிருஷ்ணர் ஒன்றும் அறியாதவர் போல் அவன் பின்னே தொடர்ந்தார்.
நந்திதேவர் அர்ச்சுனனிடம் அர்ச்சுனா, பூவுலகில் பக்தர்கள் பூஜித்து அர்ச்சிக்கும் வில்வங்கள், மலர்கள்யாவும் கயிலாயம் சேர்ந்துவிடும். அவரவர் அர்ச்சனைகளுக்கேற்ப பல்வேறு அளவுகளில் ஆங்காங்கே குவியலாக இருப்பதைப் பார். இவற்றை இறைவன் தனது திருக்கண்களால் நோக்கி அர்ச்சித்தவர்களுக்கு அருள்புரிவார். அர்ச்சுனா, இதோ, நீங்கள் பூஜை செய்த பூக்கள். இரு கைகள் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன பார் என்றார். அப்போது தூரத்தில் புஷ்பங்களாலான பெரிய மலையைக் கண்டு அர்ச்சுனன் வியப்படைகிறான். அர்ச்சுனன் நந்திதேவரே பார்த்து, நந்திதேவரே, பெரிய மலை போன்று குவிந்திருக்கின்ற இந்த புஷ்பமலைக்கு உரியவர் யார்? அவர் எவ்வளவு உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்! என்று வினாவினார். அதற்கு நந்திதேவர் அவர் வேறு யாருமல்ல, உன் அன்பு சகோதரர் பீமனே, இப்பூவுலகில் அவருக்கு இணையான சிவபக்தி வேறு யாருக்கும் இல்லை என்பதை அம்மையப்பன் அறிவார்கள் என்று கூறினார்.
அர்ச்சுனன் அதை நம்பாமல் சிரித்தபடி யோசித்தான். நந்திதேவரே, சிரித்ததற்காக மன்னியுங்கள், பீமன் அண்ணா எங்களுக்காக நாள் முழுவதும் பல்வேறு வேலைகள் செய்துவிட்டு இரவு முழுவதும் காவலும் காப்பார். அவருக்குப் பூஜை செய்யவும் அர்ச்சிக்கவும் நேரம் எது? என்று கேட்டார். பீமன் வேலைகள் செய்யும்போது நடக்கும்போதும் எல்லாக் காலத்திலும் நமசிவாய என்று எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பார். எங்கேனும் மலர்த் தோட்டத்தையோ வில்வ மரத்தையோ கண்டால் உடனே சர்வம் புஷ்பம் சிவார்ப்பணம் என்று சொல்லி மானசீகமாக பரமனுக்கு அர்ப்பணம் செய்வார். அவ்விதம் வந்து சேர்ந்தவையே இந்த மலர்களும் வில்வ தளங்களும் என்று கூறினார் நந்திதேவர். மானசீகமாக அர்ப்பணம் செய்வது இந்த அளவிற்குப் பலன் தருமா நந்திதேவரே என்று வியப்புடன் அர்ச்சுனன் கேட்டார்.
அதற்கு நந்திதேவர் அர்ச்சுனா, பூஜையில் மானசீகமே சிறந்தது. அது சாத்வீகமானது. எளிதில் செய்யக் கூடியது. இறைவன் ஒருவரது மனதைத்தான் பார்க்கிறார். அவன் புறத்தில் என்ன செய்கிறான் என்பது கணக்கல்ல என்று கூறினார். அர்ச்சுனனும், கிருஷ்ணனும் சிவபெருமானையும் பார்வதியையும் வணங்கி நின்றனர். அப்போது, சிவபெருமாஅர்ச்சுனா, சாட்சாத் நாராயணனே பாண்டவர்களாகிய உங்களின் நண்பனாக கிருஷ்ணர் வடிவில் இருக்கிறார். ஏனெனில் நீங்கள் தர்மத்தை உயிராகப் போற்றுகிறீர்கள். தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு கிருஷ்ணன் இருப்பான். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் வெற்றியும் நிச்சயம் என்று கூறினார். அர்ச்சுனன் கைகூப்பி கிருஷ்ணரை பார்த்து, பரந்தாமா, உன்னையும் உனது செயல்களையும் யார் அறிய முடியும்? என் ஆணவத்தை அகற்றி சிவதரிசனம் கிடைக்கச் செய்ததோடு எனக்கு மனத்தெளிவையும் <உண்டாக்கி விட்டீர்கள். உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் என்று கூறினார். பீமனின் பக்தியால் மகிழ்ந்து இறைவன் லிங்கவடிவில் வெளிப்பட்ட இடம் மகாராஷ்டிராவில் உள்ள நாகேசம். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான இதனைப் பக்தர்கள் இப்போதும் பூஜித்து, பரமனின் அருளைப் பெற்று வருகிறார்கள். |
|
|
|