|
அது 1907- ஆம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லற பக்தரான கிரீஷ்பாபு. அன்னை ஸ்ரீசாரதாதேவியை ஸ்ரீதுர்கா பூஜையில் கலந்து கொள்ள வேண்டி அழைத்தார். அதற்காக அன்னை பலராம்பாபு வீட்டில் ஒரு மாத காலம் தங்கினார். அப்போது ஒரு நாள். வீட்டின் பிரதான வாயிலின் வலப்பக்கம் அன்னையின் அன்பு மைந்தன் லாட்டு (சுவாமி அத்புதானந்தர்) அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் அன்பு மேலிட அன்னை, மகனே லாட்டு, எப்படியப்பா இருக்கிறாய்? என்று கேட்டார். லாட்டு மகராஜ் இதை எதிர் பார்க்கவில்லை. அவர் உணர்ச்சி வசப்பட்டு அம்மா, புனிதம் வாய்ந்த பெண்மணியான நீங்கள் வாயிலுக்கு அருகே என்னைப் போன்ற மனிதனிடம் பேசலாமா? தயவு செய்து நீங்கள் உங்கள் அறைக்குச் செல்லுங்கள். நான் என்றென்றும் உங்களின் சேவகன். நீங்கள் அங்கிருந்து என்னைக் கூப்பிடுங்கள். நான் உடனே அங்கு ஓடோடி வருவேன் என்றார்.
இதைக் கேட்டதும் மகனின் மனோபாவத்தை உணர்ந்த அன்னை புன்முறுவலுடன் அவரது அறைக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்தபோது அன்னை லாட்டு மகராஜுக்குத் தினமும் பிரசாதம் அனுப்புவார். பழைய நினைவுகள் அலைமோத ஒரு நாள் லாட்டு மகராஜ் பக்தர் ஒருவரிடம் கூறினார். அன்னை, பலராம்பாபுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்குவார். முற்றத்திற்கு வெளியிலுள்ள அறையில்தான் நான் இருப்பேன். இதைப் பார்க்கும் பலர் என்னிடம் மகராஜ், அன்னை இங்கிருக்கிறார்கள். நீங்கள் அவரைப் போய் பார்ப்பதே இல்லையே, ஏன்? என்று கேட்பார்கள். அதனால் என்ன? என்பேன். வெகுசிலரே என் மன நிலையைப் புரிந்துகொள்ள முடியும். என் பதிலால் பலருக்குக் கோபம் வரும். என் காதுபட கடுஞ்சொற்களால் ஏசுவர். ஒரு நாள் நான் சற்றுக் கடுமையாக, இந்தப் போக்கிரிகள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அன்னை யார்? என்பதைப் புரிந்துகொள்ள ஆன்மிகச் சாதனை எதையும் செய்யமாட்டார்கள். ஆனால் தூய அன்னை, தூய அன்னை என்று மட்டும் விளம்பரப்படுத்துவார்கள்.
இந்த முட்டாள்கள் அன்னையை ஒரு காட்சிப் பொருளாக வைக்க மட்டுமே முயற்சிக்கிறார்கள். இப்படிப்பட்ட உங்கள் அன்னனையிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை என்று கூறி விட்டேன். அப்போது பக்தர்கள் இதைக் கேட்டு வருத்தமடைந்தாலும் பின்னர் சுவாமிகள் கூறியதன் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சித்தார்கள். லாட்டு மகராஜ் கூறினார். தூய அன்னையைப் புரிந்துகொள்வதும் அவருக்குரிய மரியாதையைச் செலுத்துவதும் வேடிக்கை விஷயமா என்ன? அவதாரபுருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட தேவி அவர். அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள எவ்வளவு சாதனைகள் செய்தாக வேண்டும்? அன்னை யார் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டுமே அறிவார். ஓரளவிற்கு சுவாமி விவேகானந்தரும் அறிவார். சுருக்கமாகச் சொன்னால் அவர் மகாலட்சுமி அன்றி வேறல்லர். ஏராளமான ஆன்மிகச் சாதனைகள் செய்தால் மட்டுமே உண்மையில் அன்னையைப் புரிந்துகொள்ள முடியும். |
|
|
|