|
உபதேசத்தின் போது, கடவுள் தண்ணீரைப் போல்.. என்றார், குரு சுவாமி! கொஞ்சம் விளக்கம் தேவை! என்றான் சீடன் ஒருவன். தண்ணீர் மேகங்களில் இருந்து பூமியை நோக்கி கீழே வருகிறது, கடவுளும் அப்படித்தான். உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, தன்னைத் தேடும் மனிதனைத் தானும் தேடிப் பிடிக்கிறான். தண்ணீருக்கு ஏழை என்றும், பணக்காரன் என்றும், உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவர் என்றும் எந்த பேதமும் இல்லை. அதேபோல்தான் இறைவன் நிலையும். தண்ணீருக்கு எந்த நிறமும் இல்லை. தனித்துவ குணமும் இல்லை. அதுபோலவே, கடவுளையும் அவன் இப்படிப்பட்டவன் என்று யாராலும் கூற இயலாது. நீ எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கிறாயோ அந்தப் பாத்திரத்தின் அளவு மட்டுமே தண்ணீரானது நிறையும். இதுபோலதான் இறைவன் தன்மையும். நீ செய்யும் பக்தி எந்த அளவுக்கு உள்ளதோ அந்த அளவுக்குத்தான் இறைவனின் கருணையும் நிறைந்திருக்கும். தண்ணீர் இந்த உலகம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. அதுபோலவே கடவுளும் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறான்! என்று அவர் கூற, தெளிவு பெற்றான் சீடன். |
|
|
|