|
ஒருநாள் நதிக்கரையோரம் நின்று ஒருவர் இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தார். நான் இறைவன்மீது இடைவிடாது பக்தி செலுத்திவருகிறேன். ஆனால் என் வாழ்வினில்தான் எத்தனை குழப்பங்கள். இறைவன் உண்மையிலேயே கருணை மிகுந்தவனாக இருப்பானேயாயின் எனக்கு துன்பம் ஏற்பட்ட காலங்களில் அவன் எங்கே சென்றுவிட்டான்? அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. பக்தா, நான்றாகப் பார். உன் கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் இந்த ஆற்றின் மணற்கரையில் பதிந்திருப்பதைக் காண். அவரும் ஆற்றின் மணற்கரையில் பதிந்திருந்த தன் வாழ்க்கையின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கலானார். வாழ்க்கை முழுவதும் அவர் கடந்துவந்த காலம் அங்கே அடிச்சுவடுகளாகக் காணப்பட்டன.
மீண்டும் மீண்டும் அதனைக் கூர்ந்துநோக்கியதில், தன் இரு பாதச்சுவடுகளுக்கு அருகே வேறு இரு பாதச் சுவடுகள் தொடர்ந்து காணப்பட்டன. அந்தப் பாதச் சுவடுகள், இறைவன் தன்னை தொடர்ந்துவந்ததன் அடையாளமே என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆனால் சில இடங்களில் அந்த இரு பாதச்சுவடுகள் தென்படவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் தான் பெரும் துன்ப துயரங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பது நினைவுக்குவந்தது. இறைவா, பெரும் துன்ப துயரங்களை அனுபவிக்கவேண்டியிருந்த அந்தக் கால கட்டத்தில், என் அருகில் இல்லாமல் என்னை விட்டு நீங்கியது ஏன்? என்று அசரீரி வந்த திசைநோக்கி வினவினார். உன்வாழ்க்கை முழுவதும் தென்படும் பாதச்சுவடுகள் அனைத்தும் என்னுடையது தான். சில இடங்களில் உன்னுடைய பாதச்சுவடுகள்தான் தென்படாது ஏனென்றால் பெரும்துன்பங்களையும் துயரங்களையும் நீ அனுபவிக்க நேர்ந்த அந்தக் காலகட்டத்தில், உன்னை நான் என் தோளில் அல்லவா சுமந்துகொண்டிருந்தேன் என்று அசரீரி பதிலுரைத்தது. |
|
|
|