|
ஆணவம் என்பது, அறிவை சிதைத்து, மனிதனின் அழிவுக்கு வித்திடும். அத்தகைய ஆணவத்தை அழித்து, மனதை வென்றோரே மகான்கள். கர்நாடக மாநிலத்தில், 12ம் நூற்றாண்டில் வசவண்ணர் என்ற மகான் ஒருவர் இருந்தார். மனம், மொழி மற்றும் மெய் எனும் மூன்றையும், சிவபெருமானின் திருவடியில் பதித்த இவர், விஜ்ஜல மன்னரிடம் அமைச்சராக பணியாற்றினார். ஒருநாள், மேல்மாடத்தில் நின்றிருந்தார் விஜ்ஜல மன்னர். அச்சமயம், ஆகாயத்திலிருந்து ஓலை ஒன்று, அவர், காலடியில் வந்து விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தவருக்கு அதில், என்ன எழுதியுள்ளது என்பது புரியவில்லை. அரசவை புலவர்களிடம் காட்டிய போது, அவர்களாலும் அதைப் படிக்க முடியவில்லை. அப்போது, அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றிருந்த வசவண்ணர், அந்த ஓலையை வாங்கி படித்து, மன்னா... நீங்கள் பிறப்பதற்கு முன், உங்கள் தந்தை புதைத்து வைத்த, 88 கோடிப் பொன், சிம்மாசனத்தின் அடியில் புதைந்துள்ளது. நீங்கள் வணங்கும் சிவபெருமானே இந்த ரகசியத்தை, ஓலை மூலம் உங்களுக்கு தெரிவித்துள்ளார்... என்றார்.
அதேபோன்று, சிம்மாசனத்தின் அடியில் தோண்டிப் பார்த்த போது, கோடிக்கணக்கான பொன் இருந்தது. அனைவரும் ஆச்சரியப்பட்டு, வசவண்ணரை பாராட்டினர். ஆனால், நல்லவர்கள் என்று அறிந்தும், சந்தர்ப்பம் வாய்த்தால், அவமானப்படுத்துவது தானே உலக வழக்கம்! ஒருநாள், சேனை வீரர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக, பேழையில், தங்க காசுகளை எடுத்துக் கொண்டு, வீரர்களுடன் சென்றார் வசவண்ணர். வழியில் விபூதி, ருத்ராட்சம் அணிந்து, பழுத்த பழமாக காட்சியளித்த சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார். அவரைப் பார்த்து கை கூப்பி, பணிந்து நின்றார் வசவண்ணர். வழிப்போக்கரோ, நான் செய்யும் சிவ தொண்டுக்கு பொற்காசுகளை கொடுத்து உதவும்... என்றார். சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் அப்படியே கொடுத்து விடும் இயல்புடைய வசவண்ணர், உடனே, தன் பணியாளர்களிடம், இந்த அடியாருடன் சென்று, இவர் சொல்லும் இடத்தில் இச்செல்வங்களை கொடுத்து விட்டு, பேழையை பத்திரமாக அரண்மனைக்கு கொண்டு வாருங்கள். இப்பேழை அரண்மனைக்கு சொந்தமானது... என்றார். வீரர்களும் அப்படியே செய்தனர். வசவண்ணரிடம் பொறாமை கொண்ட சிலர், இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து, காலிப் பேழையை மன்னரின் முன் வைத்து, நடந்த விஷயங்களை ஒன்றுக்கு பலவாக திரித்துக் கூறினர்.
வசவண்ணரின் பெருமையை அறிந்திருந்தும், அதை மறந்து, அவரை வரவழைத்து, சேனா வீரர்களுக்கான ஊதியப் பொன்னை, பரதேசிக்கு வாரி இறைத்துள்ளீரே... ராஜ தண்டனை பற்றிய பயம் இல்லையா உமக்கு? என்றார் கடுமையுடன்! குயுக்திக்காரர்கள், அதை பார்த்து சிரித்தனர். வசவண்ணரோ, மன்னா... சிவத்தை தவிர வேறு எதிலும் சிந்தையை செலுத்தாத என்னை, நீ கடிந்து கொள்வது முறையல்ல. அஷ்டமாசித்திகளும் நிறைந்த நான், சிவபெருமானின் கட்டளைக்கிணங்க, உன்னிடம் பணியாற்றினேன்; விவரம் புரியாமல், தகுதி அறியாமல் ஏசாதே... உன் முன் உள்ள பேழையை திறந்து பார்... என்றார் கம்பீரமாக! மன்னர் பேழையை திறக்க, அதில் பொற்காசுகள் அப்படியே இருந்தன; ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாக தகவலும் வந்தது. வசவண்ணரின் பெருமை உணர்ந்த மன்னர், அவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, மன்னிப்பு வேண்டினார். அனைவரும் வாழ நினைத்து அருட்தொண்டாற்றும் அடியார்கள், யாருக்கும் அஞ்ச மாட்டார்கள்! |
|
|
|