|
பகவான் கிருஷ்ணர் மனதை இடையறாது நெறிப்படுத்தி தியானத்தில் நிலைநிறுத்துகின்ற யோகியானவர். பஹிரங்க ஸாதனைகளில் மிக முக்கியமான ஒரு கருத்தைக் கூறுகிறார். அதாவது, தியானம் பழக வேண்டுமானால், அதில் வெற்றி பெற வேண்டுமானால், முறையான, மிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
நாத்யஸ்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமநஸ்னத: ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந (ஸ்ரீமத் பகவத்கீதை 6-16)
அர்ஜுனா! அதிகமாக உண்பவனுக்கும் தியானம் கைகூடுவதில்லை, உண்ணாமல் இருப்பவனுக்கும் தியானம் கைகூடுவதில்லை. அதிகமாக உறங்குபவனுக்கும் தியானம் கைகூடுவதில்லை. அதிகமாக விழித்திருப்பவனுக்கும் தியானம் கைகூடுவதில்லை. வாழ்வில் ஸமநிலையைக் கடைப்பிடிப்பதுதான் மிகக் கடினமான விஷயம். அதிகமாக உண்பது உடல் ஆரோக்யத்துக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை, ஆன்மிக முன்னேற்றத்துக்கும் அது ஊறு விளைவிக்கிறது. அதிகமாக உண்பது சாஸ்த்ரங்களில் பாபம் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஸ்நானம் செய்யும்போது நாள்தோறும் கூற வேண்டிய வேத மந்த்ரமான அகமர்ஷண ஸூக்தம், அதிகமாக உண்பதை ஒரு பாபமாகவே குறிப்பிட்டு, அந்தப் பாபம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது. சரியான அளவு உணவை உட்கொள்வதே ஒரு மாபெரும் யோகமாகும். உண்டு முடித்த பிறகு வயிற்றில் அரைப்பகுதி உணவு, கால் பகுதி நீர், கால் பகுதி காற்று சஞ்சரிக்க இடம் என்று இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக உண்பவர்களால் ஒருபொழுதும் தியானத்தில் ஈடுபடமுடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றொருபுறம், சிலர் விரதம் இருக்கிறேன் என்று உடலை வாட்டி வதைக்கிறார்கள். விரதங்கள் சாஸ்த்ரங்களில் மிக முறையாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஏகாதசி விரதம், சிவராத்ரி விரதம் போன்ற பல விரதங்கள் கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் விரதம் இருப்பதால், உடல்நலம் குன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அளவான, மிதமான உணவை உட்கொள்ளுதல் தியானத்துக்கு மிக முக்கியமானது. உணவைப் போன்றே உறக்கத்திலும் மிதம் தேவை. சிலர் இரவு முழுவதும் விழித்திருந்து, பிறகு அதிகாலை தியானத்தில் ஈடுபட முயற்சிக்கிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உடல் தனக்குத் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளத்தான் செய்யும். பல மணி நேரம் உறங்காமல் விழித்திருந்து, பிறகு தியானத்தில் ஈடுபட்டால், தியானத்தில், உறக்கமானது ஈடுகட்டப்படும். அவரவர் வயது, உடல் நிலைக்கேற்ப ஏழு மணி நேரமாவது உறங்க வேண்டும்.
உறங்கிக் கொண்டே இருப்பவர்களாலும் விழிப்புணர்வோடு தியானத்தில் ஈடுபட முடியாது. உணவு, உறக்கத்தைப் போன்றே செயல்களிலும் மிதம் தேவை. மிகத் தீவிரமாக அதிகமாக செயல்களில் ஈடுபடுபவர்களால் தியானத்தில் ஈடுபட முடியாது. செயலற்று, சோம்பித் திரிபவர்களாலும் தியானத்தில் ஈடுபட முடியாது. அரை மணி நேரம் தியானம் செய்ய வேண்டுமானால், ஒரு நாளின் மீதி இருப்பது மூன்றரை மணி நேரம் முறையாக வாழ்ந்திருக்க வேண்டும். எதிலும் அதிகமாக ஈடுபடுவதும் எளிது, ஈடுபடாமல் இருப்பதும் எளிது. ஆனால், அளவாக வைத்திருப்பது மிகக் கடினம். அதனைத்தான் தியானம் செய்ய விரும்புபவன் கைக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் அளவாக ஈடுபடுவதற்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை. அறிவுக்கருவிகள் வழியாக நாம் உள்வாங்கும் விஷயங்கள் உள்ளத்தின் அமைதியை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். தியானத்தில் வெற்றி பெறுவதற்கு உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு அனைத்தும் ஹிதமாக, மிதமாக இருக்க வேண்டும். |
|
|
|