|
சீடன் ஒருவன் தன் குருவிடம், குருவே நான் வந்து மூன்று வருடமாகிறது. இதுவரை எனக்கு எதுவும் உபதேசிக்கவில்லையே. எப்போது பாடத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்? என்றான், ஆதங்கத்தோடு. குருநாதர் சிரித்தார், என்னப்பா சொல்கிறாய்? நீ வந்த நாள் முதலாக, இரவும், பகலும் உனக்கு உபதேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். காலையில் எழுந்ததும் எனக்கு தேநீர் தருகிறாய். நான் உனக்கு நன்றி சொல்கிறேன். நீ என்னை வணங்கும் போதெல்லாம் உன் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தேன். காலைப்பொழுதில் உலாவப் போகும்போது, என்னுடன் வர உனக்கு அனுமதி தருகிறேன். நான் நடக்கும்போது என் கால்கள் தரையைத் தொடுவதில்லை என்பதைக்கூட நீ பார்த்திருக்கிறாய். உனக்கு வேறென்ன உபதேசம் வேண்டும்? மூன்று வருடங்களாக என்னதான் கவனித்து கற்றுக்கொண்டாய்? வார்த்தைகளுக்காகவா காத்திருக்கிறாய்? அப்படியானால் நீ ஓர் ஆசிரியரிடம் போவதே நல்லது என்றார் குரு. வார்த்தை வலைக்குள் சிக்கிக்கொள்ளாதவரே மெய்ஞான குரு. பிறரையும் அவர் அதில் மாட்டிவிடுவதில்லை. எல்லாவற்றையும் செய்கையாலேயே உணர்த்திவிடுவார் என்பதைப் புரிந்து கொண்டான் சீடன். |
|
|
|