|
சுட்டிப்பயல் சுந்தர் புத்திசாலி. எதையும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே என்றெல்லாம் கேள்விகள் கேட்பான். அவன் மூலம் நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வோம்.
ஆமைக்கும் முயலுக்கும் போட்டி. முயல் எப்படி ஓடும், ஆமை எவ்வளவு மெதுவாகச் செல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஆமை தைரியமாகப் பந்தயம் வைத்தது. நான் தான் வெற்றி பெறுவேன் என்றது ஆமை. தோற்கப் போகிறவனின் அசட்டுத் தைரியத்தை எண்ணி முயல் சிரித்தது. பந்தயத்திற்குச் சம்மதித்தது. பந்தயம் ஆரம்பமானது. வேகமாக ஓடிய முயல் ஆமை வருவதற்கு எப்படியும் வெகுநேரம் ஆகும். எனவே சற்று தூங்கிவிட்டுச் செல்லலாம் என்று நினைத்து, ஒரு மரத்தடியில் தூங்கியும்விட்டது. அதற்குள் ஆமை அதைத்தாண்டிச் சென்றது. தூங்கியெழுந்த முயல் இன்னும் ஆமை வரவில்லையென நினைத்து ஓடத் துவங்கியது. வெற்றிக் கம்பத்தை நெருங்கும்போது அதற்கு ஒரே அதிர்ச்சி. அங்கே ஆமை சிரித்துக் கொண்டு நின்றிருந்தது. முயல் தோற்றது.
கதையின் நீதி: யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாமே திறமைசாலி என்று கர்வம் கூடாது.
சுட்டிப் பயல் சுந்தர் நேராக முயலிடம் சென்று கேட்டான். ஏன் முயலே, நீ கெட்டிக்காரனாயிற்றே. அப்புறம் ஏன் தோற்றாய்? வெற்றிக் கம்பத்தைத் தாண்டிய பின் தூங்கியிருக்கலாமே!
முயல்: உண்மையில் நான் தூங்கவே இல்லை. தூங்குவதுபோல நடித்தேன். அவ்வளவுதான்.
ஏன்? என்று கேட்டான் சுந்தர்.
இது வலியவனுக்கும் எளியவனுக்கும் இடையே நடக்கும் போட்டி. வலியவன் எப்படியும் ஜெயிக்கத் தானே போகிறான் என்று எளியவன் தன் முயற்சியில் தளர்ச்சியடையக் கூடாது. ஆசை, தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்துத்தான் முன்னேறி வந்தது. நான் தூங்குவேன். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்று அது நினைக்கவே இல்லை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று எளியவன் தன் முயற்சியில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்றது முயல். |
|
|
|