|
குரு ஒருவரிடம் அந்நாட்டின் மன்னன் மகன் உள்பட ஏராளமானோர் சீடர்களாக இருந்தனர். ஒரு நாள், மழைக்காலம் துவங்க இருக்கிறது. எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான கனிகளையும், கிழங்குகளையும் சேகரித்து வாருங்கள்! எனக்கூறி, சீடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்தார் குரு. அவர்களுக்குத் தலைமை வசிக்க ஒரு சீடனையும் நியமித்தார். மன்னன் மகனான இளவரசனுக்கு தன்னை சீடர்கள் தலைவனாக நியமிக்காதது வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். மற்ற சீடர்கள் எல்லாம் ஒரு வாரத்திற்கு உரிய காய், கனிகளைச் சேகரித்தார்கள். ஆனால் இளவரசன் ஒரு மாத அளவுக்கு காய், கனிகளைச் சேகரித்தான். அவ்வளவு தேவை இல்லை என்று சொன்ன தலைமை சீடனிடம், மழை ஒரு வாரம் மட்டும்தான் பெய்யுமா என்ன? தொடர்ந்து பெய்தால் என்ன செய்வது என்ற முன் எச்சரிக்கை வேண்டாமா? இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது? என்று ஏளனமாகப் பேசினான்.
தலைமைச் சீடன் பதில் பேசாமல், அனைவரையும், குருகுலத்திற்கு அழைத்துச் சென்றான். ஒரு வாரம் கழிந்தது. சீடர்களே! உங்களிடம் ஏதேனும் உணவுப்பொருட்கள் மீதம் உள்ளனவா? இல்லாதவர்கள் மறுபடியும் சேகரிக்க செல்லவேண்டும்! என்றார், குரு. இளவரசனைத் தவிர மற்றவர்கள், புறப்படத் தயாரானார்கள். நான் இவர்களைப்போல அல்ல. முன்கூட்டியே ஒரு மாதத்திற்கு சேகரித்து வைத்துவிட்டேன். என்ன இருந்தாலும் நான் மன்னன் மகன் அல்லவா? இதோ பாருங்கள் என்னிடம் நிறையவே இருக்கிறது! என்றபடியே, மீதம் இருந்தவற்றை மூட்டையில் இருந்து அவிழ்த்து குரு முன்னிலையில் கொட்டினான் இளவரசன். அதில் இருந்த பழங்களும், கிழங்குகளும் அழுகிப்போயிருந்தன. அனைத்தையும் பார்த்துப் புன்னகைத்த குரு, உனக்கு ஒரு மாதத்திற்கு உணவு இருப்பதால் நீ மட்டும் உணவு சேகரிக்கச் செல்லவேண்டாம். உணவு இல்லாதவர்கள் மட்டும் செல்லட்டும்! என்றார். தவறை உணர்ந்த இளவரசன், குருவிடம் மன்னிப்பு வேண்ட, நாளை நாடாளப்போகும் நீ எந்த உணவுப்பொருளை பலநாள் சேகரித்து வைக்கலாம்; எவற்றை சில நாள் சேகரித்து வைக்கலாம் என்ற சாதாரண விஷயத்தைக்கூட தெரிந்துகொள்ளாமல் இவ்வளவையும் வீணாக்கிவிட்டாயே! இனியாவது சொல்வதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்! குரு சொல்ல, பணிந்து ஏற்றான் இளவரசன். |
|
|
|