|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » ஆன்மிக பாதையில்.. குருவும் சீடனும் |
|
பக்தி கதைகள்
|
|
குருவைத் தேடி பக்தன் தான் போக வேண்டும். சில சமயம் நல்ல பக்தனைத் தேடி குரு வருவதுண்டு. தகுந்த சீடனுடைய வரவை குரு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் இது அபூர்வமாகத்தான் நிகழும். மாணிக்கவாசகர் விஷயத்தில் இப்படித்தான் நடந்தது. மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்தார். அவருக்கு இறைவனே தீட்சை அளித்து நமசிவாய மந்திரத்தை உபதேசித்தார். மாணிக்க வாசகருக்கு ஆன்ம ஞானத்தை ஊட்டினார். அவர் வாயில் திருவாசகம் மலர்ந்தது. இராமகிருஷ்ண பரமஹம்ஸரும் இப்படித்தான் தக்க சீடன் வருவானா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் நரேந்திரன் என்ற இளைஞன் வந்தார். நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா? என தைரியத்தோடு வினவினார் நரேந்திரர். நான் கண்டதுண்டு. உனக்கும் காட்டுகிறேன் என்று அவருடைய தலையில் தன் கையை அமர்த்தி சில நிமிடங்கள் மவுனமாக இருந்தார். அவருடைய ஸ்பரிசம் பட்டதும் நரேந்திரர் ஞான ஒளி பெற்று விவேகானந்தர் ஆனார்.
குருவே தெய்வம்; குருவும் தெய்வமும் ஒன்றே. குருர்பிரும்ம குருர் விஷ்ணு என்கிறது குரு ஸ்துதி. குருவானவர் சாதகனை ஆன்மீக நெறியில் அழைத்துச் சென்று, அவனுள்ளே ஒளிரும் இறைசோதியை உணரச் செய்கிறார். குருவுக்கு சீடன் தொண்டு புரிதல் வேண்டும். அதுவே அவனுடைய அகங்காரத்தை மெல்ல மெல்ல அழிக்க வல்லது. அகங்காரம் குறைய குறைய அவனுள்ளே ஒளிரும் உள்ளொளியை உணரத் துவங்குவான். ஒரு புனிதமான ஆனந்த நிலையையும், அமைதியையும் அநுபவிக்கத் துவங்குகிறான். ஒரு குருவுக்கு சீடனாக இருப்பதை அவன் அதை ஒரு பாக்கியமாக கருத வேண்டும். குரு சொற்படி நடந்தால் அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும். பிரேமை மிகும். பகவானுடைய நாமத்தை உச்சாடனம் செய்யச் சொன்னால் சீடன் அதன்படி நடக்கவேண்டும். அந்த மந்திரோபதேசத்தால் உள்ளம் தூய்மை பெறும். குருவுக்கு சேவை செய்வதோடல்லாமல் பிற உயிர்களிடத்தும் அது அன்பை வளர்க்கும். எதையும் எதிர்பாராது பிறருடைய துன்பங்களைத் துடைப்பதே குரு சேவையாகும்.
பிறரை நேசிக்காமல் பிற உயிர்களிடம் அன்பை செலுத்தாமல் நான் கடவுளிடம் பக்தி செலுத்துகிறேன் என்று சொல்பவன் உண்மையான பக்தனல்லன். இறை பக்தியோடு பிற உயிர்களிடமும் அன்பு செலுத்த கற்றுக் கொள்ள வேண்டும். மக்களை நேசிப்பதே மகேசனை நேசிப்பதாகும். பிரதிபலனை எதிர்பார்க்காது தன்னலம் கருதாமல் நலிந்தோர்க்கு செய்யும் சேவையே பகவத் சேவையாகும். சீடன் குருவையே தெய்வமாக பாவித்து சேவை செய்ய வேண்டும். அவருடைய திருமேனியை நமஸ்கரிக்க வேண்டும். அவருடைய நாமமே இறைவனின் நாமம். அவருடைய வாக்கே வேதம். அவருடைய திருவுருவை தியானம் செய் என்கிறார் திருமூலர்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவுகுருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே. திருமந்திரம்-139,
அறிவு தெளிந்தால் குருவிடம் இறைவனையும் காணலாம்.
குருவின் வழிகாட்டுதலும், இறைவனின் அருளும் இல்லாமல் ஆத்ம சாட்சாத்காரத்தை சீடன் அடைய முடியாது. குருபக்திக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். ஸ்ரீமத் இராமானுஜரின் சீடர்களில் ஒருவரான வடுக நம்பி என்பவர். இவர் கர்நாடகாவில் சாலிக்ராமம் என்ற ஊரில் பிறந்தவர். குருவே தெய்வம் என்று இராமானுஜருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்து வந்தார். ஒரு யாத்திரையின் போது ஒரு நாள் இராமானுஜர் தாள் தினசரி வழிபடும் விக்ரஹத்தை வடுக நம்பியிடம் ஒப்படைத்து ஜாக்கிரதையாகக் கொண்டு வருமாறு கூறினார். அந்த விக்ரஹத்தை நன்றாக பார்சல் செய்து இராமானுஜரின் பாதுகைகளோடு சேர்த்து கட்டி விட்டார். இதைப் பார்த்த இராமானுஜர், ஏன் இப்படிச் செய்தாய்? இது அபசாரமல்லவா? என்று கேட்டார். எனக்கு ஆண்டவனை விட ஆச்சாரியனே முக்கியம் என்று பதிலளித்தார் வடுக நம்பி. மற்றொரு சமயம், ஒரு பக்தர் அஷ்டாக்ஷரமந்திரமான ஓம் நமோ நாராயணாய என்று ஜெபித்துக் கொண்டே இராமானுஜரின் திருவடிகளிலே விழுந்து வணங்கினார். குருவே உம் எதிரில் பிரத்யக்ஷமாயிருக்கும் போது அவரே தெய்வம். அப்படி இருக்க, கண்ணால் காண முடியாத கடவுளை ஏன் கூப்பிடுகிறாய்? என்று கேட்டார். குருபக்தியென்றால் வடுகநம்பி போல் இருக்க வேண்டும். |
|
|
|
|