|
பிருந்தாவனத்தில் உள்ள பாங்கி பிஹாரி கோவில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை ஆனது . இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணர் பல லீலைகளை நடத்தி இருக்கிறார் . தினமும் இரவு கோவிலை மூடும் முன்பு கிருஷ்ணருக்கு நான்கு லட்டுகள் வைப்பது வழக்கம். இவற்றை கோவில் அருகிலுள்ள குறிப்பிட்ட இனிப்பு கடையிலிருந்து வாங்கி வருவார்கள். மறுநாள் காலையில் வைத்த லட்டுகள் உதிர்ந்து இருக்கும் . பல ஆண்டுகளுக்கு முன்பு வயதான கிருஷ்ண பக்தர் ஒருவர் இக்கோவில் பூஜாரியாக இருந்தார். ஒருநாள் மறதியில் லட்டுகளை வைக்காமல் கோவிலை மூடிவிட்டார். அன்றிரவு அந்த குறிப்பிட்ட இனிப்பு கடைக்கு ஒரு பாலகன் வந்து தனக்கு லட்டு வேண்டும் என்றான். கடைக்காரர் “கடையை மூடிகொண்டிருக்கிறேன்.
லட்டு எல்லாம் தீர்ந்து போய்விட்டது,” என்றார். பாலகன் விடவில்லை. “உள்ளே போய் பாருங்கள். நான்கு லட்டு இருக்கும், என்று கூறினான் புன்னகையோடு. கடைக்காரரும் பாலகன் சொன்னபடியே உள்ளே போய் பார்த்தார். எல்லாம் விற்று காலியாக இருந்த தட்டில் நான்கு லட்டுகள் இருந்தன. அதை இலையில் கட்டி பாலகனிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்ட குழந்தை, “என்னிடம் காசு இல்லை. அதற்கு பதில் இதை வைத்துக் கொள்ளுங்கள்,” என்று தன் கையில் இருந்த வளையலை கழட்டி கொடுத்து விட்டு கோவிலை நோக்கி ஓடிவிட்டான். விடிந்தது. கோயிலை திறந்த பூஜாரி கிருஷ்ண விக்ரகத்தின் கையில் வளையல் இல்லாததை கவனித்து அதிர்ந்தார். அங்கு இருந்தவர்களிடம் முறையிட்டார். விஷயம் சுற்று வட்டாரத்தில் பரவியது. இனிப்பு கடைக்காரருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனே அவர் தன்னிடம் முந்திய நாள் இரவு பாலகன் கொடுத்த வளையலோடு கோவிலுக்கு ஓடினார். தன்னிடம் பாலகன் நான்கு லட்டுகள் வாங்கிக்கொண்டு வளையலை தந்ததை கூறினார். அப்போது தான் பூஜாரிக்கு முன் நாள் இரவு பாங்கி பிஹாரிக்கு லட்டு வைக்க மறந்தது ஞாபகத்துக்கு வந்தது. பிஹாரியிடம் மன்னிப்பு கேட்டு வளையலை விக்ரகத்தின் கையில் மாட்டினார்.“இவ்வளவு நாள் பகவானுக்கு லட்டு கொடுத்த பலனை அடைந்துவிட்டேன். பாங்கி பிஹாரி என்எதிரில் வந்து என்னோடு பேசி லட்டு வாங்கிப்போனாரே. பாக்கியம் செய்தவன் நான்,” என்று கண்ணீர் சிந்தினார் கடைக்காரர். |
|
|
|