|
வட இந்தியாவில் நாசிக்கிலிருந்து கோல்ஹாப்பூர் வரை அரசாட்சி செய்து வந்தார் சாஹாஜி. அவரது வீரமிக்கப்பட்டத்து ராணி ஜீஜாபாய். இவர்களின் தவப்பயனாக 1630 பங்குனி சுக்ல திரயோதசியில் ஒரு மகன் பிறந்தான். சிவனருளால் பிறந்த இக்குழந்தைக்கு சிவாஜி என்று பெயரிட்டனர் இளம் துறவியான ராமதாசரின் சீடர்கள் பல இடங்களில் ஆஞ்சநேயருக்கு ஆலயங்களை எழுப்பி மக்களிடம் பக்தியைப் பரப்புவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சாஹாஜி, ரகாலி என்ற இடத்தில் ராமதாசரைத் தரிசித்து உபதேசம் வேண்டினார். அப்போது ராமதாசர் ,அரசே, அடியேன் மூலம் சநாதன தர்மம் தழைக்க உமக்கு உதவ வேண்டும் என்பது ஸ்ரீராமரின் திருவுள்ளம் என்றார். சிவாஜிக்கு வயது ஏழு. யுத்தப் பயிற்சியில் குறுகிய காலத்திலேயே நன்கு தேர்ச்சி பெற்றான்.
நம் சிவாஜி எல்லாவற்றிலும் திறமை மிக்கவன் என்றும், அன்னை பவானியின் அருளால் அவன் அரும்பெரும் செயல்களைச் செய்வான் என்றும், பலரும் பாராட்டினர். ராமதாசர் ஆலோசனைப்படி, சாஹாஜி இளம் சிவாஜியை புனேயில் ஆட்சி புரியும்படி அனுப்பினார். அந்தணர்களின் அறநூல்களுக்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிப்படையாக நமது செங்கோல் இருக்கும் என்றார் சிவாஜி. இதனால் மக்கள் மகிழ்ந்து மாமன்னர் சிவாஜி வாழ்க வாழ்க என்றனர். சிவாஜியின் ஆட்சியில் அறம் செழித்தது. மக்கள் பயமின்றி பக்தியில் ஈடுபட்டனர். ஒரு நாள், அங்காபுத்தூர் கிருஷ்ணா நதியில் ஸ்ரீராமர், சீதை விக்கிரகங்கள் ராமதாசருக்குக் கிடைத்தன. யாரும் எந்த இந்து ஆலயமும் கட்டக் கூடாது என்ற மொகலாயரின் தடையை மீறி சாபலில் ஆலயம் எழுப்பினார் சிவாஜி. (648-பங்குனியில் ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. சிவாஜி, உன் ஆட்சித் திறனும் சமய்ப பற்றும் வளர்க! இந்த ராமரது மாலை உன் மகுடத்தில் ராம பிரசாதமாக விளங்கட்டும் என ராமதாசர் ஆசீர்வதித்தார்.
பரவும் இந்து சமய வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் பீஜப்பூர் சுல்தான் சூழ்ச்சியின் மூலம் சாஹாஜியைக் கைது செய்தான். சுல்தான், சூழ்ச்சியும் தந்திரமும் நெடுநாள் நிலைக்காது. இதனால் உனக்கு நீயே கேடு விளைவித்துக் கொண்டாய் என்றார் சாஹாஜி. டெல்லி பாதுஷாவின் மகன், முராத் வேட்டையின்போது காட்டில் மாட்டிக் கொண்டான். மராட்டிய வீரர்கள் அவனை மீட்டு சிவாஜியிடம் ஒப்படைத்தனர். அப்போது முராத், மன்னா, எதிரியின் மகனான என்னைக் கைது செய்யாமல் உபசரித்து அனுப்புகிறீர்களே! தங்கள் பெருந்தன்மையை நாங்கள் புரிந்து கொள்ளவில்லையே என்றான்! இளவரசே, இது மனிதாபிமானம். அரசுகளிடையே போட்டியும் பகையும் இருக்கலாம். ஆனால் வஞ்சகம் கூடாது என்றார் சிவாஜி. தந்தையை மீட்க சிவாஜி பலவாறு ஆலோசனை செய்து கொண்டிருந்த போது ராமதாசரின் கடிதம் சிவாஜிக்கு வந்தது. ஆனால் அதில் குருவின் நேரடி வழிகாட்டுதல் இல்லை. அன்று இரவு சிவாஜி, தேவி பவானியை வணங்கிவிட்டு உறங்கினார். அப்போது ஒரு கனவு. அந்த கனவில் பவானி தோன்றி, மகனே, நீ உடனே சிங்கன்வாடியிலுள்ள ராமதாசனைச் சந்திப்பாய். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றாள். அதன்படி, சிவாஜி, திவாகர் பந்த் என்ற மடாதிபதியுடன் ராமதாசரைத் தரிசித்தார். அப்போது சிவாஜிக்கு ராமதாசர் ஒரு மட்டைத் தேங்காய், ஒரு பிடி மண், இரண்டு பிடி குதிரைச் சாணம், நான்கு கூழாங்கற்கள் ஆகியவற்றை அளித்து ஆசி கூறினார்.
அதைப்பெற்றுக்கொண்ட சிவாஜி, ராமதாசரிடம், மகராஜ், இவற்றின் பொருள்? என்ன என்று வினவினார். அதற்கு ராமதாசர், மன்னா, சீரிய பண்புகள் அரசனிடம் இருந்தாலும் அவனிடம் ஆத்ம ஞானம் ஒளிர வேண்டும் என்பதை தேங்காயும், நீ பரந்த பூமிக்கு அதிபதியாவாய் என்பதைப் பிடி மண்ணும் உணர்த்துகின்றன. பெரும் குதிரைப் படையுடன், பல கோட்டைகளை நீ வசமாக்குவாய் என்பது குதிரைச் சாணமும் கூழாங்கற்களும் கூறும் செய்தி என்றார். சிவாஜியின் தந்தை கர்நாடகத்தில் அரசு அமைத்திருந்தார். அதைக் கைப்பற்றச் சென்ற முஸ்லீம் பெரும் படைகள் இரண்டினை சிவாஜி வழியிலேயே முறியடித்தார். டெல்லி பாதுஷாவின் நெருக்குதலாலும் சிவாஜியின் வீரத்தைக் கண்ட பயத்தாலும் பீஜப்பூர் சுல்தான் அவரது தந்தையை விடுதலை செய்தான். சிவாஜி இந்து சாம்ராஜ்யம் அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 40 வயதான ராமதாசர் 20 வயதுள்ள சிவாஜியின் படைவீரர்கள் அனைவருக்கும் மந்திர உபதேசம் செய்தார். உடனே சிவாஜி, குருதேவ், இன்று முதல் நீங்கள் எங்களது ராஜகுருவாகிவிட்டீர்கள். உங்களுக்குச் சேவை செய்ய அருளுங்கள் என்றார்.
சிவாஜி பல வெற்றிகளைக் குவித்தார். ஆந்திரம் வரை சிவாஜியின் தலைமையை இந்துஸ்தானம் பரவலாக ஏற்றுக் கொண்டது. சில காலத்திற்குப் பிறகு..., மாஹீலி நகரின் வீடுகளில் ராமதாசர் பிட்சை எடுத்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த சிவாஜி உணவுப் பொருட்களுடன் ஓடினார். சிறிது யோசித்த சிவாஜி ஓர் ஓலையில் ஏதோ எழுதி அதனை அவருக்குச் சமர்ப்பித்தார். என்ன மகனே இது? என்றார் ராமதாசர். . தங்களது ஆசியால் அடியேன் பெற்ற ராஜ்யம் அனைத்தையும் தங்கள் திருவடிகளில் காணிக்கை யாக்குகிறேன் என்றார் சிவாஜி அப்படியா! ராஜ்யம் குருவுடையது என்றால் குருவின் அரசைக் காப்பது சீடனின் கடமை அல்லவா? என்றார் ராமதாசர். ராமதாசர் சிவாஜியிடம் பலவாறு எடுத்துக் கூறினார். பிறகு. குருதேவ், உங்கள் அருளால் பலம்மிக்க இந்து சாம்ராஜ்யம் நிறுவ என்னை ஆசிர்வதியுங்கள் என்றார் சிவாஜி. பண்டரிபுரம் விட்டலன் எனக்கருளிய வில்லையும் அம்பையும் உனக்கு அளிக்கிறேன். அரசை அடியேனின் பிரதிநிதியாக இருந்து பரிபாலனம் செய் என்றார் ராமதாசர். சிவாஜி மகாராஜாவை சிவபெருமானின் அம்சம் என்று தீர்க்கதரிசிகள் முன்னதாவே அறிவித்ததாகப் போற்றும் நாட்டுப்பாடல்கள் பல உள்ளன. சிவாஜியின் வீரசாகசங்கள் குறித்து மராத்தியிலும் பாரசீக மொழியிலும் பல ஆவணங்களும் உள்ளன.
|
|
|
|