|
சீடன் ஒருவன் குருநாதரிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவர் அவனுக்கு தீட்சை அளிக்க விரும்புவதாகக் கூறினார். சற்றுத் தயங்கிய சீடன், சுவாமி! நான் இல்லறத்தில் இருந்துவிட்டு, பின்னர் வந்து தீட்சை பெற்றுக் கொள்கிறேன்! என்று சொன்னான். குருநாதரும் சம்மதித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவனுடைய மனைவிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், சீடனுக்கு அப்போதும் மனமில்லை. அந்தக் குழந்தை வளர்ந்து படிக்கும் வரையில் காத்திருக்க எண்ணினான். குருநாதரும் அனுமதித்தார். அவனுடைய மகன் பெரியவனாகி விட்டான். அதனால் தந்தையை லட்சியம் செய்யவில்லை. சீடனுக்கு இல்லறம் வெறுத்தது. குருநாதரை நாடி வந்தான். தீட்சை தரும்படி கேட்டான். குருநாதர் அவனை அருகிலிருந்த கடற்கரைக்கு அழைத்துக்கொண்டு போனார். கடல் அலைகள் புரண்டோடி வருவதைப் பார்த்துக்கொண்டே நின்றார். சீடன் வெகுநேரம் பொறுத்திருந்துவிட்டு, சுவாமி! ஏன் தாமதம்? எனக்குத் தீட்சை பெற்றுக் கொள்ளத் தகுதி இல்லையா ? என்று கேட்டான். குருநாதர் சிரித்தார். அவனைப் பார்த்து, நான் அப்படிச் சொல்லவில்லையே கடலில் அடிக்கும் அலைகள் ஓயட்டும். பிறகு நீராடிவிட்டு தீட்சை கொடுக்கலாம். என்று பார்க்கிறேன்! என்றார். குருவின் வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து உண்மையை உணர்ந்துகொண்டான், சீடன். |
|
|
|