|
வைணவர்கள் போற்றும் திருமலையை சைவர்களும் போற்றி சென்று வணங்கும் சிறப்பு பெற்றது. கவிமேதை அன்னமாசார்யா முதலில் சைவராக இருந்து பின்னர் வைணவராக மாறியுள்ளார். அகத்திய முனிவர் தீவிர சிவபக்தர், சைவர்களின் இராஜகுரு. இவருக்கு பெருமாள் காட்சி கொடுத்து உள்ளார். உபரிசரவசு என்ற மன்னன். குரு, சுக்கிரன் ஆகியோர் திருமலையில் தவம் இருந்தார்கள். அப்பொழுது அங்கு வந்த அகத்திய முனிவரை வரவேற்றனர். அப்பொழுது அகத்தியர் மலைகளில் சிறந்த புண்ணிய திருமலையை வலம் வந்து புனித தீர்த்தங்களில் நீராட வந்ததாகக் கூறினார். அப்பொழுது சிங்கன் என்ற மன்னன் ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி கடும் தவம் புரிந்து வருகிறான் என்ற செய்தி அறிந்து அகத்தியர், குரு, சுக்கிரன், ஸ்வாமி புஷ்கரணிக்கு சென்று நீராடி, சிங்கனுடன் தவம் புரிந்தார்கள். அப்பொழுது வானில் கோடி சூரிய ஒளியுடன் வேங்கடப்பெருமாள் காட்சி தந்தார். அவரது ஒளி பொருந்திய விஸ்வரூபத்தைக் காண எங்கள் கண்கள் கூசுகின்றது. சாந்தரூபத்தைக் காண வேண்டும் என அகத்தியர் கேட்க, சாந்தஸ்வரூபமாக அகத்தியருக்கு காட்சி தந்து அருளினார். அவருடன் குரு, சுக்கிரன், சிங்கன், உபரிசரவசு ஆகியோர் திருமாலின் அழகு கண்டு மெய்சிலிர்த்தார்கள். பின்னர் அகத்திய முனிவருக்குப் பல ரகசிய வேதங்களை கூறி மறைந்தார். அகத்தியர், பெருமாளின் தரிசனம் பெற்று திருமலையில் சில காலம் தங்கி பெருமாள் மீது துதிபாடினார். இந்த வரலாற்றுக் குறிப்பு வாமண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. |
|
|
|