|
ஒரு சமயம் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார் நாரதர், அவர் வருவதைப் பார்த்துவிட்ட திருமால், ஏதோ யோசிப்பவர் போன்ற பாவனையில் ஆழ்ந்தார். நாராயண.... நாராயண... எம்பெருமானே, தாங்கள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையே இருப்பதுபோல் தெரிகிறதே... அது என்ன என்று நான் அறியலாமா? உலகிலேயே பெரியது எது என்றுதான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் ஏதுவும் புரியமாட்டேன் என்கிறது! பகவானே உங்களுக்குத் தெரியாததா? ஐம்பூதங்களுள் ஒன்றான பூமி அல்லவா உலகில் மிகப் பெரியது? நானும் அப்படித்தான் நினைத்தேன் நாரதா, ஆனால், அதில் முக்கால்வாசி கடல்நீருக்குள் அல்லவா இருக்கிறது அதனால்தான். நீங்கள் சொல்வதும் வாஸ்தவம்தான், பூமியை விட நீர்தான் பெரியது!
நாரதரின் பதிலைக் கேட்டு மேலும் யோசிப்பவர்போல் பாவனை செய்தார் திருமால். ஆனால், மாபெரும் கடலை அகத்தியர் ஒரே மடக்கில் குடித்ததை வைத்துப் பார்த்தால், அகத்தியரே, பெரியவர் என்று தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய் நாரதா? நீங்கள் சொல்வதை மறுக்க முடியுமா? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனாலும் மேலும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார் பகவான். பகவானே! அகத்தியர்தான் பெரியவர் என்று தெரிந்துவிட்டதே இன்னும் என்ன ஆராய்ச்சி? அதில்லை நாரதா அகத்தியர், வானத்தில் ஒரு சிறு நட்சத்திரமாக அல்லவா காட்சியளிக்கிறார். அப்படியானால், அவரைவிட வானம் அல்லவா பெரிதாக இருக்கிறது... அதான் யோசிக்கிறேன். பகவான் சொன்னதைக் கேட்டதும் நாரதரும் யோசிக்க ஆரம்பித்தார்.
நன்றாக சிந்தித்தால் அனைத்திலும் பெரியது ஆகாயம்தான் என்றே தோன்றுகிறது! இல்லை நாரதா எனக்கு இப்போது புதிதாக ஒரு சந்தேகம் வந்துவிட்டது. ஆகாயம் முழுவதையும் வாமன அவதாரத்தில் எனது ஒரே திருவடி அல்லவா அளந்துவிட்டது! எம்பெருமானின் வாமன அவதாரத்தை நினைத்துப் பார்த்தார் நாரதர். ஆண்டவா... நான் அதை அல்லவா முதலில் யோசித்திருக்க வேண்டும். எம்பெருமானாகிய தாங்களே யாவற்றிலும் பெரியவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை! நாரதர் சொன்னதைக் கேட்ட பரந்தாமன் லேசாக புன்முறுவல் செய்துவிட்டு தொடர்ந்தார். ஆனால், நீ சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நாரதா....! விஸ்வரூபியாக விளங்கும் என்னை, சாதாரண பக்தன் ஒருவன் நினைத்தால், தன் மனதிற்குள் என்னை முழுமையாகக் கட்டிப்போட்டுவிடுகிறானே... அப்படியானால்...? அனந்தசயனன் கள்ளச்சிரிப்புடன் சொல்லி, முடிக்க, நாரதருக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. ஆஹா... ஆஹா பகவானே, உம்முடைய லீலையே லீலை...! உலகிலேயே பெரியவர் யார் என்பது நீங்கள் அறியாததா? பகவானைவிடவும் பக்தனே பெரியவர் என்ற விஷயத்தை இந்த உலகம் உணரவேண்டும் என்பதற்காகவே அல்லவா தாங்கள் எதுவும்அறியாதவர்போல் இவ்வளவு நேரம் என்னுடன் ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறீர்கள்...! நாராயண.... நாராயண....! |
|
|
|