|
சாவூரில் வருண் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு தேவிகா என்ற மனைவியும், மாணிக்கம் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். அவந்திகாவின் பேரழகைப் பற்றி மூன்று இளைஞர்கள் கேள்விப்பட்டனர். அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர்கள் மூவரும் சாவூர் வந்தனர். அவர்களில் முதலாமவனான கபிலன் அவந்திகாவின் தந்தையைச் சந்தித்தான். எங்கு நடப்பதையும், அறியும் ஆற்றல் எனக்கு உள்ளது. உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள், என்றான். மகிழ்ந்த வருண், இவ்வளவு திறமை வாய்ந்த உனக்குத்தான் என் மகள், என்றார். இன்னொரு இளைஞனோ மந்திரவாதியாக இருந்தான். எங்கும் பறந்து செல்லும் தேர் ஒன்று அவனிடம் இருந்தது. அவந்திகாவின் தாய் தேவிகாவை சந்தித்தான். அம்மா! நான் ஒரு மந்திரவாதி. என்னிடம் பறக்கும் தேர் ஒன்று உள்ளது. உங்கள் மகளைத் திருமணம் செய்ய வந்துள்ளேன்,என்றான். என் மகளுக்குப் பொருத்தமானவன் நீதான். உங்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்கிறேன், என்றாள் அவந்திகாவின் தாயார். மூன்றாமானவனோ மாவீரனாக இருந்தான். அவன் பெயர் அமரேஷ். அவன் அவந்திகாவின் அண்ணனை சந்தித்தான். நான் அஞ்சா நெஞ்சன். எந்த வீரச் செயலையும் துணிவுடன் செய்வேன். உன் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், என்றான். வீரத்தை மதிக்கத் தெரிந்த மாணிக்கம், என் தங்கையை உனக்கே திருமணம் செய்து வைக்கிறேன். என் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் மீற மாட்டார்கள், என்றான் அண்ணன்.
மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்காக அவந்திகாவின் தந்தையும், அண்ணனும் வீட்டிற்கு வந்தனர். அவந்திகாவின் தாயாரும் வந்து சேர்ந்தாள். மூவருமே அவந்திகாவிற்கு தாங்கள் தேர்ந்தெடுத்த மணமகனைப் பற்றி தெரிவித்தனர். அவர்களில் யாரை மணப்பது என்று அறியாமல் குழம்பினாள் அவந்திகா. மூவருமே தாங்கள் தேர்ந்தெடுத்த மணமகனைத்தான் நீ மணக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். யாரும் மற்றவர்களுக்காக விட்டுத் தரத் தயாராக இல்லை. அப்போது, பயங்கரமான அரக்கன் ஒருவன் அங்கே தோன்றி, அவந்திகாவை தூக்கியவாறு வானத்தில் பறந்து மறைந்தான். எதிர்பாராதது நடந்ததைக் கண்டு மூவரும் திகைத்தனர். திருமணம் பேச வந்த மூன்று இளைஞர்களையும் அழைத்தார் வருண். அவர்களிடம் நடந்தை கூறி உங்களில் யார் என் மகளை மீட்டு வருகிறீரோ அவரே மணமகன், என்றார். உடனே கபிலன், தன் ஞானப் பார்வையால் பார்த்தான். அரக்கன் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி மற்ற இருவரிடமும் சொன்னான். அந்த இடம் வெகு தொலைவில் உள்ளது. என் மந்திரத் தேரில்தான் அங்கு செல்ல முடியும், என்றான் மந்திரவாதி.
அந்தத் தேரில் அமர்ந்து அரக்கன் இருக்கும் இடத்தை அடைந்தான் வீரன் அமரேஷ். அவனுக்கும், அரக்கனுக்கும் கடுமையாக போர் நடந்தது. அரக்கனைக் கொன்று வீழ்த்தினான் அமரேஷ். அவந்திகாவை தேரில் ஏற்றிக் கொண்டு சாவூருக்கு வந்து சேர்ந்தான். மகளைக் கண்ட வருண் மகிழ்ச்சி அடைந்தார். என்னால்தான் அவந்திகா மீட்கப்பட்டாள். எனக்கே அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும், என்று ஞானி, மந்திரவாதி, வீரன் மூவருமே வற்புறுத்தினர். அவர்களில் யாருக்கு அவந்திகாவை திருமணம் செய்து வைக்க வேண்டும்? ஏன்?
விடை: அரக்கன் இருந்த இடத்தைத் தெரிவித்தும், அங்கு செல்வதற்காகத் தேர் வந்ததும், அவந்திகாவை மீட்கத் துணை செய்தன. அரக்கனைக் கொன்ற வீரனே உண்மையில் அவளை மீட்டவன் ஆவான். ஆகவே, வீரனே, அவந்திகாவை மணக்க வேண்டும். மற்றவர்கள் சகோதரர்கள் ஆவர். |
|
|
|