|
இன்பமோ, துன்பமோ எப்போதும் சலனமில்லாமல் எப்படி இருப்பது? என்று குருவிடம் கேட்டான், சீடன். அவன் கேள்விக்கு பதிலாக குரு ஒரு கதை சொன்னார். செல்வந்தர் ஒருவரிடம் அழகான வீடொன்று இருந்தது. அந்த வீட்டை விரும்பிய பலர் விலை கேட்டும், செல்வந்தர் யாருக்கும் தர விருப்பப்படவில்லை. ஒருநாள் செல்வந்தர் வெளியூர் சென்று திரும்பியபோது, அந்த வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. செல்வந்தர், இப்படியாகும் என முன்பே தெரிந்திருந்தால் யாருக்காவது வீற்றிருக்கலாமே என மனம் பதறினார். அப்போது அவரது பெரிய மகன் ஓடி வந்து, நல்ல காலம் அப்பா, நேற்றுநாள் மிக நல்ல விலைக்கு இந்த வீட்டை ஒருவருக்கு விற்றேன். மிகவும் நல்ல விலையாக இருந்ததால் உங்களுக்காக காத்திருக்கவில்லை என்றான்.
செல்வந்தர் மனம் நிம்மதி அடைந்தவராய் பெருமூச்சு விட்டார். அப்போது அவரின் இரண்டாவது புதல்வன், அண்ணா! நீ ஒன்றை மறந்துவிட்டாய். நாம் வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம், இந்த நிலையில் அவர் வீட்டிற்கு மீதிப் பணம் தரமாட்டார் என்று நினைக்கிறேன் என்றான். அதைக் கேட்ட செல்வந்தருக்கு, திரும்பவும் மனம் பதைபதைத்தது. அப்போது அவரது மூன்றாவது மகன், நான் வீட்டை வாங்கியவரிடம் இப்போதுதான் பேசிவிட்டு வருகிறேன். நான் வாக்கு கொடுத்தபடி எந்த நிலையிலிருப்பினும் வீட்டை வாங்கிக்கொள்வதே முறை என்றார்! எனச் சொன்னான். அதைக் கேட்ட தந்தையின் மனம் மறுபடியும் மகிழ்வில் திளைத்தது. இந்தக் கதையில் எரிகின்ற வீடும், வீட்டின் உரிமையாளருமே உண்மையான விஷயங்கள். அவர்தம் உணர்வுகள் என்பது ஒரு செய்தியை அவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமே. இந்தப் பக்குவம்தான் தன்னிடம் வரும் செய்தி மகிழ்வானதா, துக்ககரமானதா என நிர்ணயிக்கிறது. இந்தப் பக்குவத்தை ஒருவர் வாழும் சூழல், படிக்கும் புத்தகங்கள், பெற்றோர் கற்பித்த குணங்கள், பழகும் நண்பர்கள் போன்றவற்றால் அடைகிறோம் என்றார். சந்தேகம் தெளிந்து குருவுக்கு நன்றி சொன்னான், சீடர். |
|
|
|