|
எனக்கு இருக்கும் கவலைகளை யார் தீர்ப்பார்கள்? என்ற சீடனின் சந்தேகத்தைப் போக்க விரும்பிய குரு, ஒரு சம்பவத்தை சொன்னார். காட்டில் சேவல் கூவும் சத்தம், ஒரு சிங்கத்தை நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. இவ்வளவு கூரிய நகங்கள், உடல் வலிமை இருந்து என்ன பயன்? ஒரு சேவல் என்னை நடுங்க வைத்து விடுகிறதே? என்று சிங்கம் கவலையுடன் இருந்தது. அப்போது அந்தப் பக்கம் சென்ற ஒரு யானை தன் இரு காதுகளையும் ஆட்டிக்கொண்டே இருந்தது. ஏன் காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறாய்? என்று சிங்கம் கேட்டது. அதற்கு யானை, குளவி ஒன்று என் காதுகளுக்கு அருகே பறந்துகொண்டிருக்கிறது. இது, என் காதுக்குள் நுழைந்துவிட்டால், என்ன செய்வது என்ற பயத்தால் காதுகளை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய உருவமும், பெரும் பலமும் இருந்தும் என்ன பயன்? என்று கவலையுடன் கூறியது. உன் கவலைகளும் இப்படிப்பட்டவைதான். இப்படி நடந்து விடுமோ? அப்படி ஆகிவிடுமோ என்ற வீண் பயத்தால் வருபவைதான். கவலைகள் பொதுவானவை. அவை வரும் - போகும். இறைவனிடம் உண்மையான பக்தி கொண்டிருந்தால், கவலையிலிருந்து மீண்டுவிடலாம் என்றார், குரு. |
|
|
|