|
குதிரைப்படை வீரன் ஒருவன் அண்ணாமலையாரை தரிசிக்க வந்தான். கம்பீரமான முகமும், மிடுக்கான நடையும் கொண்ட அவன், அங்கிருந்த துறவியை பணிவுடன் வணங்கினான். “சுவாமி.... எனக்கு வழிகாட்டுங்கள். இந்த பிறவியிலேயே மோட்சம் அடைய ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். துறவியும், “அதற்கு பெரும் பாடுபட வேண்டுமே. உலகில் யாரும் அதற்கு தகுதியுள்ளவர்களாக தெரியவில்லையே!” என்றார். “என்னை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ள முடியும் சுவாமி... நீங்கள் கட்டளையிடுங்கள். உடனடியாக நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்,” என்றான் வீரன்.“புனிதமான இந்த திருவண்ணாமலையை மூன்றுமுறை பக்தியுடன் வலம் வந்தால் போதும். மோட்சம் கிடைப்பது உறுதி,” என்றார் துறவி. “இது என்ன பிரமாதம்... இப்போதே புறப்படுகிறேன்,” என்று குதிரை மீதேறிச் சென்றான். மலையைச் சுற்றிய வீரன் மீண்டும் துறவியைச் சந்திக்க வந்தான். “சுவாமி... நீங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி விட்டேன். எனக்கு மோட்சம் கிடைத்து விடும் அல்லவா! ” என்று கேட்டான் வீரன். “மோட்சம் உறுதியாகி விட்டது. ஆனால், உனக்கு அல்ல..... உன் குதிரைக்கு” என்று சொல்லி சிரித்தார் துறவி. அர்த்தம் புரியாமல் விழித்த வீரனிடம் துறவி,“உன் குதிரை தானே திருவண்ணாமலையை மூன்று முறை சுற்றி வந்தது. சொகுசாக அதன் மீது நீ அமர்ந்து தானே இருந்தாய்,” என்றார். வீரனால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. மலைக்கோவில்களில் கிரிவலம் செல்லும் போது, உடம்புக்கு முடியாதவர்களைத் தவிர மற்றவர்கள் நடந்தே செல்ல வேண்டும். சரிதானே!
|
|
|
|