|
கிராதன் என்னும் வேடனுக்கு முதுமை ஏற்பட்டது. இதனால் வேட்டையாட முடியாமல் தவித்தான். பசி வாட்டியது. ஒருநாள் நடை தளர்ந்து, திருவள்ளூர் அருகிலுள்ள நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளக்கரையில் விழுந்து கிடந்தான். அப்போது அந்த வழியே பறந்து வந்த ஆந்தை ஒன்று, குளத்தில் லேசாக மூழ்கி எழுந்தது. தற்செயலாக கிராதன் அருகே வந்து நின்று தன் சிறகை அசைத்தது. அதன் இறகில் இருந்த நீர்த்துளிகள் அவன் மீது பட்டது. இறக்கும் தருவாயில், இத்தீர்த்தம் அவன் மீது பட்டதால் அப்புண்ணியத்தின் காரணமாக சிவபெருமான் அவனுக்கு காட்சி தந்தார். “பெருமானே! மிருகங்களையும், பறவைகளையும் கொன்று வாழ்வதே என் தொழிலாகி விட்டது. அவை துடிதுடித்து இறக்கும் போதெல்லாம், என் மனம் புண்படும். அதற்குப் பிராயச்சித்தமாக கருடனாகப் பிறந்து இந்தக் கோவிலில் வசிக்கிறேன். இத்தலத்தில் வீதியுலா வந்து கோவிலுக்குள் செல்லும் போது, நான் உம்மை வலம் வந்து வணங்க வேண்டும்,” என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார். இதன்படி ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் நடராஜப் பெருமான் வீதியுலா வந்து கோவிலுக்குள் நுழையும் போது கருடனாக வந்து வட்டமடித்து சென்றான். இப்போதும், இந்த விழா நாட்களில் வானில் மூன்றுமுறை கருடன் வட்டமடித்து வழிபாடு செய்வதைக் காணலாம்.
|
|
|
|