|
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து, பச்... சாமியாவது ஒண்ணாவது... என்று சலித்துக் கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து, ஜோசியமே பொய்... என்று புலம்புவது, பொழுதை எல்லாம் வீணாகப் போக்கி, நமக்கெல்லாம் எங்கே நல்ல காலம் வரப் போகுது... என்று, விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின் இயல்பு. சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக வாழ ஆசைப்படுகிறோம். கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும். எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ. தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின், மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர் வழக்கம்.
இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள், ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ராம பக்தா... குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும், என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால், என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது. என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்... என்றது. ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்... என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ. பூதமோ, அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார், மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்... என்று சொல்லி மறைந்தது. ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல் ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக வெளியேறுவார் ஆஞ்சநேயர். பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில் அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில் அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ. வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன், முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும் புறப்பட்டார். விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார். சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார், ராம்போலோ. உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது. அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை. கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய வடிவத்தை காண்பித்து, ராம்போலோ... உன் விடாமுயற்சியும், தீவிர பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன; வேண்டியதைக் கேள்... என்றார். அஞ்சனை மைந்தா... அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்படுகிறேன்... என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு தரிசனம் தந்து, பக்தா... என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்... என்று ஆசி கூறி, மறைந்தார். ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான அந்நூல், ராம் சரிதமானஸ் எனப்பட்டது. இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர்! விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக வந்து தரிசனம் அளிக்கும்.
|
|
|
|