|
செல்வத்தின் பயன், ஈதல்; ஆனால், எல்லாருக்கும், கொடுக்கும் மனம் வருவதில்லை. மாகவி என பெயர் பெற்றவர் துளசிதாசர்; ஸ்ரீராமர் பெருமையை பரவச் செய்யவே, தான் பிறந்ததாக நினைத்தவர். அவர் செய்யும் தெய்வத் தொண்டுகளுக்காக, அடியார்கள் அள்ளிக் கொடுத்தனர். இதனால், ஏராளமான சாதுக்கள் அவர் இல்லத்திற்கு வருவதும், அங்கேயே தங்குவதுமாக இருந்தனர். அந்த சாதுக்களில், நான்கு பேர் மட்டும், அங்கு குவிந்திருக்கும் செல்வத்தை எப்படியாவது திருடிச் சென்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினர். அன்று அமாவாசை இரவு; எல்லாரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். இதுதான் சமயம் என்று, ஏராளமான செல்வங்களை அள்ளி, மூட்டை கட்டி, மடத்தின் பின் வாசல் வழியாக வெளியேறினர், திருடர்கள். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பர். அதைப்போன்று கள்ளர்கள் திட்டம் தீட்டி களவாடி போனாலும், காவலர் இருவர் அவர்களை பிடித்து நன்றாக அடித்து, காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதிகாரி, அவர்களை அழைத்துச் சென்று துளசிதாசரிடம் ஒப்படைத்தார். துளசிதாசரைப் பார்த்ததும் கள்வர்கள், ’சுவாமி... நாங்கள் செய்தது தவறு தான்; எங்களை மன்னித்து விடுங்கள்...’ என வேண்டினர்.
உடல் முழுவதும் காயங்களுடன் காணப்பட்ட அவர்களை பார்த்த துளசிதாசர் மனம் பதைக்க, ’உங்களை யார் இப்படி அடித்தது... காண்பியுங்கள்; அவர்களுக்கு தண்டனை அளிக்கிறேன்...’ என்று சொல்லி, மடத்தில் இருந்த காவலர்கள் அனைவரையும் வரிசையாக நிற்க சொன்னார். வந்து நின்ற காவலர்களை, கள்வர்கள் நன்றாக பார்த்து, ’சுவாமி... இவர்களில் யாரும் எங்களை அடிக்கவில்லை; வேறு காவலர்கள் தான் அடித்தனர்...’ என்றனர். துளசிதாசரோ, ’இங்குள்ளவர்கள் தான் காவலர்கள்; வேறு யாரும் காவலர்கள் கிடையாதே... ஸ்ரீராமா... இது என்ன சோதனை...’ என்று திகைத்தார். அப்போது, ராம - லட்சுமணர் துளசிதாசருக்கு காட்சி அளித்து, ’பக்தா... இக்கள்வர்களை அடித்தது நாங்கள் தான்; நீ தண்டிக்க வேண்டுமானால், எங்களை தண்டி...’ என்றனர். தான் வணங்கும் தெய்வங்களை நேருக்கு நேராக தரிசித்த துளசிதாசர், உண்மை உணர்ந்து, ’தெய்வமே... என் பொருட்களை காவல் காக்கும் காவல்காரனாக உங்களை ஆக்கி விட்டேனே...’ என்று புலம்பி, ராம, லட்சுமணர் திருவடிகளில் விழுந்து அழுதார். ’துளசி... பொருட்களை சேர்த்து வைக்காதே; அன்னதானம் செய்...’ என்று சொல்லி, மறைந்தனர். துளசிதாசர் மட்டுமல்லாது, கள்வர்களும் திகைத்தனர். பின், அத்துடன் அவர்கள் களவுத்தொழிலை கை விட்டு, நல்வழிக்கு திரும்பினர். பக்தனை மட்டுமல்லாது, அவன் உடைமைகளையும் சேர்த்தே காப்பாற்றுவார் இறைவன். அத்துடன், அந்தப் பக்தனின் உளத் தூய்மையை, வெளிச்சம் போட்டு காட்டி, பக்தனை உயர்த்துவார்!
|
|
|
|