|
துவஷ்டாவின் மகன் திரிசரன் தலைகீழாகத் தவம் செய்து கொண்டிருந்தான். இந்திரன் தன் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் திரிசரனின் சிரத்தைக் கொய்து விட்டான். இந்திரனின் பவுருஷத்தில் (தேஜஸ்) ஒரு பகுதி தரும தேவதையிடம் போய் விட்டது. இதனால் சினம் கொண்ட துவஷ்டா, தன் ஒரு சடா முடியை அக்னியிலிட, அதிலிருந்து விருத்திரன் தோன்றினான். விருத்திரனோடு நட்பு செய்து வைக்குமாறு சப்த ரிஷிகளிடம் வேண்டினான் இந்திரன். இருவரும் நண்பர்கள் ஆயினர். சமயம் பார்த்து அவனையும் கொன்று விட்டான் இந்திரன். இந்த வஞ்சகத்தால் இந்திரனிடமிருந்து ஆறில் ஒரு பங்கு தேஜஸ் வாயுவிடம் போய்விட்டது. அகலிகையை மோசம் செய்ததால் இரண்டு பங்கு தேஜஸ் அஸ்வினி தேவதைகளிடம் (இருவர்) சென்று விட்டது. குந்தி ஜபித்த மந்திரங்களால் தரும தேவதை, வாயு தன் இந்திர தேஜஸை யுதிஷ்டிரன், பீமசேனனாகப் பிறக்கச் செய்தார். இந்திர பவுருஷத்தால் அர்ஜுனன் உதித்தான். மாத்ரியின் மந்திர ஜபத்தால் அஸ்வினி தேவர்கள் இந்திர பவுருஷத்தை நகுல, சகாதேவர்களாக உதிக்கச் செய்தனர். ஆக, ஐவரும் இந்திரனின் வீரியமே. சசிதேவி துர்கையின் அருளால் திரௌபதியாக அக்னியில் உதித்து ஐவரையும் மணாளனாக அடைந்தாள்.
அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி நாட்டை விட்டுச் செல்லும்போது மெதுவாக நடந்ததால் பிரஜைகள் பலவிதமான வசையம்புகளை விஸ்வாமித்திரர் மீது எய்தனர். சீக்கிரம் நடந்து செல்லுங்கள் என்று விஸ்வாமித்திரர் சந்திரமதியை கோல் கொண்டு அடித்ததாக மார்க்கண்டேய புராணம் உரைக்கின்றது. விஷ்வ தேவர்கள் ஐவர் ஆகாயத்திலிருந்து இக்கொடுமையைக் கண்டு, இம்முனிக்கு இரக்கமே இல்லையா? வெட்கக்கேடு! என விமர்சித்தனர். இதனால், எரிச்சலுற்ற விஸ்வாமித்திரர் அந்த ஐவரையும் மானிடராகப் பிறக்கக் கடவீர் என சபித்தார். ஐவரும் முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, ரிஷி மனமிரங்கி, மானிடராகப் பிறப்பினும் உங்களுக்கு மனைவி, குழந்தை என்ற பந்தமிராது, ஒரே வேளையில் வெட்டிச் சாய்க்கப்பட்டு மரணம் சம்பவிக்கும் என அருளினார். அவர்களே இளம் பாண்டவர்கள் அஸ்வத்தாமனால் குருக்ஷேத்திரப் போரின் 18ம் நாள் இரவு வெட்டிச் சாய்க்கப்பட்டு விண்ணுலகம் சென்றனர்.
துர்வாசர் சாபத்தால் வபு என்ற அப்சரஸ், தர்ஷி என்ற பறவையாகப் பிறந்தாள். அவளை துரோணர் என்ற அந்தணர் மணந்தார். குருக்ஷேத்ர போரின்போது, ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த தர்ஷி, அர்ஜுனன் அம்பு பட்டு இறந்தது. நிறைமாத கர்ப்பமாயிருந்த அதன் வயிற்றிலிருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகதத்தனுடைய யானையின் கழுத்தில் கட்டியிருந்த மணி, ஒரு அம்பு பட்டு அறுந்து கீழே விழுந்து நான்கு முட்டைகளையும் மூடி மறைத்துக்கொண்டது. பாரதப் போர் முடிந்து பல மாதங்கள் கடந்தன. ஷமிகா என்ற ரிஷி அங்கே நடக்கையில் மூடியிருந்த மணிக்குள் பறவைகளின் சப்தம் கேட்க, மணியை அகற்றினார். அங்கே நான்கு குஞ்சுகளைக் கண்டார். அவற்றை ஆசிரமம் எடுத்துச்சென்று வளர்த்தார். அவை வளர்ந்த பின்பு சுதந்திரமாய் விடப்பட்டாலும், இரவில் ஆசிரமத்துக்கு வந்து விடும்! அப்போது அங்கே விவாதிக்கப்படும் வேத சாஸ்திரங்களைக் கற்றன. ஜைமினி முனிவர் அந்நான்கு பறவைகளிடம் கேட்ட கேள்விகளே, பஞ்ச பாண்டவர் யார்? திரௌபதி ஏன் ஐவரை மணந்தாள்? என்பவை, அதற்குப் பறவைகள் அளித்த விடைகளே முகப்பிலுள்ள வரலாறு.
|
|
|
|