|
துன்பமும் சோகமும் பக்தர்களை வாட்டும்போதுகூட கடவுள் காப்பாற்ற வராமல் இருக்கிறாரே, ஏன்? தன் குருவிடம் கேட்டான் ஒரு சீடன். பதிலாக, அவனுக்கு ஒரு கதை சொன்னார், குரு. ஒரு தந்தை தன் மகனை அழைத்துக்கொண்டு காட்டிற்குச் சென்றார். அங்கே சென்றதும் அவன் கண்களைக் கட்டிவிட்டு, இரவு முழுவதும் நீ தனியாக இங்கேயே இருக்கவேண்டும். பயப்படவோ; கண்கட்டை அவிழ்க்கவோ கூடாது. இது உனக்கு சவால்! என்றார். மகன், சரி என்று, ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். கொஞ்சநேரத்தில் அவரது காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த சிறுவனுக்கு, காட்டில் எழுந்த விலங்குகளின் ஓசை அச்சத்தைக் கொடுத்தது. போதாக்குறைக்கு மழைவேறு தூறத் தொடங்கியது. பயத்தில் அலறினான். யாராவது காப்பாற்றுவார்கள் என நினைத்தான்.
சிறிது நேரத்தில், இனி அலறுவதால் பயனில்லை என்பது புரிந்தது. திடீரென்று ஒரு துணிச்சல் வர, என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புற ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். அப்படியே தூங்கிப்போனான். விடிந்ததும் எழுந்து கண்கட்டைத் திறந்தவனுக்கு ஆச்சரியம்! அருகிலேயே அமர்ந்திருந்தார், அவன் தந்தை. எப்போது வந்தீர்கள்? என்று ஆவலாகக் கேட்டான். அவன் தலையை ஆதூரமாகக் கோதிவிட்ட தந்தை சொன்னார், நான் உன்னைவிட்டுப் போகவே இல்லை. ஆனால், உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகவேண்டும் என்பதற்காகவே மவுனம் காத்தேன். அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானாகவே வரும்! கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், வாழ்வில் நாம் தோற்று விடக்கூடாது என்பதற்காகவே பல நேரங்களில் மவுனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார். |
|
|
|