|
அரசே! உங்கள் யாகத்தைக் காண வந்திருக்கிறேன் என்றான் அந்தச் சிறுவன். அவசியம் வாருங்கள்! வயதில் இளையவராயினும் தேஜஸ்வியாகப் பிரகாசிக்கும் உங்களுக்கு நல்வரவு! அழைப்பு விடுத்துவிட்டு ஜனகமஹாராஜா உள்ளே போய்விட்டார். யக்ஞ சாலையின் வாயிலில், வாயில் காப்போன் தடுத்தான். நாங்கள் வந்தியின் சொல்படி நடப்பவர்கள். இங்கு வயதிலும் ஞானத்திலும் முதிர்ந்த வயோதிகர்களுக்கு மட்டுமே அனுமதி உன் போன்ற சிறுவர்களுக்குப் பிரவேசமில்லை! என்றான். சிறுவன், நானும் முதியவன்தான், வேத, உபநிஷத்துக்களைக் கற்றிருக்கிறேன். குரு சேவை குறையின்றிச் செய்திருக்கிறேன்; ஞானத்தைச் சம்பாதித்திருக்கிறேன். பலவித விரதங்களை அனுஷ்டித்ததுடன் பலன்களையும் வென்றவனாக இருக்கிறேன். அதனால் நானும் வயோவிருத்தனே என்றான்.
வாயிலோன், அதற்கெல்லாம் பல ஆண்டுகள் கற்றுத் தெளிய வேண்டும். சொற்ப காலத்தில் பண்டிதனாவதற்குக் குறுக்கு வழி கிடையாது. பத்தே வயதான சிறுவன் நீ, கிழவனைப் போல் பேசுகிறாயே? என்று மறுத்தான். சிறுவன் சொல்கிறான்: ந தேன ஸ்தவிரோ பவதி யோனாஸ்ய பலிதம் ஸிர: பாலோ (அ) பி ய: ப்ரஜானாதி தம் வேதா: ஸ்தவிரம் விது: (முடி உதிர்ந்து தலை சொட்டையானதால் முதியவர் எனப்படுவதில்லை. சிறு பையனானாலும் ஞானியாயிருந்தால் அவனை தேவதைகள் முதியவனாகக் கருதுவர். வயதினாலோ செல்வத்தினாலோ, உறவினர்கள் எண்ணிக்கையாலோ ஒருவர் பெரியவராவதில்லை. வேத சாஸ்திரங்களை அத்யயனம் செய்தவர்களே பெரியவர்கள்.)
என் தந்தையை வாதத்தில் வென்று, நீரில் மூழ்கடித்துக் கொன்ற அகந்தை பிடித்த வந்தியை எல்லோருடைய எதிரிலும் சபையில் தோற்கடிக்க வந்துள்ளேன் என்று பதில் சொன்ன சிறுவன் கஹோள (கஹோடர் என்றும் பாடம் உண்டு.) ரிஷியின் மகன் அஷ்டாவக்ரன்; அவனை துவாரபாலன் தடுத்தபோது நடந்த சம்பாஷணை இது. கஹோளர் உத்தாலகரின் சிஷ்யர். மிக நன்றாகக் கல்வி பயின்று வந்தார். அதனால் மகிழ்ந்த உத்தாலகர் தம் மகள் சுஜாதையை கஹோளருக்கு மணம் செய்து கொடுத்தார். சுஜாதை காலக் கிரமத்தில் கருவுற்றாள்; அவளும் உத்தாலகர் சொல்லும் பாடங்களைக் கேட்டு வந்ததால் கருவிலிருந்த குழந்தையும் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டது. ஒருநாள் கருவிலிருந்த குழந்தை தந்தையைக் குறித்து உன் தயவால் நான் வேதங்களைக் கற்றறிந்தேன். ஆனால் உன் உச்சரிப்பில் பிழைகள் உள்ளன என்று சுட்டிக் காட்டிற்று. அதனால் கோபமடைந்த கஹோளர். நீ எட்டு வக்ரங்களுடன் (கோணல்கள்) பிறப்பாய்! என்று சபித்தார். அவ்வாறே பிறந்ததால் அஷ்டாவக்ரன் என்று அழைக்கப்பட்டார்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே, ஜனகரிடம் பொருளுதவியை நாடி விதேஹ நாட்டிற்குப் போனகஹோளரை ஜனகன் சபையிலிருந்த வந்தி வாதத்தில் தோற்கடித்து நீரில் மூழ்கடித்து விட்டான். அவனை வென்று தந்தையின் அவமானத்தைத் துடைக்கப் பத்தே வயதான சிறுவன் அஷ்டாவக்ரன் வருகிறான். பிற்பாடு அஷ்டாவக்ரன் வந்தியைத் தோற்கடித்து தன் தந்தையையும், வந்தியினால் மூழ்கடிக்கப்பட்ட பல அந்தணர்களையும் மீட்கிறான். கஹோளர் மகிழ்ந்து மகனை ஆசீர்வதிக்கிறார். (பிற்காலத்தில் அஷ்டாவக்ரர் சமங்கா நதியில் ஸ்நானம் செய்து உடலிலிருந்த கோணல்கள் நீங்கப் பெற்றார் என்று மஹாபாரதம் வனபர்வத்தில் சொல்லப்பட்டிருக்கிறது) வயதாவது எல்லோருக்கும் பொது (நம் முயற்சியே இல்லாமல் நாம் விரும்பா விட்டாலும் நடப்பதே அது ஒன்றுதான்!) வாழ்ந்து முதுமை அடைவது மட்டுமே சிறப்பானது அல்ல. முதுமையடைந்தவர்கள் பெறும் ஞானத்தை இளம் வயதிலும் பெறலாம் எனும் பாடத்தைக் கூறுகிறார் அஷ்ட வக்ரர். |
|
|
|