|
ஐந்தாம்வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர். வருங்காலத்தில் நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம், என்று கேட்டார். மாணவர்களும், மருத்துவர், இன்ஜினியர், பாடகர், ஆசிரியர் என ஆளுக்கொன்றைச் சொன்னார்கள் ஒரு மாணவன் மட்டும், நான் குதிரை வண்டி ஓட்டப் போகிறேன், என்றான். அனைவரும் சிரித்தனர். அந்த மாணவன் வருத்தத்துடன் மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தான். மகனின் சோர்ந்த முகம் கண்ட தாய் காரணம் கேட்டார். வகுப்பில் நடந்ததை சொன்னான். அந்தத் தாய் பிள்ளையின் முதுகில் தட்டிக் கொடுத்து, சுவரில் மாட்டியிருந்த கிருஷ்ணர் படத்தைக் காட்டினார். அது கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு தேரோட்டும் சித்திரமாகும். நீயும் குதிரை வண்டி ஓட்டியாக ஆசைப்பட்டால் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும், என்று வாழ்த்தினார். அந்தத்தாயின் வாழ்த்து பலித்தது நரேந்திரன் என்னும் அந்தச் சிறுவனே பிற்காலத்தில் உலகம் புகழும் விவேகானந்தராக புகழ் பெற்றான். தொழில் எதுவானால் என்ன...! அதில் இருக்கும் மேன்மையை மட்டும் யோசிக்க வேண்டும். புரிகிறதா...!
|
|
|
|