|
தான் பெற்ற வரங்களின் ஆற்றலால், முனிவர்கள் மற்றும் தேவர்கள் என, பலரையும் ஆட்டிப் படைத்தான் ராவணன். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காக சென்றார் நாரதர். ராவணா... கடுந்தவம் செய்து, மற்றவர்களால் கனவில் கூட நினைக்க முடியாத வரங்களை பெற்றிருக்கும் நீ, நல்லவிதமாக வாழாமல், ஏன் அடுத்தவர்களுக்கு அழிவை உண்டாக்குகிறாய். யமன் வாயில் விழாதே... என்று புத்திமதி கூறினார். ராவணனோ, தேவர்களுடனும், கந்தர்வர்களுடனும் கதாகாலட்சேபம் செய்து, பொழுதைக் கழிக்கும் நீர், யமன் பேரை சொல்லி என்னை பயமுறுத்துகிறீரா... என்னை யமன் வாயில் விழாதே என்று சொன்னீர் அல்லவா... இதோ அந்த யமனையே இல்லாமல் செய்து விடுகிறேன்... என்று எகத்தாளம் பேசி, யமனிடம் யுத்தத்திற்கு சென்றான். அவனுடைய படைகளை எதிர் கொண்டனர், யம கிங்கரர்கள். போரில் ராவணனின் புஷ்பக விமானம் சேதமடைந்தது. ஆனாலும், பிரம்மாவின் வரத்தின்படி, புஷ்பக விமானம் சரியானது. ஆனால், ராவண சேனைத் தளபதிகளோ, யமகிங்கரர்களின் தாக்குதல் தாங்காமல் ஓடினர்.
உடல் முழுவதும் ரத்தம் வழிய, விமானத்திலிருந்து இறங்கிய ராவணன், பாசுபதாஸ்திரத்தை ஏவ, அது, தீயை கக்கியபடி சென்றது; யமப்படை அழிந்தது. தன் பத்து தலைகளை தூக்கி, உலகையே நடுங்கச் செய்யும்படியாகக் கர்ஜனை செய்தான் ராவணன். யமன் தன்னுடைய மகாஸ்வனம் என்ற தேரில் ஏற, பாசமும், உலக்கையும் கொண்டு, யமனுக்கு முன்னால் நின்றார் மிருத்யுதேவர். காலதண்டம் உயிர்ப்பெற்று, யமன் பக்கத்தில் வந்து நின்றது. அக்கோலத்தைக் கண்டு, தேவர்களே பயந்தனர். அதுவரை பார்த்திராத, அற்புதமான குதிரைகளுடன் கூடிய யமனின் தேரைக் கண்டதும், நடுங்கி ஓட்டம் பிடித்தனர் அரக்கர்கள். தன்னந்தனியாக நின்றான், ராவணன். யமனுக்கும், ராவணனுக்கும் இடையே கடும் போர் மூண்டது. அப்போர், ஏழு நாட்கள் நீடித்த நிலையில், சுவாமி... இந்த அரக்கனை நான் அழிக்கிறேன்; உத்தரவு கொடுங்கள். இது ஒன்றும் என்னால் இயலாத காரியமல்ல... என்றார் மிருத்யுதேவர்.
கடைசியில், யமன் காலதண்டத்தை எடுத்தார். அப்போது, பிரம்மன் தோன்றி, யமனே... இந்த கால தண்டத்தை ராவணனன் மீது ஏவி, என் வரத்தை பொய்யாக்கி விடாதே... என் வரத்தை பொய்யாக்குபவர்கள், உலகங்கள் அனைத்தையும் வஞ்சித்த பாவத்திற்கு ஆளாவர். உன்னுடைய கால தண்டத்திற்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கிடையாது; இது, கண்டிப்பாக ராவணனை அழித்து, என் வாக்கை பொய்யாகி விடும். ஆகையால், கால தண்டத்தை விடாதே... என்றார். பிரம்மனின் வாக்கை ஏற்று, தேரோடு மறைந்தார் யமன். அதைப்பார்த்த ராவணன், நான் யமனையே ஜெயித்து விட்டேன்... என்று கத்தியபடியே திரும்பினான். யமனை வெல்ல முடியுமா? விவரம் புரியாத ராவணன், யமனை வென்றதாக கர்வப்பட்டு, அதன்பின், மேலும் பல பாதகங்களைச் செய்து, ராமனால் அழிந்தான். ஒவ்வொருவருக்கும் மன்னிப்பு அளித்து, தண்டிக்காமல் விடுகிறது தெய்வம்; ஆனால், அதை உணர்ந்து, திருந்தாமல், மேலும் மேலும் தவறுகள் செய்யும் போது, தண்டனை அளிக்கிறது தெய்வம். இதை உணர்ந்தால் உயரலாம்! |
|
|
|