|
ராமனைப் பார்க்க பார்க்க கைகேயிக்குத் தாங்க முடியாத வருத்தம் ஏற்பட்டது. எப்படிப்பட்ட பிள்ளை இவன். இவனைப்போய் காட்டுக்கு அனுப்பி ஈரேழு பதினான்கு ஆண்டுகள் இன்னல்பட வைத்தேனே. என்னுடைய கட்டளைதான் அது என்று தெரிந்திருந்தும், தந்தையின் கட்டளை இது என்று ஏற்றுக்கொண்டு, அன்றலர்ந்த தாமரை போல முகம் மலர்ந்து நின்றானே. அவனியில் இவனைப் போல் வேறு எந்த பிள்ளை இப்படி இருப்பான். கூனியின் பேச்சைக் கேட்டு என் புத்தி அப்படிக் கோணலானது. அவள் சொன்னாள் என்றால் நான் யோசித்திருக்க வேண்டாமா? தவறிழைத்து விட்டேனே. மீளாத பாவத்துக்கு ஆளாகி விட்டேனே. ராமனை மட்டுமா நான் வஞ்சித்தேன், அந்தப் பெண் என்ன பாவம் செய்தாள்? ராமன் இருக்குமிடமே அயோத்தி என்று அடர்ந்த கானகம் சென்று எத்தனை அல்லல்பட்டிருக்கிறாள். அசோக வனத்திலே அந்த அரக்கனின் சிறையிலே எத்தனை சித்ரவதைக்குள்ளாகியிருக்கிறாள். கடவுளே, ராமனின் பொருட்டு லட்சுமணனும் கூட அல்லவா காடேகிக் கஷ்டப்பட்டிருக்கிறான். கைகேயின் குற்றம் புரிந்த நெஞ்சம் குறுகுறுத்தது.
சில நாட்களாகவே சிற்றன்னை கைகேயி தம்மை நினைத்து சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறாள் என்று அறிந்த ராமன், அதுபற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அன்று கைகேயி ராமனைப் பாசத்துடன் நோக்கினாள். பரிவுடன் பேசினாள். ராமா, நான் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமே கிடையாது. நான் முக்தி பெற நீதான் எனக்கொரு நல்வழி காட்ட வேண்டும் என்று வேண்டினாள். ராமன், கைகேயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, கலங்க வேண்டாம் தாயே. என்று ஆறுதல் கூறினான். மறுநாள், ராமனின் ஆலோசனைப்படி லட்சுமணன் கைகேயியை அழைத்துக்கொண்டு சரயு நதிக்கரைக்குப் போனான். அங்கு கைகேயி, நதியையும், நதிக்கரையின் எழிலையும் ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு முகூர்த்த நேரம்போல் அங்கு இருந்திருப்பாள். ஆற்றங்கரையை ஒட்டி இருந்த வயல் வரப்புகளில் மந்தை மந்தையாக ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை புல்லை மேய்வதும், கூடவே, மே... மே... என்று குரல் எழுப்புவதுமாக இருந்தன. கைகேயின் மனதிலே ஓர் எண்ணம் பளிச்சிட்டது. மே... மே... என்ற சொல்லுக்கு, நான்... நான்... என்றல்லவா அர்த்தம்? என்று உள்மனம் ஆராய்ந்தது.
ஏன் இந்த ஆடுகள், மே... மே... என்று கத்துகின்றன. எனது... எனது என்ற ஆணவந்தான் இவை ஆடுகளாகப் பிறந்து அல்லல்படக் காரணமோ என்று எண்ணி அவள் மனம் அலைபாய்ந்தது. அரண்மனைக்குத் திரும்பியதும், தாயே... சரயு நதிக்கரைக்குச் சென்று வந்தீர்களா? அங்கு என்ன பார்த்தீர்கள்? என்று ஸ்ரீராமன் கேட்டான். கைகேயி, ராமனை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தாள். அவன் ஏதோ ஒன்றைத் தமக்கு உணர்த்த முற்பாடுகிறான் என்று உணர்ந்தாள். நதிக்கரையில் தாம் பார்த்ததையும் தமது எண்ண ஓட்டத்தையும் ராமனிடம் கூறினாள். ராமன் சிரித்தான். தாயே, இனியாவது மனம் அமைதி பெறுங்கள். நடந்தவற்றுக்கு நான்தான் காரணம் என்று காரணமின்றி கலக்கமடையாதீர்கள். நாம் அனைவரும் கருவிதான். எதுவும் நமதில்லை; நம் வசமில்லை. நடப்பவை அனைத்தும் நடந்தே தீரும். எல்லாம் தன்னால்தான் என்று நினைப்பது ஆணவம் தலைப்பட்டது; அகம்பாவத்தின்பாற்பட்டது; கர்வத்தின்பாற்பட்டது, அணை புரளும் வெள்ளத்தைக் கைகளால் மறைத்து தடுத்து நிறுத்தி விட முடியாது. நான் என்ற எண்ணத்தை நெஞ்சிலிருந்து விரட்டினால் போதும். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றான் ராமன். கைகேயியின் மனம் அமைதியுற்றது. |
|
|
|