|
ஸந்தப்தகன் என்ற அந்தணர் நியமம் தவறாது பூஜை செய்து வாழ்ந்தார். தீர்த்த யாத்திரை புறப்பட்டவர், வழி தவறி அடர்ந்த காட்டில் அகப்பட்டுக் கொண்டார். அங்கே ஓர் ஆலமரம் இருந்தது. அதன் மேலிருந்த ஐந்து பிசாசுகள், அந்த அந்தணரைக் கொன்று, தின்பதற்காக வாயைத் திறந்தன. அந்தணர் கண்களை மூடிக் கொண்டு, ஓம், நமோ, பகவதே வாசுதேவாய என ஸ்மரித்தார். ஸ்ரீமந் நாராயணர், மணிபத்ரன் என்பவனை அனுப்பி அந்தணரைக் காப்பாற்ற உத்தரவிட்டார். மணிபத்ரனைப் பார்த்ததும் பிசாசுகள் அந்தணரை விட்டு விட்டு அவரை நமஸ்கரித்தன. உங்களுக்கு எப்படி இந்தப் பிசாசு ஜன்மம் வாய்த்தது? என வினவினார் விஷ்ணு தூதர். என் பெயர் பர்யுஷிதன். அன்றைக்கு சிரார்த்தம், பசி தாங்காமல் எவருமறியாமல் ஒரு வடையை உண்டேன். பர்யுஷித என்றால் பழைய என்று பொருள். அதனால் இப் பெயருடன் அலைகிறேன் என்றது ஒரு பிசாசு.
என் பெயர் ஸுசிமுகன். தன் ஐந்து வயது மகனோடு ஓர் இளம் விதவை பத்ரவடம் என்ற தீர்த்தத்துக்கு வந்தாள். க்ஷத்ரியனான நான் அவர்களை வழிப்பறி செய்தேன். மேலும், அவர்களின் கட்டு சாத மூட்டையையும் காலி செய்தேன். நீரையும் அருந்தினேன். என்னால் தலையில் அடி வாங்கிய சிறுவன் இறந்தான். அந்த விதவையும் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள். அதனால் ஊசி போன்ற முகமும் மலை போன்ற உடலும் எனக்குக் கிடைத்தது என்றது இரண்டாவது பிசாசு. என் பெயர் சீக்ரகன். நான் வைசிய குலத்தில் பிறந்தவன். ஒரு செல்வந்த சினேகிதனோடு கடல் கடந்து வியாபாரம் செய்யப் போனேன். வழியில் பொருளாசையால் நண்பனைக் கடலில் தள்ளி கொன்றேன். ஊர் திரும்பியதும் அவன் மனைவியிடம், கொள்ளையர் பொருளை அபகரித்ததாகப் பொய் கூறினேன். இதனால் என் ஆயுள் குறுகி, தொழு நோய் பீடித்து அவலமாய் மடிந்தேன். நரகத்தை அடைந்த எனக்கு அங்கு கொடுத்த பெயர் சீக்ரகன் என்றது மூன்றாவது பிசாசு.
என் பெயர் ரோதகன். எனக்கு வயதான பெற்றோரும் ஒரு சகோதரனும் இருந்தனர். உடன் பிறந்தவனை ஏமாற்றி சொத்தை எழுதிக்கொண்டு ஊரை விட்டே துரத்தி விட்டேன். தாய், தந்தையரை வீட்டுக்குள் பூட்டி வைத்தேன். கொடுமை சகிக்காமல் அவர்கள் விஷமருந்தி மாண்டனர். ரோதக என்றால் அடைத்து வைத்தவன் என்று அர்த்தமாகையால் எனக்கு இப்பெயர் என்றது நான்காவது பிசாசு. என் பெயர் லேககன். அவந்தி நகரத்தில் அந்தணர் குலத்தில் பிறந்தேன். அரசன் உத்தரவுப்படி கோயில் அர்ச்சகராயிருந்தேன். அக்கோயிலில் இருந்தவை ஸ்வர்ண விக்ரஹங்கள். விக்ரஹத்தை சிறிது சிறிதாய் செதுக்கி தங்கத்தை அபகரித்தேன். இது அரசனுக்குத் தெரியவர, மறுநாள் தண்டனை என்பதை அறிந்தேன். அன்றிரவே மன்னனைக் கொன்றுவிட்டு ஒரு ஸ்வர்ணப் பிரதிமையோடு ஓடினேன். வனத்தில் புலிக்கு இரையானேன். நரகத்தில் உழன்ற பின் இப்பிசாசு சரீரமெடுத்திருக்கிறேன். கீறிக் கீறி ஸ்வர்ண மெடுத்ததால் எனக்கு இப்பெயர் வந்தது என்றது ஐந்தாவது பிசாசு. ஐந்தும், எங்களுக்கு நற்கதி கிடைக்க வழி செய்யுங்கள் எனக் கெஞ்சின. ஸந்தப்தகன் தவம் புரிந்தான். கருட வாஹனர் காட்சி தந்து, யாது வரம் வேண்டுமென்று கேட்க, இந்த ஐந்து பிசாசுகளுக்கும் நற்கதியளிக்க வேண்டும் என்று கோரினான். அவ்வண்ணமே வரமளித்தார் ஹரி என்கிறது கருட புராணம். |
|
|
|