|
உஜ்ஜையினியில் மனைவியுடன் வசித்த ஒரு அந்தணர் கோவில்களில் பூஜை செய்து பிழைத்து வந்தார். ஒருமுறை அவ்வூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்காக அந்தணரும் அவரது மனைவியும் வெளியூர் புறப்பட்டனர். வழியில் ஒரு பாகன், யானைக்கு கொள் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த உணவையே அவனும் சாப்பிட்டான். அந்தணர் அவனிடம், “தம்பி! நானும், என் மனைவியும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. எனக்கும் கொஞ்சம் கொள் கொடு,” என்றார். பாகன் அவரிடம், “சுவாமி! இதை நான் எச்சில் செய்து விட்டேன். அந்தணர்களுக்கு எச்சில் உணவை அளிப்பது முறையில்லையே!” என்றான்.“பரவாயில்லை! ஆபத்து காலத்தில் மனிதன் தர்மத்தை சற்றே வளைத்து தப்பித்து கொள்ளலாம். நாங்கள் இறக்கும் நிலைக்கு வந்து விட்டோம். உயிர் பிழைக்க இதை சாப்பிட்டுக் கொள்கிறோம்,” என்றார் அந்தணர். பாகனும் தன்னிடமிருந்த கொள்ளை அவரிடம் கொடுத்தான்.அவர்கள் அதை சாப்பிடும் போது விக்கல் ஏற்பட்டது. பாகன் தோல் பையை நீட்டி,“இதிலுள்ள தண்ணீரைக் குடியுங்கள்,” என்றான். “தம்பி! எச்சில்பட்ட கொள்ளை சாப்பிட்டது உயிரைத் தக்க வைக்க! அது காப்பாற்றப்பட்டு விட்டது. இனி அந்தண தர்மப்படி எச்சில்பட்ட தண்ணீரைக் குடிக்கக்கூடாது. மேலும் ஒருவரை மீண்டும், மீண்டும் தொந்தரவும் செய்யக் கூடாது,” என்றபடியே தண்ணீர் இருக்கும் இடம் தேடி மனைவியுடன் நகர்ந்தார். |
|
|
|