|
ராமதேவர் என்ற சித்தர் காசியில் விசுவநாதரை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கனவில் விசுவநாதர், காலபைரவராகப் பத்து கைகளுடன் தோன்றி அருளினார். இறைவா, உன்னை இந்த உருவத்திலும் வழிபட அருள்வாய், என்று கைகூப்பி வேண்டினார் ராமதேவர். மறுநாள் காசியில் நீராடினார் அப்போது ஒரு பெட்டி அவரை குளிக்க விடாமல் வந்து அவர் மேலே இடித்தன. இதென்ன! நிம்மதியாக ஸ்நானம் செய்யவிடாமல் இந்த மூங்கில் பெட்டி வந்து இடிக்கிறதே, என்று அவர் மனதில் சிந்திக்கலானார். இவ்வாறு ராமதேவரின் மீது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து மூங்கில் பெட்டி இடிக்க, அவரும் அதை ஒதுக்கியபடி கங்கையில் புனித நீராடி வந்தார். மறுபடியும் ராமதேவர் கனவில் காசி விசுவநாதர் தோன்றி, அந்தப் பெட்டியில் உள்ளதை உணர்த்தினார். மறுநாள் அவர் அதிகாலையிலேயே கங்கைக்குச் சென்றார்.
அந்தப் பெட்டியை திறந்து பார்த்ததும் அவருக்கு ஆச்சரியம்! இறைவா! என் கனவில் தோன்றிய தங்களை மூர்த்தியாகக் காணும் பாக்கியத்தை ஒருவாரமாக இழந்து விட்டேனே. எத்தகைய மூடன் நான்! என்று தன்னை தானே திட்டிக் கொண்டார். பிறகு பெட்டிக்குள் இருந்த அந்தச் சிலையைத் தினமும் காசியிலேயே வழிபட்டு வந்தார் ராமதேவர். இப்படியே காலம் கடந்தது. சிலநாள் கழித்து சோழ நாட்டிலிருந்து சோழீசுவரம் உடையார் என்ற பக்தர் காசியில் ராமதேவரைச் சந்தித்து அவரது சீடரானார். ஒருநாள் ராமதேவர் அவரது சீடரிடம் சோழீசுவரா! காசி விசுவநாதர் எனக்களித்த இந்த விக்கிரகத்தை இனி நீ வழிபாடு செய்து வா. நான் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன் என்று விக்கிரகத்தை சீடரிடம் கொடுத்தார். அந்த விக்கிரகம் சிலா மூர்த்தியுடன் தான் அடைந்திருந்த சித்திகள், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றையும் சோழீசுவரமுடையாருக்கு உபதேசித்தார் ராமதேவர். சீடரும் நன்றி குருவே! இது என் பாக்கியம் என்று மனம் நெகிழ்ந்து அந்த விக்கிரகத்தை வாங்கினான். ஒருநாள் சோழீசுவரரின் கனவில் பைரவர் தோன்றி, நாம் தென் தமிழ்நாட்டிலிருந்தபடி அருள்பாலிக்க உள்ளோம். நாளைக் காலையே எம்மை எடுத்துக் கொண்டு பயணம் தொடங்கு என்று கூறி மறைந்தார்.
அதன்படி மறுநாள் சோழீசுவரரும் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று கூறிக்கொண்டே கால பைரவ மூர்த்தியைத் தலைமீது சுமந்தபடி சோழீசுவரர் தென்திசை நோக்கிப் பயணமானார். சோழீசுவரர் காடுகள், மலைகள், ஆறுகளைக் கடந்து வந்த சோழீசுவரமுடையார் நாகப்பட்டினம் நகரை அடைந்தார். அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. சோழீசுவரா! இதுவே யாம் உடைற விரும்புமிடம் நில் என்று கேட்டது. சோழீசுவரனும் அங்கேயே நின்று விட்டான். ஆஹா, நான் பாக்கியவான்...! என்று மனதில் கூறிகொண்டே சந்தோசப்பட்டான். கால பைரவரின் ஆணைப்படியே சோழீசுவரமுடையார் அந்தச் சிலையை அருகிலுள்ள காயாரோகண கோயில் மண்டபத்தில் வைத்து வழிபட்டு வந்தார். அப்போது சோழீஸ்வரர் இறைவனே நோக்கி இறைவா, உனக்குக் கோயிலெழுப்பி திருவிழாக்கள் நடத்தும் பேற்றினை எனக்கு அருள்வாய் என வேண்டினார். இறைவனும் இவரது வேண்டுதலை ஏற்று, சோழீசுவரரே! உமது ஆசை நிறைவேறும். வடக்கே திருமலைராயன் பட்டினத்து அரசனின் மகளைப் பீடித்திருக்கும் பிரம்மராட்சதனை நீ போய் விலக்கி அதனை விலங்கிட்டு கொண்டு வா என்று கூறினார். சோழீஸ்வரரும் இறைவனே! தங்கள் திருவாக்கு! அப்படியே ஏற்கிறேன் இறைவா! என்றார்.
சோழீசுவரர் திருமலைராயன் பட்டினத்துக்கு சென்றார். அங்கு அரசனை பார்த்தார். அரசரும் சோழீஸ்வரரை வணங்கினார். மன்னா! தங்கள் மகளைப் பீடித்துள்ள பிரம்மராட்சதனை விரட்ட கால பைரவர் உத்தரவின் பேரில் நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினார். அரசர் சோழீசுவரரை பார்த்து அப்படியா! என ஆச்சரியத்தோடு இறைவா! என் கோரிக்கைக்குச் செவி மடுத்தாய், மிக்க நன்றி! என்று அரசர் கைகூப்பி வணங்கினார். மன்னனும், தன்மகளான அரசகுமாரியை பணிபெண்களிடம் அழைத்து வரசொன்னார். அரசகுமாரி வரவழைக்கப்பட்டாள். சோழீஸ்வரர், அவள்மீது விபூதி, தீர்த்தம் ஆகியவற்றைத் தெளித்து பொற் பிரம்பால் தொட, பிரம்மராட்சதன் சோழீசுவர முடையாரின் எதிரில் வந்து கட்டுப்பட்டு நின்றது. அரசரும், அவரது மகளும் சோழீசுவரரை கைகூப்பி வணங்கினர். என் மகளைக் காப்பாற்றியதற்கு நன்றி! காலபைரவரை வணங்க நாங்கள் ஆவலாயுள்ளோம்! என்று அரசர் கூறினார். சோழீசுவரரும் அரசே! இறைவன் ஆணையை நிறைவேற்றினேன்! நீங்கள் அனைவரும் கால பைரவரைத் தரிசிக்க வாருங்கள் என்று விடைபெற்றார். சோழீசுவரமுடையார் நாகப்பட்டினத்தில் தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ராட்சதனை கட்டிப் போட்டு அகலாமல் இருக்க பணித்தார்.
பின்பு, ஒருநாள் அரசர் தன் குடும்பம் மற்றும் முக்கிய பரிவாரங்களுடன் நாகப்பட்டினம் சென்று காலபைரவரைத் தரிசித்தார். சோழீசுவரர் அவர்களை வரவேற்றார். வாருங்கள் அரசே! கருணையே வடிவான இந்த காலபைரவமூர்த்திக்கு கோயில் அமைக்கவேண்டும் என்று கேட்டார் சோழீசுவரர். அரசரும், குருவே! இதுவும் இறைவன் ஆணை. நிச்சயம் நிறைவேற்றுகிறேன்! என்று அரசர் கூறினார். அரசர் சொன்னப்படி வெகு சில காலங்களில் அதன்படி தரமான கருங்கற்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டது. திருமலைராயன் பட்டினத்து அரசன் நிறுவிய கோயில்களில் சட்டநாத சந்திர சேகர மூர்த்தம் என்னும் இந்த கால பைரவ க்ஷேத்திரம் சிறப்பானது. என் இறைவா! நான் நினைத்து அனைத்தும் நிறை வேற அருள் புரிந்தாய். எல்லாம் உன் கருணை என்று கூறிக்கொண்டே வணங்கினார் சோழீசுவரர். சோழீசுவரமுடையார் பலகாலம் வாழ்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி, காலபைரவ சட்டநாதரை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒருநாள் தன், அன்பர்களே, அழைத்து நான் இறைவனிடம் சேரும் காலம் வந்துவிட்டது. திருக்கோயிலுக்கு எதிரே ஒரு சமாதி பீடம் அமையுங்கள். என்று கூறினார் சோழீசுவரர். அவர் கூறியபடி சிலநாட்களில் சமாதி அடைந்தார். அவரது வேண்டுக்கோளுப்படி திருக்கோயிலுக்கு எதிரே பீடம் அமைக்கப்பட்டது. பக்தர்கள் னைவரும் பீடத்தை வணங்கி வந்தனர். சமாதி அடைந்த சோழீசுவரமுடையாரின் பலி பீடத்தை அன்பர்கள் இன்றும் வழிபட்டு வருகின்றனர். |
|
|
|