|
இந்த வீடு ரொம்ப சின்னதா இருக்கு... முதல்ல பாக்குற போது பெரிசா தோணிச்சு. சாமானெல்லாம் கொண்டு வந்து வெச்ச பின், ரொம்ப நெருக்கடியா போயிடுச்சு. இருக்கறதே, ரெண்டு பெட்ரூம்... உங்கப்பாவுக்கும், முரளிக்கும் ஒண்ணு; நமக்கு, ஒண்ணு. இதுல யாராவது சொந்தக்காரங்க வந்தா, தங்கறதுக்கு இடமில்ல. அவ்ளோ பெரிய வீட்டில இருந்துட்டு, இங்க கஷ்டமா இருக்கு... என்றாள், மனைவி கவிதா. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்ததால், லோன் போட்டு, வேளச்சேரியில், மூன்று படுக்கையறையுடன் கூடிய பிளாட்டையும், நீலாங்கரையிலே, 50 லட்சம் ரூபாய்க்கு பார்ம் ஹவுசையும் வாங்கினேன். மூணு வருஷம் வேளச்சேரி பிளாட்டில் சந்தோஷமா இருந்தோம். ஆறு மாசத்துக்கு முன், கம்பெனியில், திடீர்ன்னு என்னை வேலையை விட்டு போக சொல்லிவிட்டதால், திண்டாடி விட்டோம். மாசம் கட்ட வேண்டிய தவணையே, ஒரு லட்சம் ரூபாய். அதில்லாம மத்த செலவுகள்... ரொம்ப யோசனைக்கப்புறம், வேளச்சேரி பிளாட்டை, வாங்கினதை விடக் கம்மியான விலைக்கு விற்றோம். பார்ம் ஹவுஸ் ரொம்ப கம்மியான விலைக்கு கேட்டதால், அதை மட்டும் விற்கவில்லை. என் மனைவியின் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருப்பதால், இந்த வீட்டுக்கு குடி வந்தோம்.
வந்து ரெண்டு மாசம் ஆச்சு; மிடில் க்ளாஸ் ஏரியா. அதுவும், இந்த அப்பார்ட்மென்டைக் கட்டி, பத்து வருஷத்துக்கு மேலே இருக்கும். மொத்தம், 24 பிளாட்; அதுல, எட்டு மட்டும் தான் டபுள் பெட்ரூம்; பாக்கியெல்லாம் சிங்கிள் பெட்ரூம். ரெண்டு, மூணு பேரைத் தவிர, எல்லாருமே லோன் வாங்கி, வீடு வாங்கியவர்கள் தான். ஒருத்தர்கிட்டே கூடக் கார் இல்ல; எல்லாம் டூ வீலர் தான். என்னிடம் மட்டும் தான் கார் இருந்தது. அதை நிறுத்துவதற்கும் இடம் இல்லை; வெளியே தான் நிறுத்த வேண்டும். இப்போது தான் சின்ன கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் கவிதாவிற்கு எப்படி சமாதானம் கூற முடியும் என நினைத்துக் கொண்டிருக்கையில், காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்தேன்; சோமு நின்றிருந்தான். அழுக்கு சட்டையும், யாரோ கொடுத்த பழைய பெர்முடாசும் அணிந்து, காலைச் சாச்சு சாச்சு நடக்கும் அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. எப்பப் பாத்தாலும், யார் வீட்டிலேயாவது நின்று, தொண தொணவென்று பேசியபடி இருப்பான். அப்படி என்ன தான் பேசுவானோ அவனைச் சுற்றி, அக்குடியிருப்பு கிழவர்களின் பட்டாளம் இருக்கும். என் எதிரே நின்றிருந்த சோமுவிடம், என்னா... என்றேன். அப்பா குருபெயர்ச்சி பலன் புத்தகம் வாங்கிட்டு வர சொன்னாரு... இந்தாங்க, என்று புத்தகத்தை நீட்டினான்.
அவன், என் அப்பாவை, அப்பா என்று சொன்னதும், கோபத்துடன், நாயே... யாருடா உனக்கு அப்பா... கண்ட கழிசடைகள்லாம், சொந்தம் கொண்டாடிட்டு வந்துடுதுக. உன்னை சொல்லி தப்பில்ல; உனக்கு இவ்ளோ இடம் குடுத்து வச்சிருக்காரே... அவரை சொல்லணும்... என்றேன். சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த அப்பா, ஏண்டா அவன திட்டுறே... அப்பான்னு சொன்னா என்ன தப்பு... என்றபடியே சோமு கையிலிருந்த புத்தகத்தை வாங்கி, அவன் கொடுத்த மீதிக் காசை, அவனிடமே திருப்பிக் கொடுத்தார். அப்பா... உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன், இவன் முழியே சரியில்லேன்னு... நாங்க இல்லாத நேரத்துல இவன வீட்டுக்குள்ள விடுறீங்க... ஒரு நா எல்லாத்தையும் சுருட்டிட்டு கம்பி நீட்டிரப் போறான்... என்றேன். இந்தப் பையன் இங்கேயே வளந்தவன்; இவனோட அம்மா இங்க நாலஞ்சு வீட்டிலே வேலை செஞ்சிட்டு இருந்தாளாம். பாவம் அஞ்சு வருஷத்துக்கு முன் இறந்து போயிட்டா. அப்போ இவனுக்கு பத்து வயசாம்; போலியோவால நடக்க முடியாத இவன், இங்கே இருக்கறவங்களுக்கு அவனால முடிஞ்ச ஒத்தாசையைச் செஞ்சு, அவங்க குடுக்கறதை சாப்பிட்டு, மழைக்கு மாடியிலே ஒதுங்கி, காசு வாங்காத காவல்காரனா இருக்கான்; வயசான காலத்துல, பகல்ல பேச்சுத் துணைக்கு இருக்கானேன்னு நான் சந்தோஷப்படுறேன்; அவனைப் போயி சந்தேகப்படறயே... என்றார், அப்பா.
அப்பா சோமுவிடம் காட்டும் நெருக்கம் மட்டுமல்ல, அவனைப் பார்த்து, என் நான்கு வயது மகன் முரளியும், அதே போன்று காலை சாய்த்து சாய்த்து நடப்பது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டிற்குள் நுழைந்ததும், ஓடிவந்து என் கால்களைக் கட்டிக் கொண்ட என் மகன், அண்ணே... சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்களாண்ணே? என்றான். என் கோபத்துக்கு அளவேயில்லை. அப்பா...உங்க பேரன் பேசுனத கேட்டீங்களா... எல்லாம் சோமுப் பயலப் பாத்துக் கத்துக்கிட்டது தான். இன்னும் என்னவெல்லாம் கத்துக்கப் போறானோ... இனிமேல், அந்தப் பயல், இந்த வீட்டு வாசப்படியை மிதிக்கக் கூடாது, சொல்லிட்டேன்... என்றதும், எதுவும் பேசாமல், அறைக்குள் சென்று விட்டார், அப்பா. எரிச்சலோடு மொட்டை மாடிக்குச் சென்று சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே, இந்தப் பயலை இனியும் இந்த அப்பார்ட்மென்ட்டில் விட்டு வைக்கக்கூடாது; இவனை வெளியேற்ற என்ன செய்யலாம்... என யோசித்தேன். அப்போது தான், மொட்டை மாடி கதவின் மூலையில், சோமுவின் மாற்றுத் துணிகள், சுருட்டி வைக்கப்பட்டுள்ளதை பார்த்தேன். கொஞ்சம் தயக்மாக இருந்தாலும், இவனை வெளியேற்ற இதை விட வேறு வழியில்லை என நினைத்து, என் மொபைல் போனை அவன் துணிகளுக்குள் ஒளித்து வைத்தேன். பின், கீழே இறங்கி, அறைக்கு வந்து விட்டேன்.
சிறிது நேரம் ஆனதும், என் போன் எங்கே? என்று மனைவியிடம் கேட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே, எனக்குத் தெரியாது, என்றாள். எங்க வச்சேன்; கொஞ்ச நேரத்துக்கு முன் கூட என் பிரண்டுக்கு போன் செய்தேனே... என்றேன். வேற எங்கேயாவது போனீங்களா? சிகரெட் பிடிக்க மொட்டை மாடிக்கு போனேன். ம்... இப்ப ஞாபகம் வருது... சிகரெட் பத்த வைக்கும் போது போனைக் கீழே வெச்சேன்; வரும் போது எடுக்க மறந்துட்டேன்... என்றவாறு, மொட்டை மாடிக்கு போனேன். நாலஞ்சு சீனியர் சிட்டிசன்ஸ் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நடுவில் கெக்கே பிக்கே என்று ஏதோ பேசியபடி இருந்தான், சோமு. அவர்களிடம், என் போனைப் பாத்தீங்களா? என்று கேட்டேன்; இல்லை என்றனர். இங்கே தானே வச்சேன்... எப்படி காணாமப் போயிருக்கும்... என்றதும், ஒரு முதியவர், தன் மொபைல் போனைக் கொடுத்து, இந்தாங்க உங்க நம்பரை டயல் பண்ணிப் பாருங்க... என்றார். உடனே, என் நம்பரை டயல் செய்தேன். எல்லாரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தனர். நான் நினைத்த மாதிரியே ஒருவர், கதவுக்குப் பின்னாலேர்ந்து கேக்குது... என்றவர், சோமுவின் துணி குவியலிலிருந்து போனை எடுத்தார். டேய் சோமு... இது எப்படிடா இங்கே வந்தது? ரொம்பவும் சாதாரணமாகக் கேட்டார், அந்த முதியவர். எனக்குத் தெரியாதே... திருட்டுப் பய, என் போனைத் திருடி, ஒளிச்சி வச்சிருக்கான். நீங்க என்னடான்னா, எப்படி வந்ததுன்னு அவங்கிட்டயே கேக்கறீங்களே... என்றேன்.
தம்பி அவன் அப்படி செய்யக்கூடியவனில்ல... என்றனர் அங்கிருந்த முதியவர்கள். அதான் கையும் களவுமா பிடிச்சாச்சே... பின்ன என்னா... எழுந்திருடா... இனிமே இந்த வீட்டுப் பக்கம் கால வச்சே தோல உரிச்சிடுவேன்... என்றேன். தம்பி... தீர விசாரிக்காம, இப்படி பழி போடுறது ரொம்ப பாவம், என்றார் ஒருவர். தீர விசாரிக்கணுமா... அப்ப, போலீசை வரச் சொல்லுவோம். அவங்க வந்து விசாரிக்கட்டும். அண்ணே... நான் அதைத் தொடக்கூட இல்லே... எப்படி வந்ததுன்னு எனக்குத் தெரியாதுண்ணே... என்றான் பரிதாபமாக சோமு. ஏண்டா நாயே... திருடுறதும் திருடிட்டு பொய் வேற சொல்றயா... என்று கூறி, அவனை, தரதரவென்று இழுத்து வந்து, காம்பவுண்டுக்கு வெளியே தள்ளி, கேட்டை இழுத்து மூடினேன். இத பாருங்க... எல்லாருக்கும் சேத்து தான் சொல்றேன்... இன்னிக்கு எனக்கு நடந்தது, நாளைக்கு உங்களுக்கும் நடக்கலாம். இனிமே, அந்தப் பய இந்தக் காம்பவுண்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்கக் கூடாது. மீறி வந்தான்னா, அப்புறம் போலீசிலே தான் ஒப்படைக்க வேண்டி வரும்... என்றேன். அண்ணே நான் திருடலண்ணே... இங்க இருக்கவங்கள விட்டா எனக்கு யாரையும் தெரியாதுண்ணே... என்னைத் துரத்திடாதீங்க... என்றான், கதறி அழுதபடி! ச்சீ நாயே... யாருடா உனக்கு அண்ணன்... அதான் திருடக் கத்துக்கிட்டியே, அப்புறமென்ன பெரிய ஆளாயிடுவே... இனிமே இந்த வீட்டுப் பக்கம் உன்னைப் பாத்தா கொன்னு போட்டுறுவேன்; ஓடிப் போயிடு... என்றேன் கோபத்தோடு!
மறுநாள், சோமுவை அந்தப் பக்கம் காணவில்லை. ஒரு வாரத்திற்கு பின் — மாலையில், அலுவலகத்திலிருந்து வந்ததும், நான் உங்கிட்டே கொஞ்சம் பேசணும்... என்றார் அப்பா. சொல்லுங்கப்பா... என்றேன். நான் முதியோர் இல்லத்துல சேர்ந்துடலாம்ன்னு இருக்கேன்... என்னப்பா ஆச்சு உங்களுக்கு... ஏன் இப்படி பேசுறீங்க... உங்க மருமக ஏதாவது சொன்னாளா? அவ தங்கமான பொண்ணு; என் பொண்ணா இருந்தா கூட, என்னை இந்தளவு பாத்துக்க மாட்டா... அப்புறம் ஏன் இப்படி ஒரு முடிவு? கொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரியில்ல. பகல்ல தனியா இருக்கும் போது, ஏதேதோ நினைப்பு வருது; தனியா இருக்க பயமா இருக்கு. அதான், அந்த காலத்துல வானப்பிரஸ்தம் போற மாதிரி, நானும் முதியோர் இல்லம் போகலாம்ன்னு இருக்கேன். பக்கத்துல தான் இருக்கு; காரிலே ஏறினா, அரை மணி நேரம். உனக்கு எப்ப முடியுமோ அப்ப வா... வர முடியாவிட்டாலும், தப்பா நினைக்க மாட்டேன், என்றார். அப்பாவின் பிடிவாதம் தெரியும் என்பதால், அவரை கவலையாக பார்த்தேன்.நீ ஒண்ணும் கவலைப்படாதே... என்னோட ரெண்டு நண்பர்கள் அங்க தான் இருக்காங்க; நல்ல சாப்பாடு போட்டு, நல்லா கவனிச்சுக்கிறாங்களாம். பணமும் அதிகமா கேக்கல. என் பென்ஷன் பணமே போதும், என்றார். அப்பா எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது எனக்கு புரிந்து விட்டது. சோமு மீது நான் வீண் பழி போட்டது, அப்பாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் கவிதாவின் வேலை.
அப்பா முதியோர் இல்லம் சென்று இரண்டு ஆண்டுகளாகி விட்டது. பார்ம் ஹவுசையும் விற்று விட்டதால், தவணை கட்ட வேண்டியது குறைந்தது. கம்பெனியில் சம்பளமும் உயர்ந்ததால், பழைய காரை விற்று, புது கார் வாங்கலாம் என்று புரோக்கரிடம் சொல்லி வைத்தேன். பழைய கார் என்பதால், 40 ஆயிரம் ரூபாய் என்றால் முடிச்சிடலாமா... என்று கேட்டார் புரோக்கர். சரி என்றேன். அடுத்தநாள் காலையில், டி.ஓ., பார்மில் கையெழுத்து போட வரச் சொல்லியிருந்தார். காலை, 11 மணி — புரோக்கருக்காக காத்திருக்கையில், அவருடன், அவனும் வந்தான். இவனா... இவன் எதற்கு இங்கு வர்றான்... என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, சார்... இவர் தான் பார்ட்டி... நெட் கேஷ், என்றார் புரோக்கர். அண்ணே நல்லா இருக்கீங்களா? என்றான் சோமு. சார்... இவரை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா... என்றார் புரோக்கர். இவங்க வீட்டிலே தான் பல வருஷமா தங்கியிருந்தேன், என்றான், சோமு. கையெழுத்து போட்டு, வெளியே வந்த போது, பின்னாலேயே வந்தான், சோமு. அவனிடம் மன்னிப்பு கேட்கலாமா என ஒரு நிமிடம் நினைத்தேன். ஆனாலும், ஈகோ தடுத்தது. எப்படி இருக்க சோமு? நல்லா இருக்கேண்ணே, ஏதோ உங்க ஆசிர்வாதம், என்றான். நக்கல் செய்றயா... என்னோட காரையே விலைக்கு வாங்குற அளவுக்கு வளந்துட்ட திமிரா... நான் திருட்டுப் பட்டம் கட்டப் போக, இப்போ நிஜமாவே திருடனாயிட்டான் போலிருக்கு... என நினைத்தேன். அதை புரிந்து கொண்டவன் போல், அண்ணே... இந்த ரெண்டு வருஷத்தில வாழ்க்கையிலே எவ்வளவோ கத்துக்கிட்டேன்; ஆனா, திருட மட்டும் கத்துக்கல, என்றான் என்னை உற்று நோக்கியபடி! எனக்கு செவிட்டில் அறைந்தது போலிருந்தது.
அப்ப இதெல்லாம் எப்படி? என்றேன் ஆச்சரியத்தை உள்ளடக்கி! என் கால் சூம்பி இருக்கிறதாலே பள்ளிக் கூடத்துல எல்லாரும் என்னை, நொண்டின்னு கேலி செய்தாங்க. அதனால, பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு எங்கம்மா கிட்ட சொன்னேன். எங்கம்மாவும், உன்னைக் கேலி செய்தா நீ போக வேணாம் ராசான்னு சொல்லிடுச்சி. எங்கம்மாவுக்கு நான் ஒத்த பிள்ளைங்கிறதாலே எப்பவும் எங்கம்மா என்கிட்ட பேசிட்டே இருக்கும். அதனால, எனக்குப் பேசறதத் தவிர, வேறு எதுமே தெரியாது. ஆனா, எங்கம்மா தெய்வம்... அது கத்துக் குடுத்த பேச்சு தான், இன்னிக்கு எனக்கு சோறு போடுது, என்றான். எனக்கு அவன் பேசுவது புரியவில்லை. நீங்க வீட்டை விட்டுத் துரத்தினதும் எனக்கு எங்க போறது, என்ன செய்றதுன்னு ஒண்ணுமே புரியல. உங்கப்பா தந்த காசு கொஞ்சம் இருந்துச்சு. அதை வெச்சு ரெண்டு மூணு நாள் டீயும், பன்னும் சாப்பிட்டேன்.
அப்புறம், ஒருநாள் தெரு முனையில டீக்கடையில என்னைப் பார்த்து, எனக்காக ரொம்ப வருத்தப்பட்டார், அப்பா. கையில கொஞ்சம் காசு குடுத்து, வச்சிக்கோ... கூடிய சீக்கிரமே உனக்கு ஒரு வழி செய்றேன்ன்னு சொன்னார். கொஞ்ச நாள்லே, முதியோர் இல்லத்திலே சேந்துட்டேன்; நீ அங்கே வான்னு சொன்னார். அங்க அவரோட நண்பர்களோட சேர்த்து, பத்து பேர் உட்கார்ந்திருந்தாங்க. அவங்க எல்லாம் என்னைப் பேசுன்னு சொன்னாங்க... நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தேன். ஒரு மணி நேரம் போனதும் எல்லார்கிட்டயும் ஆளுக்கு, 20 ரூபா வாங்கி குடுத்தார் அப்பா; நான் வேணாம்ன்னு தான் சொன்னேன். ஆனா, அப்பா தான், கட்டாயப்படுத்தி வாங்கிக்க வச்சார், என்றான். பேசறதுக்குக் காசா... இவன் என்ன கதை விடுகிறான்... என நினைத்தேன்.
அப்புறம் இன்னும் நிறைய பேர் அவங்களோட வந்து பேசச் சொன்னாங்க; பாவம் அவங்க... பேசறதுக்கு ஆளில்லாம தவிச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம், அஞ்சு மணி நேரம்ன்னு பேசுவேன். அப்புறமா, வேறு சில இடங்கள்லேர்ந்தும் என்னைக் கூப்பிட்டாங்க. இப்ப, ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய்ன்னு வருது. ஒண்டிக்கட்டை எனக்கு எதுக்கு அவ்வளவு பணம்... இந்த கார் கூட எனக்காக வாங்கல. பக்கத்திலே உடல் ஊனமுற்றோர் இல்லம் இருக்கு; அதுக்கு தான், என்றான். சோமுவின் முன், கூனி குறுகி நின்றேன். என்னை மன்னிச்சிடு சோமு. என்னண்ணே பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு... நீங்க அன்னிக்கு என்னை விரட்டலேன்னா, நான் காலம்பூரா அப்படியே இருந்திருப்பேன்; இப்போ பாருங்க என்னால எவ்வளவு பேர் சந்தோஷமாயிருக்காங்க. இதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்; சரிண்ணே நேரமாயிடுச்சு; இன்னிக்கு அப்பாவைப் பாக்கப் போகணும்... ஆறு மாசமா நீங்க வரவேயில்லேன்னு அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம். அதுவும், முரளி தம்பியைப் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்காரு. முடிஞ்சா ஒருமுறை வந்து பாத்துட்டுப் போங்க... என்ன தான் நான், நாள் முழுவதும் பேசினாலும், பெத்த புள்ளயோட பேசற மாதிரி வருமா, என்றான். நான் பேச்சற்று நின்றேன்!
|
|
|
|