|
சாரங்கராயர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். உள்ளதை உள்ளபடி கூறி விடுவார். அவருடைய திறமையை அறிந்த மன்னன், தன்னுடைய ஆஸ்தான ஜோதிடராக நியமித்தான். சாரங்கராயருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘காளிங்கராயன்’ என்று பெயரிட்டார். தன் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த சாரங்கராயர் திகைத்துப் போனார். பல காலம் பிள்ளைஇல்லாமல் இருந்த பின் பிறந்த செல்லப்பிள்ளை, பின்னாளில் திருட வேண்டும் என்பது விதியின் பயனாய் இருப்பதை அறிந்து மனம் வருந்தினார். அவனை தர்மவழியில் நல்ல பிள்ளையாக வளர்க்க முடிவு செய்தார். காளிங்கனுக்கு தர்ம சாஸ்திரங்களையும், ஜோதிடத்தையும் கற்றுத் தந்தார். அவன் செய்யும் சிறுதவறுகளைக் கூட கண்டித்து, வாழும் நெறிமுறைகளைக் கற்றுத் தந்தார். காலம் சென்றது. சாரங்கராயரும் அவரது மனைவியும் காலமாகி விட்டனர். மன்னன் காளிங்கராயனை அரண்மனை ஜோதிடராக நியமித்தான்.
காளிங்கராயன் அரண்மனைக்குள் வந்ததும் அங்குள்ள அரிய பொருட்கள் அவனது கவனத்தைக் கவர்ந்தன. அவற்றைத் திருட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் தோன்றியது. அதே நேரம் அவனது தந்தை கற்றுத்தந்த தர்ம சாஸ்திரங்கள் அவனைத் திருட்டில் இருந்து தடுத்தன. திருடினால் பாவம், மாட்டிக்கொண்டால் அவமானம், தண்டனை... இவையெல்லாம் அவன் கண் முன் நிழலாடின. தனக்கு ஏன் இந்த கெட்ட எண்ணம் தோன்றுகிறது என தன் ஜாதகத்தை அவன் ஆராய்ந்தான். பிரம்மதேவன் தன் தலையில் எழுதியபடி தான் திருட வேண்டும் என்ற விதியைப் புரிந்து கொண்டான். விதியை மாற்ற முடியாது. அதே நேரம், திருட்டுப்பழியால் அவமானப்படவும் கூடாது என்பதால், பலமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். எதைத் திருடினால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நீதி சாஸ்திரத்தில் அறிந்தான். கல், மணல் போன்றவற்றை திருடினால் தண்டனை இல்லை என்பதை அறிந்து அதை திருடுவது என முடிவெடுத்தான். அரண்மனைக்குச் சென்ற காளிங்கராயன் கட்டடம் கட்ட போடப்பட்டிருந்த மணலை ஒரு கைப்பிடி அள்ளினான். அதை ஒரு துணியில் முடிந்து கொண்ட பிறகு, யாரும் தன்னைப் பார்க்காத போது வீட்டுக்குத் திரும்பினான். தன் தலைவிதிப்படி அரண்மனையில் இருந்து திருடினாலும் அறிவைப் பயன்படுத்தியதால் தண்டனைக்கு ஆளாகாமல் தப்பித்தான். ஜாதகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். குழந்தைகளுக்கு நல்லறிவை ஊட்டி வளர்த்தால் அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது. |
|
|
|