|
சுக போகத்தில் திளைத்த மன்னன் வீரசேனன், உலகிலுள்ள எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஒருநாள் வீரசேனனைக் காண ராஜகுரு வந்திருந்தார். அவரிடம் வீரசேனன், “குருவே! என்னை விட உலகில் சுகபோகம் அனுபவிப்பவர் யாரும் இருக்கிறார்களா?” என்று ஏளனமாக கேட்டான். மன்னனின் மமதையை உணர்ந்த ராஜகுரு,“ஏன் இல்லை... நம் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார்” என்றார். “அப்படியா... யார் அது? நான் அவரைச் சந்திக்க வேண்டுமே! ” என்றான் மன்னன். இருவரும் தேரில் புறப்பட்டனர். குறிப்பிட்ட இடத்தில், ராஜகுரு தேரில்இருந்து இறங்கி நடந்தார். வீரசேனனும் பின் தொடர்ந்தான். வெயில் கடுமையைப் பொருட்படுத்தாமல் முதியவர் ஒருவர் அங்கே வயலில் உழுது கொண்டிருந்தார். அவரை சுட்டிக் காட்டிய ராஜகுரு, “மன்னா! உன்னை விட சுகம் அனுபவிப்பவர் இந்த விவசாயி தான்,” என்றார். ‘வெயிலில் காயும் இவரா எல்லாவற்றையும் அனுபவிப்பவர்....’ஒன்றும் புரியாமல் வீரசேனன் விழித்தான். அவனது விழிப்பை ரசித்த ராஜகுரு, “உழைப்பின் அருமை அறிந்த இவருக்கு வேளாவேளைக்கு நன்றாகப் பசிக்கும். குடிப்பது கூழ் என்றாலும் ருசியாக இருக்கும். இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். எவனொருவன் பகலில் உழைத்து, இரவில் நிம்மதியாகத் துõங்குகிறானோ அவனே உலகை அனுபவிக்கிறான்,’ ’என்றார். வீரசேனன் அன்று முதல் கர்வத்தை விட்டான். மக்களுக்காக பல திட்டங்கள் தீட்டி அலைந்து திரிந்து நிறைவேற்றினான்.
|
|
|
|