|
காஞ்சிபுரத்தில் வசித்த பிச்சைக்காரனுக்கு ஒருநாள் எந்த வீட்டிலும் உணவு கிடைக்கவில்லை. சோர்வுடன் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். அந்த வீட்டுக்காரர் அவ்வூர் வரதராஜப்பெருமாளின் பக்தர். அவர் பக்தியுடன் பெருமாளை,“அப்பா...வரதப்பா! கஞ்சி வரதப்பா....!” என்று சொன்னபடியே பெருமாளுக்கு பொங்கல் நைவேத்யம் செய்து கொண்டிருந்தார். காஞ்சிபுரத்திற்கு ‘கஞ்சி’ என்றும் ஒரு பெயருண்டு. ‘காஞ்சியில் வசிக்கும் பெருமாளே’ என்று அவர் பக்திப்பூர்வமாகச் சொன்னதை, தவறாகப் புரிந்து கொண்ட பிச்சைக்காரன், தான் பசிக்கு தான், வீட்டுக்குள் இருந்து கஞ்சி வரப்போகிறது என்று எண்ணி உற்சாகம் ஆனான். கஞ்சிக்காக காத்திருந்தான். வெளியே வந்த பக்தரின் கையில் கஞ்சிக்கலயம் இல்லாதது கண்ட பிச்சைக்காரன் ஏமாந்து போனான். “சாமி...கஞ்சி வரதப்பா என்று உள்ளிருந்து சொன்னீர்களே! நான் அதற்காக காத்திருந்தேனே!” என்ற பிச்சைக்காரனிடம், கஞ்சி என்றால் காஞ்சி என்பதன் சுருக்கம் என்று விளக்கமளித்த பக்தர் மனம் இரங்கி வயிறார உணவும் அளித்தார். திருப்தியாகச் சாப்பிட்ட அவன் வாயார வாழ்த்திப் புறப்பட்டான். இந்தக் கதையின் அடிப்படையில் தான், ‘வரதப்பா...வரதப்பா...கஞ்சி வரதப்பா... என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பிறந்தது.
|
|
|
|