|
முசுகுந்த சக்கரவர்த்தி தன் முற்பிறவியில், வசிஷ்ட மகரிஷியிடம் முருகனின் மகிமை பற்றி அறிந்து கொண்டார். “மகரிஷியே! இனி நான் முருகனை தவறாது பூஜிப்பேன்” என்றார்.முசுகுந்தரின் பக்தி கண்ட முருகன் அவர் முன் காட்சிஅளித்து, விரும்பிய வரம் தருவதாக தெரிவித்தார். “ஆறுமுகனே! பூலோகம் முழுவதையும் ஆளும் பாக்கியம் வேண்டும். வீரபாகு முதலான நவவீரர்களும் எனக்கு பக்க பலமாக உடனிருக்க வேண்டும்,” என கேட்டார். முருகனும், “அப்படியே ஆகட்டும்” என அருள்புரிந்து விட்டு, வீரபாகுவை அழைத்து. முசுகுந்தருக்கு தான் அளித்த வரம் குறித்து தெரிவித்தார். “ முருகா! உன் அடிமையான நாங்கள், பூலோகத்தில் ஒரு மனிதனுக்கு எப்படி தொண்டு செய்ய முடியும்?” என மறுத்தார் வீரபாகு. உடனே முருகன், தனக்கு கீழ்ப்படியாத வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களை, மனிதர்களாக பிறக்கச் செய்தார். அவர்கள் முசுகுந்த சக்கரவர்த்தியின் படைத் தலைவர்கள் ஆயினர். அதன்பின், நவவீரர்களின் மனைவியரான ஒன்பது பேரும், பூமியில் ராஜகுமாரிகளாகப் பிறந்தனர். அவரவர் தங்களுக்குரியவரை கணவராக அடைந்தனர்.
புஷ்பகந்தி என்பவள் வீரபாகுவை மணம் புரிந்தாள். இவர்களுக்கு சித்திரவல்லி என்னும் மகள் பிறந்தாள். அவள் வளர்ந்து பெரியவளானதும், முசுகுந்த சக்கரவர்த்தியை மணந்தாள். அவர்களுக்கு அக்னிவர்மன் என்னும் மகன் பிறந்தான். மகாராணியான சித்திரவல்லி தனக்குத் துணையாக ஒரு கிளியை வளர்த்தாள். அதைத் தன் உயிராக மதித்தாள். ஒருநாள் கிளியை யாரோ திருடி விட்டனர். முசுகுந்தர் கிளியை கண்டுபிடிக்கும்படி தளபதிகளுக்கு உத்தரவிட்டார். அது எமபுரத்தில் இருப்பதை அறிந்த வீரபாகு, எமனுடன் போரிட்டு வெற்றி பெற்றார். கிளியை மீட்டார். இதற்கிடையே, இந்திரலோகத்தின் மீது வலாசுரன் என்பவன் போர் தொடுத்தான். இந்திரன் பூலோகத்தில் இருந்த முசுகுந்த சக்கரவர்த்தியை உதவிக்கு அழைத்தான். முசுகுந்த சக்கரவர்த்தியும், வீரபாகுவும் படைகளுடன் விண்ணுலகம் புறப்பட்டனர். போரில் வலாசுரன் கொல்லப்பட்டான். தனக்கு உதவிய முசுகுந்தருக்கு விருந்தளித்தான் இந்திரன். அங்கு சிவபார்வதியின் நடுவில் குழந்தை முருகன் வீற்றிருக்கும் சிலை ஒன்று இருப்பதைக் கண்ட முசுகுந்தர், அதன் அழகில் ஈடுபட்டு மனம் மகிழ்ந்தார். அச்சிலையைப் பரிசாகப் பெற்று பூலோகம் வந்தார். திருவாரூரில் அதைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தன் பக்தனுக்காக தன் தளபதிகளையே அனுப்பி வைத்த முருகனின் கருணை அளவிடற்கரியது.
|
|
|
|