|
ஒருமுறை போர் ஒன்றில் தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்கள், தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம் தஞ்சம் அடைந்தனர். தேவர்களின் குருவான பிரகஸ்பதிக்குத் தெரியாத வித்தை ஒன்றை தான் கற்கச் செல்வதாகவும், தான் வரும் வரை எல்லா அசுரர்களும் தவ வாழ்வில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தரிவித்தார். அதன்படி அசுரர்கள் தவமிருக்கத் தொடங்கினர். இதையறிந்த தேவர்கள் அசுரர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். ஆனால், சுக்ராச்சாரியாரின் தாய் தன் தவசக்தியால் அசுரர்களைக் காப்பாற்ற உதவினாள். இதனால் கோபமடைந்த தேவர் தலைவன் இந்திரன் அவளுக்கும் தொல்லை கொடுத்தான். அவளோ இந்திரனை விரட்டியடித்தாள். பயந்து போன அவன் திருமாலை சரணடைந்தான். அவர் சக்கராயுதத்தை ஏவி சுக்ராச்சாரியாரின் தாயைக் கொன்றார். இதை அறிந்த அவளது கணவர் பிருகு மகரிஷி, திருமாலிடம், “என் மனைவியைக் கொன்ற பாவம் தீர பூலோகத்தில் ஏழு முறை மனிதனாய் பிறப்பாய்,” என சபித்தார். தன் தவ வலிமையால் மனைவியை மீண்டும் உயிர்ப்பித்தார். இந்த சாபத்தின்படி, திருமால் மனித வடிவில் தத்தாத்ரேயர், பரசுராமர், ராமர், வேத வியாசர், கிருஷ்ணர், உபேந்திரர் என ஆறு முறை பூலோகத்தில் பிறந்தார். ஒவ்வொரு முறை கலியுகம் முடியும் போதும் கல்கி என்னும் பெயரில் பிறக்க இருக்கிறார். இந்த வரலாறு வாயு புராணத்தில் இடம் பெற்றுள்ளது. |
|
|
|