|
ஒருமுறை, ஐராவதம் என்ற யானை மேல் பவனி வந்தான், இந்திரன். எதிரே வந்த துர்வாச முனிவர், வைகுண்டத்தில் பிரசாதமாக பெற்ற மாலை ஒன்றை, இந்திரனிடம் அளித்தார். அதை வாங்கியவன், அலட்சியமாக யானையின் மத்தகத்தில் வைத்தான். அது, தும்பிக்கையால் மாலையை தூக்கி, காலில் போட்டு மிதித்து விட்டது. இந்திரனின் இந்த அலட்சிய செயல், முனிவரைக் கோபப்படுத்தவே, செல்வச் செருக்கால் தானே இப்படி செய்தாய்; இனி, செல்வ வளமின்றி தேவலோகம் நலிந்து போகட்டும்... என, சாபமிட்டார். நடுங்கிப் போன இந்திரன், சாப விமோசனம் கேட்டான். திருமால் கூர்மவதாரம் (ஆமை வடிவம்) எடுக்கும் காலத்தில், உனக்கு விமோசனம் கிடைக்கும்... என்றார் துர்வாசர்.
தேவர்கள் வலிமை இழந்ததால், அசுரர்கள் ஆட்டம் போட்டனர். தங்களை பாதுகாக்கும்படி திருமாலை வேண்டினர், தேவர்கள். பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் என்னும் மருந்தை பெற்று அருந்தினால், நிலையான வாழ்வு வாழலாம்... என்ற அவரது ஆலோசனையை ஏற்றனர். ஆனால், இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அசுரர்களிடம் நட்பு கொள்வது போல நடித்து, அவர்களையும் உதவிக்கு அழைத்தனர். வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடல் கடையப்பட்டது. ஆனால், மத்து கடலின் அடியில் புதைந்து கொள்ளவே, தேவ, அசுரர்களால் கடலை கடைய முடியவில்லை. உடனே, திருமாலை பிரார்த்தித்தனர், தேவர்கள். அவர் ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்று, மந்தார மலையாகிய மத்தை, தன் முதுகில் தாங்கிக் கொண்டார். பின், தேவ, அசுரர்கள் எளிதில் கடலைக் கடைந்தனர். அப்போது, வாசுகி பாம்பு, வலி தாளாமல் விஷத்தைக் கக்கவே, இரு தரப்பினரும் மயக்க நிலையை அடைந்தனர்.
இதையறிந்த சிவன், அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். அப்போது, விஷத்தின் ஒரு பகுதி கீழே சிதறியது. அந்த சிதறலில் இருந்து பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளும், விஷச்செடி மற்றும் கொடிகளும் தோன்றின. தொடர்ந்து அனைவரும் கடலைக் கடையவே, திருமாலின் அம்சமான தன்வந்திரி, அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அவரைத் தொடர்ந்து லட்சுமி தாயார் வெளிவந்தாள். இந்திரனும் இழந்த செல்வத்தை அடைந்தான். ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது வரும் கஷ்டங்களே விஷப்பூச்சிகளும், விஷச்செடிகளும்! அதிலிருந்து கிடைக்கும் நன்மையே அமிர்தம். கஷ்டங்களைப் பெரிதுபடுத்தாமல், எது வந்தாலும் ஏற்போம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால், திருமாலின் திருவருளைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்! |
|
|
|