|
சக்கரவர்த்தி அக்பர் ஒருநாள், அடர்ந்த வனத்திற்கு வேட்டைக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் பீர்பாலும் சென்றார். காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி தவறிப்போனது. நேரமாக ஆக பசி இருவரையும் வாட்டி வதைத்தது. அக்பர் ஏதாவது உணவு கிடைக்குமா எனத் தேடத்தொடங்க, பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகினை ரசித்தபடியே பெரியமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து ராம நாம ஜபத்தை ஜபிக்கத்தொடங்கினார். மேலும் சிறிது நேரம் கழிந்தது. அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டுவாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்றார்.
பீர்பாலோ, மன்னா, என் வயிறை நிரப்புவதைவிட ராமநாமத்தால் என் மனதை நிரப்புவதே எனக்குப் பிடித்தமாக இருக்கிறது. எனவே நான் உணவை சேகரித்துச் செல்லும் நிலையில் இல்லை என்று பதிலளித்தார். அதைக் கேட்டு சினம் கொண்டாலும், வேறுவழியின்றி தானே புறப்பட்டுச் சென்று தொலைவில் ஒரு வீட்டைக் கண்டு அங்கே சென்று உணவைப் பெற்று உண்டார். பிறகு பீர்பாலுக்காகவும் கொஞ்சம் பெற்றுவந்தார். அப்போதும் ராமநாமம் சொல்லிக் கொண்டிருந்தார் பீர்பால். அவரிடம் உணவைத் தந்த அக்பர், நான் எடுத்த முயற்சியால் தான் உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபிக்கும் ராமநாமத்தால் அல்ல! என்று கொஞ்சம் கேலியாகச் சொன்னார். அரசே! உணவு வேண்டி சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது. ஆனால் என் பிரபு ராமரோ எனக்கான உணவை மாமன்னரான உங்கள் கையில் கொடுத்தனுப்பியுள்ளார். இது தான் ராமநாமத்தின் மகிமை! என்று கூறிவிட்டு அமைதியாக உணவைப் புசிக்கத் தொடங்க, அக்பர் வாயடைத்து நின்றார். |
|
|
|