Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » துறவிகளும் விலக்காத உறவு!
 
பக்தி கதைகள்
துறவிகளும் விலக்காத உறவு!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஔவை. மாத்ரு தேவோபவ என்பது ஸ்மிருதி வாக்கியம். சங்க இலக்கியங்கள், வேதங்கள் முதல் இக்காலக்கவிஞர்வரை பலரும் தாய்க்கு முதலிடம் கொடுத்துப் பாடியுள்ளனர். இறைவனின் படைப்பில் சற்றும் தன்னலமற்ற ஒரு உன்னதமான படைப்பு தாய்தான். பத்து மாதம் சுமந்து பல இன்னல்களை அனுபவித்து குழந்தையை ஈன்றெடுக்கிறாள். குழந்தை பிறந்தபிறகும் அதை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை தாயானவள் அன்பின் வெளிப்பாடாகச் செய்கிறாள். முற்றும் துறந்த துறவியாரும்கூட தாயன்பைத் துறக்கவில்லை. ஆதிசங்கரர் தன் அன்னையின் இறுதிக்காலத்தில் வந்து தாயை மடியில் கிடத்திக்கொண்டு நெஞ்சக் குமுறல்களையெல்லாம் கொட்டி மாத்ருகா பஞ்சகம் என்ற அமரத்துவம் வாய்ந்த பாடலைப் பாடுகிறார். உணர்ச்சிகளின் உத்வேகத்தில் வெளிப்பட்ட அன்புமொழியே மாத்ருகா பஞ்சகம்.

தாயே, நான் உன் வயிற்றில் தோன்றிய நாள் முதல் என்பொருட்டு எத்தனை துன்பங்களை இன்பமாகக் கருதி வரவேற்றிருப்பாய். உண்ண முடியாமல், உறங்க முடியாமல் எவ்வளவு தவித்திருப்பாய்? பிடித்தமான உணவுகளை நீக்கி பத்தியமாக இருந்திருப்பாயே? எனக்கு இதமாக இருக்க வேண்டுமென்பதற்காக மேல்முகமாகப் படுத்து மூச்சுத் திணறியிருப்பாயே? அன்னையே, நான் பிறந்தபிறகும் எனக்காக உடலால் எவ்வளவோ பாடுபட்டாய் நீ செய்த தியாகத்திற்கு பலன்செய்ய என்னால் இயலாதே என்று சங்கரர் சொல்கிறார். வாழ்க்கை, உறவுகளையெல்லாம் ஒரு நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தடிகள்கூட தாயின் உறவைத் தள்ளவே இல்லை. துறவு பூண்டபோதும் தாயின் அந்திமக்காலம்வரை அந்த ஊரிலேயே இருந்தார். தாய் இயற்கை எய்தியதும் அவரது உடலுக்குத் தீ மூட்டும்போது பட்டினத்தார் பாடிய பாடல்களுக்கு இணையே இல்லை.

வட்டிலிலும் தொட்டிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னக் காதலித்து - முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டி வளர்த்த தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்

என்று கதறி அழுகிறார்.

அரிசியோ யான் இடுவேன் ஆத்தாள் தனக்கே

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - ருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப் பூ
மானே என அழைத்த வாய்க்கு

என்று உருகுகிறார்.

காய்ந்த விறகுகள் அடுக்கிய சிதையில் வைத்தால் தன் தாயின் உடல் நோகுமென்று பச்சை வாழைமட்டையில் தாயின் பூதவுடலைக் கிடத்தி,

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க மூள்கவே

என்று மனதார பரமேஸ்வரனிடம் பிரார்த்திக்க, தீ மூண்டெழுந்தது. அக்னிதேவன் அன்னையை அடக்கம் செய்து கொண்டான். மிகப்பெரிய ஞானிகளுமே தாய்க்கு இப்படி ஏற்றம் கொடுத்துள்ளார்கள்.

மகாபாரதத்தில் யக்ஷப்ரசனம் என்ற சம்பவத்தில், யட்சன் தருமரிடம், பூமியைக்காட்டிலும் பெரியது எது? என்று கேட்கும்போது, தாய் என்று சொல்கிறார். உலகத்தில் உள்ள மொழிகளில் உயர்ந்ததும், அழகானதுமான சொல் அம்மா என்பதுதான். எவ்வளவு கொடூரமான மனம் உடையவனும் உடல்நலம் குன்றிப் படுக்கையில் இருக்கும்போது அம்மா என்றுதான் அழைப்பான். தாய் வேறு - தெய்வம் வேறில்லை. அதனால் தான் தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை என்கிறார்கள். இந்து மதத்தில் காசி யாத்திரை என்பது ஒரு புனிதமான செயல். காசித் தலத்துக்குச் செல்லும்போது கயா சிரார்த்தம் அவசியம் செய்யவேண்டியது என்பர். கயா சிரார்த்தத்தில் தாய்க்கு மட்டும் 64 பிண்டங்கள் என்று சொல்லப்படுகிறது. தாய்க்கு ஒவ்வொன்றாக பிண்டங்கள் வைக்கும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் பொருளைக் கேட்டால் கல்நெஞ்சும் கரைந்துவிடும். உணர்வுப்பூர்வமான சிலவற்றை அறிவோம்.

அம்மா, உனக்கு முதல் பிண்டம்- கர்ப்பத்தின் காரணமாக மேடு பள்ளங்களில் நீ பட்ட வேதனைக்காக.
இரண்டாவது பிண்டம் - ஒவ்வொரு மாதத்திலும் கர்ப்பம் ஏற்பட்டது முதல் வளர்ச்சி அடையும்போது வலி, வாந்தி, என்று வேதனையால் வருந்தியதற்காக.
மூன்றாவது பிண்டம் - கர்ப்பவாசகத்தின்போது உன் வயிற்றில் நான் கால்களால் உதைத்து துன்பப்படுத்தியதற்காக.
நான்காவது பிண்டம் - கர்ப்பக்காலத்தில் உனக்கு ஏற்பட்ட மூர்ச்சை, ஆயாசம் ஆகியவற்றால் நீ பட்ட துன்பத்திற்காக. என்னை கர்ப்பத்தில் சுமந்தபோது, வியாதிகள் என்னை பீடிக்காமல் இருக்க நீ கசப்பான மருந்துகளை சாப்பிட்டாய். அதற்கு நான் காரணமாக இருந்த பாவத்திற்காக ஐந்தாவது பிண்டம்.
பத்தாவது மாதத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காக ஆறாவது பிண்டம்.
என்னை பிரசவித்தபிறகு மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி உன்னை ஜடராக்னியில் கொடுமைக்கு ஆளாக்கிய பாவத்திற்காக ஏழாவது பிண்டம். இரவில் உன் ஆடைகளை மலம், சிறுநீரால் அசுத்தம் செய்த பாவத்துக்காக எட்டாவது பிண்டம்.
அல்லும் பகலும் தாய்ப்பால் அருந்தும்போது உன்னை உறிஞ்சி துன்புறுத்தியதற்காக ஒன்பதாவது பிண்டம்.
கடுங்குளிரிலிருந்தும் தாங்கமுடியாத வெப்பத்திலிருந்தும் என்னை பொத்திப் பொத்திக் காப்பாற்றியதற்காக பத்தாவது பிண்டம்.
எனக்கு ஏற்பட்ட பசி, தாகங்களை பார்த்துப் பார்த்து, என்னைக் காக்க நீ பட்ட துன்பங்களுக்காக பதினோராவது பிண்டம்.
எனக்கு நோய் ஏற்பட்டால் நீ வாடிவதங்கி துடித்துப் போவாயே, அந்த சிரமத்தை நான் கொடுத்ததற்காக இந்த பன்னிரண்டாவது பிண்டம்.
இப்படி பலவிதமாகச் சொல்லி தாய்க்கு பிண்டம் வைக்கிறார்கள்.

பண்டரிபுரம் என்னும் தலத்தில் புண்டரீகன் என்பவன், தனது வயதான பெற்றோருக்கு ஆத்மார்த்தமாகப் பணிவிடை செய்து வந்தான். இதையறிந்த பரமாத்மாவான பண்டரிநாதன் அவனுக்கு அருள்புரிய அவன் இல்லத்துக்கே சென்றார். அப்போது புண்டரீகன் தன் தாயை மடியில் கிடத்தி விசிறிக் கொண்டிருந்தான். வாசலுக்கு வெளிய இருந்தபடி பண்டரிநாதன், புண்டரீகா, நீ உன் தாய், தந்தையருக்கு செய்துவரும் சேவையைக் கண்டு மகிழ்ந்து உனக்கு தரிசனம் தர உன்னைத் தேடிவந்துள்ளேன் என்றார். இறைவனின் குரலைக் கேட்டும்கூட தாயைக் கீழே இறக்காமல், பிரபுவே என்னால் இப்போது எழுந்துவர இயலாது என்று சொல்லி, ஒரு செங்கல்லை எடுத்து வெளியே தூக்கிப்போட்டு, இந்தக் கல்லின் மேல் இருங்கள் என்றான். பகவான் மனம் பூரித்து, அப்பா புண்டரீகா, நீ பெற்றோர்களுக்குச் செய்யும் பணிவிடைகளைக் கண்டும் உனக்கு வரம் எதும் கொடுக்காமல் போனால் நான் உன்னிடம் கடன் பட்டவனாகி விடுவேன். உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

சுவாமி, நீங்கள் இந்த இடத்திலேயே இருந்து எல்லாருக்கும் எப்போதும் தரிசனம் தரவேண்டும் என்று வேண்டினான். அதன்படியே பாண்டுரங்கன் அங்கேயே எழுந்தருளி, இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தருளுகிறான். பண்டரிபுரத்திலுள்ள விட்டலன் சிற்பியால் செதுக்கப்பட்டவரல்ல. தாய்-தந்தை மீது பக்திசெலுத்திய ஒரு அன்பனுக்காக பகவான் கட்டுப்பட்டுள்ளார். முழுமுதற்கடவுளாகிய விநாயகர் பெற்றோரான பார்வதி - பரமேஸ்வரனை வலம்வந்து, தாய்- தந்தையே உலகமென்று உணர்த்திய நிகழ்ச்சி யாவரும் அறிந்ததே.

இறைவனிடம் எல்லையில்லாத அன்பு கொண்ட அருளாளர்கள் பாடும்போது, அம்மையே அப்பா என்றுதான் தாயின் முத்திரையை வைத்து அழைக்கிறார்கள். தாயை ஆதரிக்காமல் அவமானப்படுத்துபவன் கால சூத்திரம் என்ற கொடிய நரகத்திற்குப் போவான் என்று புராணங்கள் சொல்கின்றன. குபுத்ரோ ஜாயேத த்வசிதபி குமாதா ந பவதி என்பது ஸ்மிருதி வாக்யம். கெட்ட பிள்ளைகள் உலகத்தில் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் கெட்டதாய் இருக்கவே மாட்டாள் என்று இதற்குப் பொருள். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியின் அருளில் தன்னை மறந்திருந்த போதிலும், தன் தாயை ஒருபோதும் பராமரிக்கத் தவறியதில்லை. நாம் மகாத்மாவாகப் போற்றும் காந்தியடிகள், அவ்வாறுதான் உயர்ந்துவரக் காரணம் தன் தாயே என்று சொல்கிறார். என் அன்னையின் செல்வாக்கினால் தான் எனது பண்புகளும், இலக்கிய ரசனைகளும் வளர்ந்தன என்கிறான் மாவீரன் நெப்போலியன்.

நிலத்தடி, நீர்போல், தெய்வம் தன் தாயை வணங்குவோருக்கே தரிசனம் தருகிறது. பெற்ற தாய், தந்தையரை வயதான காலத்தில் அன்புடன் ஆதரித்தால், அந்த இல்லத்தின் வாசலில் இறைவனே நின்று அருள்புரிகிறாள் என்பது சத்தியம். மகனின் மடியில் தாயின் ஜீவ சலனம் நிறைவு பெறுகிறதென்றால், அந்த மகன் மிகப்பெரிய பாக்கியவான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar