|
சோலைகள் சூழ்ந்த பைடனிபுரம் நகரத்தில் பக்தியில் சிறந்த சூரியநாராயணர் என்ற பெரியவர் வசித்தார். தினமும், சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் படித்த பின்னரே தமது அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். தனக்கு பிறந்த குழந்தைக்கு ‘பானு’ என்று பெயரிட்டு வளர்த்தார். ‘பானு’ என்றால் ‘சூரியன்’. பானுவுக்கு ஏழு வயதானதும், உபநயனம் என்னும் பூணுõல் கல்யாணம் நடத்தினார். அவன் தன் தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் பாடங்களைப் படிப்பான். ஒருமுறை சரியாகப் படிக்காததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற சூரியநாராயணர் பானுவை நையப் புடைத்து விட்டார். மனவருத்தத்தாலும், அப்பாவுக்கு பயந்ததாலும் பானு ஊரை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று விட்டான். பசி வாட்டியது. சோர்வுற்ற பானு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியபகவானின் கோவிலாக இருந்தது. அவரை வணங்கிய பானு, “பகவானே! வீட்டில் பெற்றோர் அடிக்குப் பயந்து வெளியேறி விட்டேன்/ இப்போது உன்னைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. உன்னையே சரணடைந்து விட்டேன். என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று மனமுருக வேண்டினான்.
அவனது உருக்கமான பிரார்த்தனையைக் கேட்டு மனம் இளகிய சூரியபகவான், ஒரு அந்தணர் வடிவத்தில் பானுவின் முன் காட்சியளித்தார். அவரின் ஒளிவீசும் முகத்தைக் கண்ட பானு வியந்து போனான். “ஐயனே! எனக்கு வேதபாடங்கள் மனதில் பதியவில்லை. தாங்கள் தான் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். சூரியன் அவனிடம்,“குழந்தாய்! இனி உன்னை யாரும் அடிக்க மாட்டார்கள். இன்று முதல் உனக்கு எல்லா வித்தைகளும் எளிதாக கைகூடும். பாண்டுரங்கனின் புகழ் பாடி அவர் மீது பக்தி செலுத்து,” என்று கூறி ஒரு மகாமந்திரத்தை உபதேசித்தார். மகிழ்ச்சியுடன் பானு வீடு திரும்பினான். காட்டில் நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தான். காலம் உருண்டோட பானு இளைஞரானார். சூரிய பகவானின் வரத்தின்படி வேதத்தில் சிறந்து விளங்கினார். அவரது பக்தியையும் அறிவையும் கண்ட அனைவரும் ‘பானுதாசர்’ என்று மரியாதையுடன் அழைத்தனர். மகனுக்கு பெற்றோர் திருமணம் நடத்தினர். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிள்ளைக்கு தந்தையின் பெயரான ‘சூரியநாராயணன்’ என்று பெயரிட்டார் பானு. சிலநாட்கள் கழித்து பானுதாசரின் மனம் குடும்ப வாழ்வில் ஈடுபடவில்லை. கடவுளுக்கு தொண்டு செய்வதே தன் கடமை என்று நினைத்தார். இதனிடையே குடும்பச்செலவு வேறு வாட்ட, உறவினர்களான சில வியாபாரிகள் பானுதாசரின் கஷ்டம் தீர சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்ததனர்.
‘உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லி விற்க வேண்டும்,” என்று அறிவுறுத்தினர். கடையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பானு, உறவினர்கள் சொன்னது போல் நடக்காமல், உண்மையைப் பேசி நியாயமான விலைக்கு விற்றார். இதனால், மக்களும் துணி வாங்க பானுதாசரின் கடையில் குவிந்தனர். இவரது விற்பனை பெருகியதால், மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை மந்தமானது. உறவினர்களும் கடையையும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. “யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டது போல, நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டோமே!” என்று எண்ணி வருந்தினர். பானுதாசரின் முன்னேற்றம் கண்டு அவர் மீது பொறமையும் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்ட எல்லா வியாபாரிகளும் கூடிப்பேசினர். ஒருநாள் பானுதாசர் உள்ளிட்ட எல்லாரும் குதிரைகளின் மீது சரக்கேற்றிக் கொண்டு வெளியூர் வியாபாரத்துக்கு புறப்பட்டனர். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும் போது இருட்டத் தொடங்கியது. எல்லாரும் அந்த கிராமத்தில் தங்கினர். அங்கிருந்த கோவிலில் ஹரிதாசர் என்பவரின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அதை கேட்க விரும்பிய பானுதாசர், தன் சரக்குகளையும், குதிரையையும் தான் வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சென்று விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள், பானுதாசரின் பொருள் அனைத்தையும் ஒரு பாழும் கிணற்றில் போட்டனர்.
அவருடைய குதிரையையும் விரட்டி விட்டனர்.பானுதாசரிடம் பொருட்கள் களவு போய் விட்டதாக சொல்லி விடலாம் என நினைத்திருந்த வேளையில். உண்மையாகவே ஒரு கொள்ளையர் கூட்டம் வியாபாரிகளைச் சூழ்ந்து விட்டது. அவர்களுடைய பணம், உடமை அனைத்தும் பறி போனது. பானுதாசரின் பொருட்கள் மட்டும் கிணற்றுக்குள் பாதுகாப்பாக கிடந்தது. சொற்பொழிவு முடிந்ததும் பானுதாசர் வியாபாரிகள் இருந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், “ஐயா! இந்தாருங்கள். உங்களின் குதிரை!” என்று சொல்லி அவரிடம் கடிவாளத்தைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டான். “கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது? கொடுத்துச் சென்ற மனிதர் யார்?” என்ற சிந்தனை மனதில் எழுவதற்குள்ளாகவே வந்தவர் மாயமாக மறைந்து விட்டார். குழப்பத்துடன் வந்த பானுதாசரிடம் வியாபாரிகள் அனைவரும் அழுதனர். நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டனர். அவர்களிடம் பானுதாசர், “ஐயா! நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். கிணற்றில் பத்திரமாக இருக்கும் பொருட்களை நீங்கள் அனைவரும் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார். அத்துடன் வியாபாரத்தை விட்டுவிட்டு, பக்தியில் முழுமையாக மனதைச் செலுத்தினார். பஜனை, தியானம், நாமசங்கீர்த்தனம் என வாழ்நாளைக் கழித்தார். பக்தியில் சிறந்த அவரைக் கடவுள் தன் திருவடியில் ஏற்றுக் கொண்டார். |
|
|
|