|
கங்கையில் நீராடி விட்டு காசி விஸ்வநாதரைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். துறவி ஒருவரும் அந்த கூட்டத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் நின்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய அழுக்கு ஆடை தவறுதலாக துறவியின் மீது பட்டு விட்டது. கோபமடைந்த துறவி கையில் இருந்த தடியால் அவனை ஓங்கி அடித்தார். “ சண்டாளப்பாவி...! அபச்சாரம் செய்து விட்டாயே. உன்னால் நான் மீண்டும் ஒருமுறை கங்கைக்கு சென்று நீராட வேண்டுமே” என்று கோபமாக கத்தினார். “உங்களால் நானும் கட்டாயம் கங்கையில் இன்று குளித்தாக வேண்டும்,” என்றான் பிச்சைக்காரன். “என்னடா உளறுகிறாய்...துறவியான என் ஸ்பரிசம் உன் மீது பட்டதால் நீ புண்ணியம் தானே பெற்றாய்...!” என்று பெருமையாகச் சொன்னார் துறவி. அதற்கு அவன், “ அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என்னை சண்டாளப்பாவி என்று திட்டினீர்களே...! உங்கள் மனதில் கோபம் என்னும் கொடிய சண்டாளன் குடி கொண்டிருக்கிறானே! அதனால் தானே என்னை தடியால் அடித்தீர்கள். ஒருவர் மனதில் என்ன உணர்வு இருக்கிறதோ, அதுவே எதிராளியைப் பாதிக்கிறது. அந்த பாதிப்பால் எனக்கும் கோபம் வந்து நாலு பேரை நிந்திக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கோபம் என்னும் பாவி என்னை அண்டாமலிருக்க கங்கையில் நீராட வேண்டும்,” என்றான். அவன் கூறிய வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த துறவி பிச்சைக்காரனிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் ஒருமுறை கங்கையில் நீராடி, இனி கோபமே கொள்வதில்லை என உறுதி செய்து கொண்டார். |
|
|
|