|
ஒருநாள் நாரதர் பிரம்மாவைக் காண அவரது இருப்பிடமான சத்தியலோகம் சென்றார். பிரம்மா அவரிடம், “நாரதா! உலகிலேயே அதிசயமான செயல் எது?” என்று கேட்டார். நாரதரும், “ தந்தையே... பிறக்கும் எல்லா உயிர்களும் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி. இதை நன்றாக அறிந்திருந்தும் மனிதன் இறப்பைக் கண்டு அழுது புலம்புகிறான். செத்த பிணத்தைப் பார்த்து சாகப் போகும் பிணங்கள் அழுவது தான் அதிசயமான செயல்,” என்று பதில் அளித்தார். “ நன்றாகச் சொன்னாய் நாரதா... ஆனால் இதையும் விட அதிசயமான ஒன்று இந்த உலகில் நடக்கிறது. அதுபற்றி யோசித்து சொல்லேன்!” என்றார் பிரம்மா. உடனே நாரதர்,“பாவம் செய்தால் தீமை உண்டாகும் என்பது தெரிந்திருந்தும், மனிதன் தயங்காமல் பாவச் செயலில் துணிந்து ஈடுபடுகிறான். இன்று அனுபவிக்கும் சுகபோகம் எல்லாம் எப்போதோ முற்பிறவியில் தேடிய புண்ணியத்தின் பலன் என்பதை அறிந்தும், நல்ல செயல்களில் ஈடுபட தயங்குகிறான். இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் பூலோகமே ஒரு அதிசயம் தான்! ” என்று விளக்கினார். இதைக் கேட்ட பிரம்மா, “சபாஷ் நாரதா! நீ கலகக்காரன் இல்லை.... நல்ல சமத்துக்காரன்,” என்று பாராட்டினார். |
|
|
|