|
இளைஞர்கள் சிலர் புத்தரிடம் சந்நியாச பயிற்சி கற்று முடித்தனர். தன்னிடம் பெற்ற ஆன்மிக ஞானத்தை, தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு கற்றுத் தர அறிவுறுத்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியை ஒதுக்கினார். சீடர்களும் அவர் குறிப்பிட்ட ஊர்களுக்கு புறப்பட்டனர். பூர்ணகாஷ்யபா என்ற சீடருக்கு மட்டும் எங்கு செல்ல வேண்டும் என்று புத்தர் சொல்லவில்லை. உடனே அவர், “சுவாமி! நான் எங்கு செல்ல வேண்டும் என சொல்லவில்லையே?” என்றார் “நீயே அதை தேர்ந்தெடுத்துக் கொள்” என்ற புத்தர் அவரைப் பார்த்து புன்னகைத்தார் ஆன்மிகத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மலைப்பகுதி ஒன்றின் பெயரைச் சொன்ன காஷ்யபா, அங்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.அதைக் கேட்டு புத்தரின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. “அங்கே உன்னால் பணியாற்ற முடியுமா? அங்குள்ள மக்கள் பொல்லாதவர்கள் ஆயிற்றே. சாந்தம் என்பதே இல்லாத அவர்கள் எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்குபவர்கள். தெரியுமா?...” என்றார். பூர்ணகாஷ்யபா,“சுவாமி! அதுகண்டு நான் பயப்படவோ, தயங்கவோ இல்லை” என்று தெளிவுபடுத்தினார் காஷ்யபர். “
ஓ! அப்படியா! என் கேள்விகளுக்கு பதில் சொல். அப்புறம் அங்கு செல்வது பற்றி யோசிக்கலாம்” என்றார் புத்தர்.“சரி சுவாமி” என்று தலையசைத்தார் பூர்ணகாஷ்யபா. “ அங்குள்ள மக்கள், உன்னை வரவேற்பதற்கு பதிலாக அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?” என்றார் புத்தர்.“ மகிழ்ச்சியில் திளைப்பேன். அடிக்கவோ, உதைக்கவோ செய்தால் தானே வலிக்கும்.திட்டுவதோடு நிறுத்திக் கொண்டால் அவர்களை நல்லவர்கள் என்றே எண்ணிக் கொள்வேன்,” என பதிலளித்தார் பூர்ணகாஷ்யபா. “ஒருவேளை உன்னை உதைப்பார்கள் என்று வைத்துக் கொள். உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று புத்தர் மடக்கினார்.“கொல்லவில்லையே சுவாமி... அடித்து காயப்படுத்தி விட்டதோடு நிறுத்திக் கொண்டார்களே... என்று சமாதானம் ஆகி விடுவேன்” என்றார் காஷ்யபர்.“சரி.... முரட்டுத்தனமான அவர்கள் ஒருவேளை உன்னைக் கொன்று விட்டால் உன் நிலை என்னாகும் என்று யோசித்துப்பார்.....” என்று மூன்றாவதாக ஒரு கேள்வி கேட்டார் புத்தர்.“ஆஹா... அதை விடவும் ஆனந்தம் வேறு என்ன இருக்க முடியும். மொத்தத்தில் எனக்கு உலக பந்தத்தில் இருந்து விடுதலையே கிடைத்து விட்டதாக கருதுவேன். இனி எதைப் பற்றிய கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று முடிவுக்கு வருவேன்” என்றார் பூர்ணகாஷ்யபா.“சந்நியாசப் பயிற்சியில் நன்றாகத் தேறி விட்டாய். உலகையே வெற்றி கொள்ளப் பிறந்த உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது. இந்த மலைப்பகுதி மட்டுமல்லாமல், நாட்டின் எந்தப்பகுதிக்கு செல்வதற்கும் தேவையான மனப்பக்குவத்தை நீ அடைந்து விட்டாய். உடனடியாக அங்கு புறப்படு. சரிவர கடமையாற்றி வெற்றியை சொந்தமாக்கி கொள்” என்று வாழ்த்தி வழியனுப்பினார் புத்தர். |
|
|
|