|
முன்னொரு காலத்தில், உப்பிலிபாளையம் என்ற ஊரில் எத்திராசன் என்ற செல்வந்தன் இருந்தான். அவன் மிகவும் பணத்தாசை பிடித்தவன். அந்த ஊருக்கு கிழக்குப் பக்கம் உள்ள நிலத்தில் குட்டிப் பேய் ஒன்று வசித்து வந்தது. அது அவ்வளவு எளிதில் யார் கண்ணிலும் படாது. அதற்கு புதையல் இருக்கும் ரகசிய இடம் தெரியும். இந்தச் செய்தியை அறிந்த எத்திராசன், ’அந்த பேயை பிடித்து விட்டால் போதும், விலை மதிப்பற்ற புதையல் இருக்கும் இடத்தை அது காட்டும். அதன்பிறகு, நான் தான் இந்த நாட்டிலேயே பெரிய செல்வந்தன். அந்தப் பேய் மிகுந்த அறிவுக்கூர்மை உடையது. யாரையும் எளிதில் ஏமாற்றி விடும். மிகவும் கவனமாக இருந்தால்தான் அதனிடம் இருந்து புதையலைப் பெற முடியும்’ என்று நினைத்தான். பேயைத் தேடி அந்த நிலப்பகுதிக்குச் சென்றான். இரவு, பகல் பாராது அங்கேயே அலைந்து திரிந்தான். இப்படியே சில மாதங்கள் சென்றன-. அந்தப் பேய் புதர் அருகே இருப்பதைப் பார்த்த எத்திராசன், ஓடிச்சென்று அதைப் பிடித்து கொண்டான். ’ஐயோ! இவனிடம் மாட்டிக் கொண்டோமே... தப்பிக்க வழி இல்லையே...’ என்று நினைத்தது பேய். ”என்னை விட்டுவிடு,” என்று கெஞ்சியது பேய். ”புதையல் இருக்கும் இடத்தைக் காட்டு,” என்றான் எத்திராசன். ”அப்படிக் காட்டினால் என்னை விட்டு விடுவாயா?” என்று கேட்டது பேய். ”விட்டு விடுகிறேன்,” என்றான்.
அவனை வெள்ளரித் தோட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றது பேய். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அந்தத் தோட்டம் இருந்தது. அங்கே ஆயிரக்கணக்கான வெள்ளரிக் காய்கள் காய்த்திருந்தன. ஒரு வெள்ளரிக் காயைக் காட்டி, ”இதன் அடியில் புதையல் உள்ளது. நான் இப்போது போகலாமா?” என்று கேட்டது பேய். ’மண் வெட்டி இருந்தால்தான் அந்த இடத்தைத் தோண்ட முடியும். புதையலை எடுக்க முடியும். வீட்டிற்குச் சென்று மண் வெட்டி எடுத்து வருவோம்’ என்று நினைத்தான் எத்திராசன். ’இந்தப் பேய் எல்லாரையும் ஏமாற்றி விடுமே. என்னையும் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் எத்திராசன். ”பேயே! நான் வீட்டிற்குச் சென்று மண் வெட்டியுடன் வருகிறேன். அதுவரை நீ புதையலுக்கு காவலாக இரு. என்னைப் பார்த்ததும் நீ இங்கிருந்து சென்று விடலாம்,” என்றான். ”அப்படியே செய்கிறேன்,” என்றது பேய். அருகில் இருந்து புல்லைப் பிடுங்கினான் எத்திராசன். புதையல் இருக்கும் இடத்திற்கு அடையாளமாக, அந்த வெள்ளரிக்காயில் புல்லைக் கட்டினான். ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு வந்த எத்திராசன், மண் வெட்டியை எடுத்தபடி மீண்டும் மூச்சிறைக்க அந்த நிலத்தை அடைந்தான். அங்கே அந்தப் பேய் அவனுக்காக வரப்பிலேயே காத்திருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு உயிர் வந்தது.
அது தன்னை ஏமாற்றவில்லை என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். ”இப்போது நான் போகலாமா?” என்று கேட்டது பேய். அதன் சூழ்ச்சியை அவன் அறியவில்லை. ”போய்த் தொலை,” என்றான். அங்கிருந்து ஓடி மறைந்தது பேய். அது சென்ற பிறகு, வெள்ளரித் தோட்டத்தைப் பார்த்த அவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான வெள்ளரிக் காய்களிலும் புல் கட்டப்பட்டு இருந்தது. எல்லாப் புல்லும் ஒன்று போலவே இருந்தன. ஒவ்வொரு வெள்ளரிக்காயாக அவன் பார்த்தபடியே வந்தான். அவன் எதில் புல் கட்டினான் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய நிலத்தையும் தோண்டுவது இயலாத செயல் என்பது அவனுக்குப் புரிந்தது. பேய் தன்னை ஏமாற்றி விட்டதை அப்போதுதான் உணர்ந்தான். ஏமாற்றத்தோடு வீட்டை நோக்கி சென்றான் முட்டாள் எத்திராசன்.
|
|
|
|