|
வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த சிறுவன் சத்யவிரதனுக்கு கல்வி சிறிதும் கைகூடவில்லை. பலரது கேலிக்கு ஆளான அவன், வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறினான். காட்டு வழியில் விலங்குகளின் சத்தம் அவனைப் பயமுறுத்த, மயக்கமடைந்தான். அங்கு ஆசிரமம் அமைத்திருந்த மகரிஷி ஒருவர், சிறுவனைக் கண்டு மூர்ச்சை தெளிவித்தார். விஷயமறிந்த அவர், கல்விஞானம் பெற கலைவாணியை நோக்கி தவம் செய். இனி எக்காரணத்திற்காகவும் பொய் பேசாதே! என்று கூறினார். சிறுவனும் அவ்வாறே இருக்கலானான். ஒருநாள் வேடன் ஒருவன் புலியை துரத்தி வந்தான். அந்தப்புலி, சத்யவிரதன் நின்றிருந்த இடத்துக்கு அருகிலுள்ள புதரில் ஓடி ஒளிந்துகொண்டது.
புலியைத் துரத்தி வந்த வேடன், இந்தப் பக்கம் ஒரு புலி வந்ததே... பார்த்தீர்களா? என சத்யவிரதனிடம் கேட்டான். பார்த்தேன் என்றால் வேடன், <புலியைக் கொன்றுவிடுவான். பார்க்கவில்லை என பொய் சொன்னால், அவன் சத்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படும். ஆகவே மவுனம் சாதித்தான். வேடன், உண்மையைக் கூறாவிடில் உன்னைக் கொன்றுவிடுவேன். என மிரட்ட கதிகலங்கிய சத்யவிரதன் பேச வார்த்தைகள் எழாது, ஐ.....ம்....ஐ....ம்..ஐ....ம் என்று குழறினான். ஐம் என்பது கலைவாணியின் மூலமந்திரம். அது கலைவாணியின் காதுகளில் விழ, சரஸ்வதி அங்கே தோன்றினாள். வேடனும் புலியும் மறைந்து, அங்கே சிவசக்தி தோன்றி ஆசியளித்தனர். கலைமகள், சத்யவிரதனுக்கு பிரம்ம ரகசியமான ஸ்ரீவித்யா மூல மந்திரத்தை உபதேசித்து அருளினாள். அதனால் சகல ஞானங்களும் பெற்று அறிவாளியானான், சத்யவிரதன்.
|
|
|
|