|
ராமானுஜரின் சீடர்களுள் வடுகநம்பிக்கு ஒரு தனியிடம் உண்டு. குருபக்திக்கு மறுபெயர் வடுகநம்பி என்பர். உடையவரின் பாதரட்சைகளையே திருவாராதனப் பொருளாக மதித்துப் போற்றிய அவர், குருநாதருக்குப் பால் காய்ச்சிக் கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இவர் ராமானுஜருடன் யாத்திரை செய்யும் சமயங்களில், உடையவர் பெருமாளைச் சேவித்தால், வடுக நம்பி அந்தப் பெருமாளைச் சேவிக்காமல் தமது குருவான ராமானுஜரின் திருமேனியையே பார்த்துக்கொண்டிருப்பார். ஒரு சமயம் ராமானுஜர், தொண்டரப்பொடியாழ்வாரின் வாக்கான, பவள வாய் கமலச் செங்கண் என்பதை நினைவூட்டி, அந்தக் கமலக் கண்ணழகைப் பார். பார்க்கப் பார்க்கப் பரவசமே! என்று வடுக நம்பியிடம் கூறினார்.
ராமானுஜரின் கண்ணழகையே பார்த்துக் கொண்டிருந்த வடுக நம்பி, என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று திருப்பாணழ்வார் வாக்கினால் குருவுக்கு பதில் கூறிவிட்டார். மற்றொரு சமயம், வடுகநம்பி, ராமானுஜருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தபோது பெருமாள் கருட வாகனத்தில் வீதிவலம் வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட ராமானுஜர், வடுக நம்பி, பெருமாள் திவ்ய அலங்கார சொரூபராக பவனி வருகிறார். சீக்கிரம் பெருமாளைச் சேவிக்கவாரும்! என்றழைத்தார். அதற்கு வடுக நம்பி, இப்போது நான் வருவதற்கில்லை சுவாமி. உம்முடைய பெருமாளைச் சேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குக் காய்ச்சுகிற பால் பொங்கி விடும்! என்று பதிலுரைத்தார். எம்பெருமானார் ராமானுஜர், வடுகநம்பியின் குருபக்தியை நினைத்துத் திகைத்துவிட்டார். |
|
|
|