|
பகவான் கிருஷ்ணர், வேதாந்த தியானத்தின் பலன்களைக் குறித்து அர்ஜுனனுக்கு உபதேசித்து வருகிறார். வேதாந்தத்தின் உள்ளார்ந்த கருத்தில் உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது தாரணை. நெய் ஒழுக்குப்போல மனதை அதிலேயே நிலைநிறுத்துதல் தியானம். மெய்ப்பொருள் தத்துவத்திலேயே ஆழந்திருப்பது ஸமாதி. அதாவது, வேதாந்த சாஸ்த்ரத்தை முறையாகக் கற்று, உள்வாங்கி, ஐயம் தெளிந்து, மெய்ப்பொருளாகவே தன்னை உணர்ந்து, மெய்ப்பொருள் தத்துவத்தில் நிலைத்திருப்பதே ஸமாதி. இதுவரை நிர்விகல்ப ஸமாதியின் பயன் பல்வேறு கோணங்களில் விளக்கப்பட்டது. முதலாவது, சித்த உபரமம் - மனம் மிகுந்த அமைதியில் ஆழ்ந்திருப்பது. இரண்டாவது, ஆத்ம தரிசனம் - தன்னுடைய உண்மை இயல்பை உணர்ந்து ஏற்றுக்கொள்வது மூன்றாவது, ஆத்யந்திகம் ஸுகம் - வரையறையற்ற இன்பத்தைத் தன் இயல்பாகப் புரிந்துகொள்ளுதல். நான்காவது, தத்துவ நிஷ்டை - தன்னுடைய உண்மை இயல்பிலிருந்து பிறழாதிருத்தல். அடுத்து, மேலும் இரண்டு கோணங்களில் ஸமாதி விளக்கப்படுகிறது.
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: யஸ்மிந் ஸ்திதோ ந து: க்கேந குருணாபி விசால்யதே
(ஸ்ரீமத் பகவத்கீதை 6-22)
எதனை உணர்ந்த பிறகு, அதைக் காட்டிலும் உயர்வாக அடைய வேண்டியது வேறொன்றும் இல்லையோ, எத்தகைய உயர்ந்த மெய்யறிவில் நிலைநிற்கும்போது, மிகப்பெரிய துன்பங்களில்கூட ஒருவர் கலக்கமடைவதில்லையோ அதுவே ஸமாதியாகும். இந்தச் சுலோகத்தில் மேலும் ஸமாதியின் இரண்டு பயன்கள் கூறப்படுகின்றன. அதாவது, ஆத்யந்திக லாபம், ஆத்யந்திக துக்க நிவ்ருத்தி, வாழ்வில் அடைய வேண்டியவற்றிலெல்லாம் மிக உயர்ந்த லாபம், துன்பங்களிலிருந்து முழுமையான விடுதலை. தன்னை பூரணத் தன்மையுடைய மெய்ப்பொருளாக உணர்ந்தவர், எங்கும் நிறைவையே காண்கிறார். அவர் வாழ்வில் எதையுமே குறையாகக் கருதுவதில்லை. குறைவிலா நிறைவாகத் தன்னை உணர்ந்தவர், தன்னையே எங்கும் காண்கிறார். இப்பூரணத் தன்மையை உணர்ந்த பிறகு, வாழ்வில் எதையும் இழந்ததாக ஒருவர் கருதுவதில்லை. புண்ணியவசத்தால் வாழ்வில் எவற்றையெல்லாம் அனுபவிக்க நேரிடுகிறதோ அவற்றை மெய்யறிவாளர் அனுபவிக்கிறார். ஆனால் அந்த இன்பங்கள் இல்லாத போது, அவற்றுக்காக ஒருபொழுதும் அவர் ஏங்குவதில்லை.
ஞானத்துக்கு ஈடு ஞாலத்தில் இல்லை என்பார்கள். தெளிந்த மெய்யறிவைப் பெற்று, மெய்ப்பொருளாகத் தன்னை உணர்வதே வாழ்வின் அறுதிக் குறிக்கோள். அதனை அடைந்த பிறகு, தன்னை உணர்ந்த பிறகு, வாழ்வில் ஒருவர் அடைய வேண்டியது, ஸாதிக்க வேண்டியது பிறிதொன்றுமில்லை. உணர வேண்டிய உண்மையை உணர்ந்த பிறகு, வாழ்வில் எது கிடைத்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக, நாள்தோறும் சிறுவயது முதலே பேருந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடிய ஒருவருக்கு என்றோ ஒருநாள் அதிர்ஷ்டவசமாக காரில் பயணிக்கின்ற வாய்ப்பு கிடைக்கின்றபோது, அவர் மகிழ்வார். ஆனால், மறுநாளும் அவ்வாறே கிடைக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கமாட்டார். அதுபோல, மெய்யறிவாளர், கிடைத்தவற்றில் இன்புறுகிறார். ஆனால், எதற்காகவும் அவர் ஏங்குவதில்லை. ஆனால், சிறுவயது முதலே காரில் பயணிக்கின்ற ஒருவருக்கு, ஒருநாள் அது இல்லாவிட்டாலும் அவர் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார். அதைபோன்ற நிலை மெய்யறிவாளருக்கு ஏற்படுவதில்லை.
அதேபோன்று, மெய்யறிவாளர் எதிலும் கலக்க மடைவதில்லை. எதன்பொருட்டும் அதிர்ச்சியடைவதில்லை. அநாத்மாவில் ஏற்படும் எத்தகைய மாற்றங்களும் எள்ளளவேனும் அவரைப் பாதிப்பதில்லை. வாழ்வில் முழுமையாக துன்பத்திலிருந்து விடுதலையை உணர்பவர் மெய்யறிவாளர் ஒருவரே. வாழ்வின் பல்வேறு துன்பங்களில் சிக்குண்டு, அவ்வப்போது சிறுசிறு இன்பத்தின் கீற்றுக்களை மட்டும் அனுபவித்து அல்லலுறுகிறான் மனிதன். துன்பம் கலவாத, வரையறைகள் அற்ற, அடிமைப் படுத்தாத பேரின்பத்தின் ஊற்றாகத் தன்னை உணர்கின்ற மெய்யறிவாளர், உலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களால் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. இது ஞானத்தின் முக்கியமான பலனாகும். |
|
|
|